தமிழ் தட்டச்சுப் பொறியையும் தமிழில் தட்டச்சு செய்வதற்கான தொழில் நுட்பத்தையும் உருவாக்கியவர் தமிழ் ஈழத்தில் உள்ள சுண்டிக்குளியில் 1886 ஆண்டு பிறந்த ஆர் முத்தையா ஆவார். இவரது தந்தையார் ராமலிங்கம் ஆறுமுக நாவலரின் சீடராவார். சிறு வயதிலேயே பெற்றோரை இழந்த முத்தையா உறவினர்களின் ஆதரவுடன் கலாசாலையில் பயின்று, பின்னர் மலேயா நாட்டிற்குச் ஆரம்பத்தில் ரெயில்வே இலாகாவில் பணியாற்றினார்.
பின்னர் ஒரு பிரபல வர்த்தக நிலையத்தில் பணிபுரிந்த காலத்தில் கணிதம், பொருளாதாரம், சுருக்கெழுத்து, அச்செழுத்து போன்றவற்றைக் கற்றுக்கொண்டார். மேலும் தமிழ் ஆங்கில இலக்கியங்கள், சமய நூல்கள் போன்றவற்றைக் கற்றுக் கொண்டபோது ஆங்கிலத் தட்டச்சு இயந்திரத்தைப் போல தமிழிலும் இருந்தால் நன்றாக இருக்குமே என்று சிந்திக்க ஆரம்பித்த முத்தையாவின் அயராத உழைப்பும் செயற்திறனும் தமிழ் தட்டச்சு பொறி உருவாக்குவதற்கு காரணமாக அமைந்தது. ஒவ்வொரு தமிழ் சொற்களையும் தட்டச்சில் அமைத்துக் கொள்வது பெரும் சவாலாக இருந்தபோதும் அவரது நம்பிக்கையும் விடா முயற்சியும் அவரை தமிழ் தட்டச்சு பொறியின் தந்தையாக சாதனை படைக்க வைத்தது.
பெரும் சமூக சேவையாளராகவும் இருந்து வந்த முத்தையா அக்கால கட்டத்தில் இலங்கையில் நடைபெற்ற இனக் கலவரங்களை தொகுத்து எழுதிக் கொண்டிருந்த போது அவை அச்சுப்பதிவாக வருமுன்பே காலமானார். தமிழ் தட்டச்சுப் பொறியினைக் கண்டு பிடித்து தமிழ்மொழிக்கும் தமிழருக்கும் பெருமை தேடித்தந்த முத்தையாவின் முத்தான சாதனையை பாராட்டுவோம்!