எஸ். பி. பாலசுப்பிரமணியம் (4 ஆனி, 1946 – 25 புரட்டாசி, 2020), இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகரும், இசையமைப்பாளரும், நடிகரும், தயாரிப்பாளரும் ஆவார். இவர் எஸ்.பி.பி. (SPB) என்ற முன்னெழுத்துகளாலும் எஸ். பி. பாலு என்றும் பரவலாக அறியப்படுகிறார். இவர் தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி மற்றும் மலையாளத் திரைப்படங்களில் அதிகமாகப் பணியாற்றியுள்ளார். 1966 முதல் திரைப்படங்களில் பாடத் தொடங்கி, 40,000 இற்கும் அதிகமான பாடல்களை 16 இந்திய மொழிகளில் பாடியுள்ளார்.
இவர் கன்னடம், தெலுங்கு, தமிழ், இந்தி மொழிகளில் ஆறு சிறந்த ஆண் பின்னணிப் பாடகருக்கான தேசியத் திரைப்பட விருதுகளையும்; ஆந்திர மாநிலத்தின் 25 நந்தி விருதுகளையும், மற்றும் பல கருநாடக, தமிழ்நாடு அரசு விருதுகளையும் பெற்றுள்ளார். அத்துடன், பிலிம்பேர் விருது, ஆறு தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் ஆகியவற்றையும் வென்றுள்ளார். உலக அளவில் அதிக எண்ணிக்கையிலான பாடல்களைப் பாடியதற்காக கின்னஸ் உலக சாதனைகள் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். 2012 ஆம் ஆண்டில், இந்தியத் திரைத்துறைப் பங்களிப்புகளுக்காக என்.டி.ஆர் தேசிய விருது இவருக்கு வழங்கப்பட்டது. 2016 ஆம் ஆண்டில் இந்தியத் திரைப்பட ஆளுமைக்கான வெள்ளி மயில் விருது வழங்கப்பட்டது. இந்திய அரசு இவருக்கு பத்மசிறீ (2001), பத்ம பூசண் (2011) விருதுகளையும் வழங்கிச் சிறப்பித்தது. சனவரி 2021இல் இவருக்கு இந்தியாவின் குடிமை விருதுகளில் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூசண் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
பாலசுப்பிரமணியம் 2020 செப்டம்பர் 25 இல் கோவிடு-19 தொற்றினால் பாதிக்கப்பட்டுக் காலமானார்.
ஆரம்ப வாழ்க்கை
பாலசுப்பிரமணியம், தெலுங்குக் குடும்பத்தை சேர்ந்த, எஸ். பி. சாம்பமூர்த்தி, சகுந்தலம்மா தம்பதியருக்கு மகனாக சென்னை மாகாணம், நெல்லூர் மாவட்டம், கொணடம்பேட்டை (இன்றைய ஆந்திரா மாநிலத்தில்) மாநிலத்தில் பிறந்தார். இவருடைய தந்தை சாம்பமூர்த்தி, அரிகதை காலட்சேபக் கலைஞர் ஆவார். இவருடன் பிறந்தவர்கள் இரண்டு சகோதரர்களும் ஐந்து சகோதரிகளும் இருக்கின்றனர். இவர்களில் பாடகி எஸ். பி. சைலஜா இளைய சகோதரி ஆவார். கன் எஸ். பி. பி. சரணும் பிரபலமான ஒரு பாடகரும், நடிகரும், தயாரிப்பாளரும் ஆவார்.
பாலசுப்பிரமணியம் இசை ஆர்வத்தை இளவயதிலேயே வளர்த்து, தன் தந்தை அரிகதை வாசிக்கும் பொழுது கவனித்து, ஆர்மோனியம், புல்லாங்குழல் போன்ற இசைக் கருவிகளை வாசிக்கவும் தேர்ச்சி பெற்றார். இவர் பொறியாளர் ஆக வேண்டும் என்ற நோக்கத்தோடு அனந்தபூர், ஜே.என்.டி.யு பொறியியல் கல்லூரியில் மாணவனாக சேர்ந்தார். குடற்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பாலசுப்பிரமணியம் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு சென்னையில் உள்ள பொறியியல் கல்லூரியில் சேர்ந்து படித்தார்.
இசையில் அதிக நாட்டம் கொண்ட பாலசுப்பிரமணியம், கல்லூரியில் படிக்கும் போதே பல பாடல் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளைப் பெற்றார். 1964 ஆம் ஆண்டு சென்னையை மையமாக கொண்ட தெலுங்கு கலாச்சார நிறுவனம் நடத்திய இசை நிகழ்ச்சியில் பாடி முதல் பரிசைப் பெற்றார். ஆரம்பகாலத்தில் மெல்லிசைக் குழு ஒன்று நடத்தி வந்தார். இக்குழுவில் அனிருத்தா (ஆர்மோனியம்), இளையராஜா (கிட்டார், ஆர்மோனியம்), பாஸ்கர், கங்கை அமரன் (கிட்டார்) போன்றோர் பங்குபற்றினர். இவர்களோடு சேர்ந்து எஸ்பிபி இசை நிகழ்ச்சிகளையும் நாடகக் கச்சேரிகளில் பாடல்கள் பாடுவதையும் வழக்கமாக கொண்டிருந்தார். எஸ் பி கோதண்டபாணி, கண்டசாலா ஆகியோர் நடுவராக இருந்து பங்குபெற்ற பாடல் போட்டியில் சிறந்த பாடகராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அடிக்கடி இசையமைப்பாளர்களை சந்திப்பதும், பாட வாய்ப்புக் கேட்பதுமாக இருந்த இவருக்கு முதல் போட்டி பாடல் பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடிய ‘நிலவே என்னிடம் நெருங்காதே’ என்ற பாடலாகும். பி.பி.ஸ்ரீனிவாஸ் இவருக்கு தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம், சமசுகிருதம், ஆங்கிலம், உருது போன்ற பல மொழிகளில் தனது பாடல்களை எழுதிக் கொடுத்துள்ளார்.
சாதனைகள்
2016 ஆம் ஆண்டு கோவாவில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவிடம் இந்திய திரைப்பட ஆளுமைக்கான வெள்ளி மயில் விருது வாங்கும் போது ௭ஸ் பி பாலசுப்பிரமணியம்
நாற்பதாயிரம் பாடல்களைப் பாடி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறார். ஆறு முறை சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதினைப் பெற்றிருக்கிறார். எஸ். பி. பி. முறையாக கர்நாடக இசையைப் பயின்றது இல்லை என்றாலும் சங்கராபரணம் என்ற படத்தில் கர்நாடக இசையில் அமைந்த பாடலுக்காக தேசிய விருது பெற்றார். இதுவரை தேசிய விருதினை நான்கு மொழிகளுக்குப் பெற்ற ஒரே திரைப்படப் பின்னணிப் பாடகர் இவர் ஒருவரே. பிலிம்பேர் விருதினை ஒரு முறையும் பிலிம்பேர் விருது (தெற்கு) மூன்று முறையும் பெற்றுள்ளார். மேலும் இவர் தமிழக மற்றும் கர்நாடக அரசுகளின் பல மாநில விருதுகளும் ஆந்திர அரசின் நந்தி விருதினை 25 முறையும் பெற்றார். இவர் 1981 ஆம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றிருக்கிறார். எஸ் பி பி எந்த பாடகரும் செய்யாத சாதனைகளை இந்திய திரையிசையில் செய்திருக்கிறார். இவர் 1981 ஆம் ஆண்டு பிப்ரவரி 8 ஆம் தேதி கர்நாடகா, பெங்களூரில் உள்ள பதிவரங்கில் காலை 9 மணியில் இருந்து இரவு 9 மணி வரை ஒரே நாளில் 21 பாடல்களை கன்னட மொழி இசையமைப்பாளர் உபேந்திர குமாருக்காக பாடி சாதனை செய்துள்ளார். மேலும் தமிழ் மொழியில் 19 பாடல்களையும் (ஒரேநாளில்), இந்தி மொழியில் 16 பாடல்களையும் (6மணி நேரத்தில்) பாடி சாதனை செய்திருக்கிறார். இவைகளெல்லாம் இவருடைய குறிப்பிடத்தக்க சாதனைகளாகும்.
இவர் இந்திய திரையிசையில் செழுமையான வாழ்க்கையை மிக கடின உழைப்பால் உருவாக்கிக் கொண்டார். இவர் 1970 களில் இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன் இசையில் இணைந்து தமிழ் மற்றும் மலையாள மொழிப்பாடல்களைப் பாடியுள்ளார். தமிழ் திரைப்பட நடிகர்களான எம். ஜி. ராமச்சந்திரன், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், ஜெய்சங்கர் என பல நடிகர்களுக்கு 1970களில் பின்னணி பாடியுள்ளார். இவர் அப்பொழுது பிரபலமாக இருந்த பின்னணிப்பாடகிகளான பி. சுசீலா, எஸ். ஜானகி, வாணி ஜெயராம் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி இவர்களோடு பல ஜோடிப்பாடல்களை பாடியுள்ளார். தென்னிந்திய திரையிசையில் வெற்றி கூட்டணியான இளையராஜா, எஸ். பி. பி , எஸ். ஜானகி கூட்டணி 1970களின் கடைசியில் உருவானது.
குடும்ப வாழ்க்கை
பாலசுப்பிரமணியம் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். இவருடைய மனைவி பெயர் சாவித்ரி, மகள் பல்லவி, மகன் எஸ். பி. பி. சரண். சரண் பின்னணி பாடகர், நடிகர், சின்னத்திரை தொடர் நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு வளர்ந்து வருகிறார்.
இறப்பு
இவருக்கு ஆகத்து 5, 2020 அன்று, கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில நாட்களில் மோசமடைந்த அவரது உடல்நிலை, பின்பு கொஞ்சம் கொஞ்சமாக சகஜ நிலைக்கு வந்தது மற்றும் வாய் வழியே சாப்பிடும் அளவுக்கு இவருடைய உடல்நிலை தேறியது. ஆனால் திடீரென்று செப்டம்பர் 24, 2020 அன்று, இவருடைய உடல்நிலை மீண்டும் மோசமடைந்ததை தொடர்ந்து, இவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல், செப்டம்பர் 25, 2020 அன்று, இவருடைய உயிர் மதியம் 1:04 மணிக்கு பிரிந்தது.
Source: Wikipedia