ஐந்திணை குறிஞ்சி, முல்லை, மருதம், பாலை, நெய்தல் என்பனவே தமிழர் நிலத்திணைகள் ஆகும்.
மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சித் திணை காடும், காடு சார்ந்த நிலமும் முல்லைத் திணை இவையிரண்டுக்கும் இடையில் அமைந்த பாழ் நிலம் பாலை எனப்பட்டது. வயலும் வயல் சார்ந்த நிலமும் மருதம் எனவும், கடலும் கடல் சார்ந்த இடம் நெய்தல் எனவும் அழைக்கப்பட்டன.
இது வெறுமனே இயல்பியல் அடிப்படையிலான பகுப்புக்களாக இல்லாது, மக்கள் வாழ்வியலோடு இணைந்தவையாக அமைந்திருந்தன.
திணை என்பது ஒழுக்கம். அகத்திணை என்பது அவொழுக்கம். புறத்திணை என்பது புறவொழுக்கம். தமிழில் உள்ள அகத்திணைப் பாடல்களுக்கு ஐந்திணைப் பாகுபாடு கொள்ளப்படுகிறது. இந்தப் பாகுபாடு ஐந்து வகைப்பட்ட திணை-ஒழுக்கங்களை மையமாக வைத்துக் கொள்ளப்படுகிறது.
புணர்தல், தலைவன் புறவொழுக்கத்தில் பிரியும்போது தன்னை ஆற்றிக்கொண்டு இருத்தல், தலைவன் தன்னை விட்டு அகவொழுக்கத்தில் பிரியும்போது ஊடுதல், கடலில் சென்றவருக்காக இரங்கல், புறப்பொருளுக்காகப் பிரிதல் என்பன அகத்திணைக்கு அகத்திணை உரிப்பொருள்கள். இவற்றில் திணை மயக்கம் நிகழ்வது இல்லை. எனவே மயங்காத உரிப்பொருளின் அடிப்படையில் இன்ன பாடல் இன்ன திணை எனக் கொள்ளப்படும். எனவே குறிஞ்சித் திணை என்பது ‘புணர்தலும் புணர்தல் நிமித்தமும்’ பற்றிய செய்திகளைக் கூறுவது என்பது பொருள். பிற திணைகளுக்கும் இவ்வாறே பொருள் கொள்ள வேண்டும். இது தமிழ் நெறி.
காண்க; அகத்திணை – புறத்திணை, திணை விளக்கம்