×

தர்ஜினி சிவலிங்கம்

தர்சினி சிவலிங்கம் (Tharjini Sivalingam, பிறப்பு: 30 திசம்பர் 1978) என்பவர் ஈழத் தமிழ் வலைப்பந்தாட்ட வீராங்கனையும், இலங்கை வலைப்பந்தாட்ட அணியின் முன்னாள் தலைவரும் ஆவார். 2009 ஆம் ஆண்டு முதல் இவர் இலங்கை தேசிய வலைப்பந்தாட்ட அணியில் இணைந்து பன்னாட்டுப் போட்டிகளில் விளையாடி வருகிறார். அவர் வழக்கத்திற்கு மாறான உயரமானவர் என்பதால், வலைப்பந்தாட்ட வரலாற்றில் சிறந்த விளையாட்டு வீராங்கனையாகக் கருதப்படுகிறார்.[1] இவர் உலகின் மிக உயரமான வலைப்பந்தாட்ட வீரராக கருதப்படுகிறார். 2019 சூலையில், இங்கிலாந்து, லிவர்பூல் நகரில் 2019 உலக வலைப்பந்தாட்டக் கிண்ணத்திற்காக நடைபெற்ற போட்டிகளில் பங்குபற்றி, உலகின் மிகச்சிறந்த கோல் (348) போடுபவராக அறிவிக்கப்பட்டார். இலங்கைக்காக இவர் பன்னாட்டளவில் 100வது தடவையாக விளையாடினார்.

வாழ்க்கைக் குறிப்பு

தர்சினி யாழ்ப்பாணம், புன்னாலைக்கட்டுவன் என்ற ஊரில் ஆறு பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் ஐந்தாவதாகப் பிறந்தார். இவரது அசாதாரணமான உயரம் காரணமாக சிறு வயதில் பல இன்னல்களை எதிர்கொண்டார்.[4][5] தர்சினி மட்டக்களப்பு, கிழக்குப் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி கற்று பொருளியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.

தர்ஜினி சிவலிங்கம்
Tharjini Sivalingam
பிறப்பு. தர்ஜினி சிவலிங்கம்
திசம்பர் 30, 1978 (அகவை 42)
புன்னாலைக்கட்டுவன், யாழ்ப்பாண மாவட்டம்
தேசியம். இலங்கைத் தமிழர்
கல்வி. இளங்கலை (பொருளியல்)(கிழக்குப் பல்கலைக்கழகம்)
பணி. வலைப்பந்தாட்ட வீராங்கனை, வங்கி ஊழியர்
உயரம். 2.08 மீ (6 அடி 10 அங்)

பணி

திலகா ஜினதாசா என்பவர் இலங்கை அணியில் பயிற்சியாளராக இருந்த போது 2009 ஆம் ஆண்டில் இலங்கை வலைப்பந்தாட்ட அணியில் தர்சினி சேர்க்கப்பட்டார். 2009 ஆசிய வலைப்பந்தாட்டப் போட்டிகளில் இலங்கை அணி விளையாடி ஆசிய வாகையாளராக வெற்றி பெற்றது. 2012, 2014 ஆசியப் போட்டிகளில் இரண்டாவதாகவும் வந்தது.

2011 உலக வலைப்பாந்தாட்டப் போட்டிகளில் இலங்கை முதல் சுற்றிலேயே வெளியேறினாலும், தர்சினி மிகச் சிறந்த கோல் போடுபவராக அறிவிக்கப்பட்டார். இலங்கையில் தமிழ் அரசியல் நிலைமைகளினால் இவர் இலங்கை தேசிய அணியில் இருந்து 2014 ஆம் ஆண்டில் விலக்கப்பட்டார். திலகா ஜினதாச மீன்டும் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட போது தர்சினி மீண்டும் இலங்கை அணியில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.

தர்ஜினி செலான் வங்கியில் வங்கியாளராக சேர்ந்து பணியாற்றினார். அங்கு பணியாற்றும் போது வணிக வலைப்பந்தாட்ட அணியில் சேர்ந்து விளையாடினார்.

2017 ஆம் ஆண்டில் ஆத்திரேலியாவில் சிட்டி வெசுட் பால்க்கன்சு வலைப்பந்தாட்ட அணியில் சேர்ந்து விளையாட சந்தர்ப்பம் கிடைத்தது. வெளிநாட்டு அணியொன்றில் விளையாடிய ஒரேயொரு இலங்கை வலைப்பந்தாட்ட வீரர் இவரே ஆவார்.

2018 ஆசிய வலைப்பந்தாட்டப் போட்டியில் இலங்கை அணி இறுதிப் போட்டியில் சிங்கப்பூர் அணியை 69-50 என்ற புள்ளிகளில் வென்று வாகையாளரானது. இப்போட்டிகளில் தர்சினியின் பங்கு முக்கியமானதாக அமைந்தது. 2018 ஆசியப் போட்டிகளில் தர்சினிக்கு சுற்றின் மிகச்சிறந்த வீரர் என்ற விருது கிடைத்தது.

விருதுகள்.

உலகின் மிகச்சிறந்த கோல் போடும் வீரருக்கான விருது – 2011, 2019
ஆசியாவின் மிகச்சிறந்த கோல் போடும் வீரருக்கான விருது – 2009, 2012

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments