தீர்த்தகிரி என்ற தொடக்க காலப்பெயராலும்ஐ ‘சின்னம் கவுர் ‘ என்று ஆங்கிலத்திலும் அழைக்கப்பட்ட தீரன் சின்னமலை, கொங்கு பகுதியில் ஆங்கில ஆதிக்கத்தை எதிர்த்து போராடும் தலைவராக உருவெடுத்தார். ஒடாநிலை என்ற இடத்தில் தம் தலைநகரை அமைத்து, ஒரு வலிய படையை உருவாக்கிக்கொண்டு 1805 வரை ஆங்கிலேயர்களை எதிர்த்தார். ஆங்கிலேயர்கள் அடக்கத் கடைசிப் புரட்சியாளர் தீரன் சின்னமலை ஆவார்.
மைசூரை ஆட்சி செய்த திப்பு சுல்தானின் (1799)ஆங்கிலேய எதிர்ப்புப்போர்களில் சின்னமலை உதவி செய்துள்ளார். திப்புவின் இறப்புக்குப் பிறகு, இரண்டாவது பாளையக்காரர் போரில் (1801-1802) பங்கேற்றார். பிரிட்டிஷ் எதிர்ப்பு பாளையக்காரர்களையும், மன்னர்களையும் இணைத்து ‘தீபகற்பக் கூட்டமைப்பு ‘
உருவாக்குவதில் ஒரு முக்கிய பங்கு வகித்தார்.
1799 இன் நடுவில், கன்னடப் பகுதியில் சூண்டாவில் இருந்த தூந்தாஜியிடம் தூது சென்று திண்டுக்கல் கூட்டிணைவின் தலைமையகமான விருப்பாட்சிக்கு திரும்பி வந்து கோபாலநாயக்கரிடம் இரகசிய தகவல்களை அளித்தார். இவ்வாறு, வடக்கு – தெற்கு கூட்டணைவுகளிடையே ஒர் ஒருங்கிணைந்த போர் வியூகத்தை வகுக்கத் தீரன் சின்னமலை உதவினார்.
சின்னமலை ஆங்கிலேயர்களை எதிர்த்து 1801 -இல் காவிரியிலும் 1802 -இல் ஒடாநிலையிலும் 1804 – இல் அரச்சலூரிலும் போரிட்டு வெற்றிகளைப்பெற்றார். ஆங்கிலேயர்களின் பீரங்கிகளால் சூழப்பட்டு ,தம்மால் இனி ஒடாதநிலை கோட்டையைக் காக்க முடியாது என்ற நிலை வந்தபோது, பழனி பகுதியில் கருமலைக்குச் சென்றுவிட்டார். துரோகியான அவருடைய சமையல்காரன் சின்னமலையின் இருப்பிடம் குறித்து ஆங்கிலேயல்களுக்குத் தகவல் அளித்தான். பிடிப்பட்ட சின்னமலை, அவருடைய இரு சகோதரர்களுடன் சங்கரி கோட்டையில் 1805 சூலை 31 அன்று தூக்கிலிடப்பட்டார்.