ஈழத்திருநாட்டில் வடக்கே கிளிசொச்சி மாவட்டத்தில் பச்சிளைப்பள்ளிப் பிரதேசத்தில் மருதமும் நெய்தலும் சுற்றம் எங்கும் வளத்தை அள்ளித்தரும் புளோப்பளை ஒரு அழகிய கிராமமாகும்.
இக்கிராமம் ஒரு பழைமைவாய்ந்த கிராமமாகும். போத்துகேயர் காலத்தில் பாசாலையும் தேவாலயங்களும் இப்பிரதேசத்தில் நிறுவப்பட்டுள்ளது. கொக்கட்டிவெளி, அறத்திவெளி, இத்தாலை, முடிச்சப்பல்லி ஆகிய வயல் வெளிகள் தொடராகக் காணப்படுகின்றது. சுமார் 180 ஏக்கர் வயல்வெளிகளும் 450 ஏக்கருக்கு மேல் தென்னைப் பயிர்களும் கொண்ட ஒரு வளம் மிக்க பூமியாகும் புளோப்பளை.
இங்கே அறத்திமுருகன் கோவில், அறத்தியம்மன் கோவில், புனித பேதுறுவர் கோவில், அந்தோனியார் தேவலயம், என்பன ஆன்மீகச் சேவைகளை செய்து வரும் இடங்களாகும். இதில் பேதுறுவர் ஆலயம் போத்துகேயர் காலத்து பழைமை வரலாற்றைக் கொண்ட ஆலயமாகும். அறத்தி அம்மன் வழிபாடும் புராண காலத்து கிராமியத் தொய்வ வழிபாட்டுடன் தொடர்புபட்ட வழிபாட்டு முறையாகவும் வரலாற்றுத் தொன்மையும் கொண்டுள்ளதாக காணப்படுகிறது.
புளோப்பளையில் புளோப்பளையின் தென் முனை புளோப்பளை கடல்நீரேரியாகும். இது இப்பிரதேச மக்களின் வாழ்வாதாரத்துக்கு உறுதுணையாக உள்ளது. மேலும் தென்னைபயிர் செய்கை, கால்நடை வளர்ப்பு, மீன்பிடி என்பன இப்பிரதேச மக்களின் தொழிலாகக் காணப்படுகின்றது.
ஈழப் போரியல் வரலாற்றில் தனக்கென பல வரலாற்று பக்கங்களை கொண்ட ஊராக புளோப்பளை காணப்படுகின்றது. மண்ணுக்காக பல மாவீரர்களையும் போராளிகளையும் நாட்டுப்பற்றாளர்களையும் பெற்றெடுத்த பெருமை மிக்க மண் புளோப்பளை. எங்கும் உயர்ந்து நிற்கும் தென்னையும் வடக்கின் அடையளமான கற்பக தருவும் போல புளோப்பளையின் புகழும் செழிப்பும் தியாகமும் என்றும் உயர்ந்தே இருக்கும்.