×

முதலாவது கடல்புலிகளின் நீரடி நீச்சல் பிரிவு தாக்குதல் அணி உருவாக்கம்:

1985 காலப்பகுதியில் சிங்கப்பூரிலிருந்து நீரடி நீச்சல் பயிற்சிக்காக அந்த நாட்டைச் சேர்ந்த தம்பதிகள் இருவர் தமிழ்நாடு சென்னை கோல்டன் கடற்கரைக்கு அருகாமையில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டிருந்த இடத்திற்கு வரவழைக்கப்பட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டது. இப்பயிற்சிக்கு கேணல் சங்கர் அவர்கள் மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டு கப்பலய்யா, கருணாநிதி, செல்வா, சுலோஜன், இதயரஞ்சன், அன்ரன், யூட், எஸ்.பி.துரை, கங்கை அமரன், தவக்குமார், ரெஜினோல்ட், ஆனந்தகுமார், பிரின்சிலி, விக்கினம் ஆகியோர் உட்பட 42 போராளிகளுக்கு மூன்று மாத காலம் கடுமையான பயிற்சிகள் வழங்கப்பட்டது.

தொடர்ச்சியாக மல்லிபட்டினம் புலிகளின் முகாமுக்கு பணிக்கு அமர்த்தப்பட்டு முக்கிய வேலைத்திட்டங்களில் ஈடுபடுத்தப்பட்டனர். சமநேரத்தில் அவ்வப்போது தொடர்ச்சியான பயிற்சிகளிலும் ஈடுபட்டனர். 1986-ஆம் ஆண்டு யாழ் காரைநகர் பகுதியில் சிறிலங்கா கடற்படையினரின் முகாமில் தரித்து நின்ற பீரங்கிப் படகுகளை தாக்கியழிக்கும் திட்டம் தீட்டப்பட்ட  நிலையில் யாழ் வடமராட்சி கிழக்கு வெற்றிலைகேணி பகுதியில் நீரடி நீச்சல் பிரிவுக்கு இறுதிக்கட்ட மாதிரி பயிற்சிகள் 1986-ஆம் ஆண்டு செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் முற்றுப்பெற்று முதலாவது தாக்குதல் அக்டோபர் 31-ஆம் திகதி இரவு 11:30-க்கு தீர்மானிக்கப்படுகிறது.

நீரடி நீச்சல் பிரிவைச் சேர்ந்த சுலோஜன், பிரின்சிலி, செல்வா ஆகிய மூவரும் தெரிவு செய்யப்பட்டு தளபதி கேணல் கிட்டு அவர்கள் ஒருங்கிணைத்து வழிநடத்த களத்தில் பிரிகேடியர் சூசை, செந்தில், டேவிட், இன்னும் சிலரால் எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டு தாக்குதல் நடவடிக்கை நடைபெற்றது. துரதிஷ்டவசமாக சீரான காலநிலையில் மூவரதும் ஆக்ஸிஜன் சிலிண்டரில் வெளிவந்த குமிழிகளை கண்டு கடற்படையினர் புலிகளை இனம் கண்டு கொண்டனர்.

பீரங்கிப்படகுகளை குண்டு வைத்து தகர்க்கும் முயற்சியை எதிரியானவன் கண்டுவிட்ட நிலையில் கைக்குண்டுகளை கழட்டி தண்ணீருக்குள் வீசி எமது தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டு சுலோஜன், பிரின்சிலி ஆகிய இரு போராளிகளும் வீரச்சாவைத் தழுவி கொள்கின்றார்கள். மிகுந்த இக்கட்டான சூழ்நிலையில் மிகவும் கஷ்டப்பட்டு போராளி செல்வா அவர்கள் கரைவந்து சேர்ந்தார். அவர் கரை வந்து சேர்ந்த நிலையில் அவருடைய ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், நீச்சல் கண்ணாடிகள் சேதமடைந்த நிலையில் கரைவந்து சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.

விடுதலைப்புலிகளின் போராட்ட வரலாற்றில் முதன்முதலாக சிறிலங்கா கடற்படையின் முகாமுக்குள் சென்று தாக்குதலில் ஈடுபட்ட இந்த முயற்சி எமக்கு வெற்றியளிக்காவிடினும் எதிரியின்  கோட்டைக்குள் சென்று எம்மால் தாக்க முடியும் என்ற முதல் அத்தியாயத்தை ஆரம்பித்து வைத்த முதல் நிகழ்வாக பதிவாகி நிற்கின்றது. பின்னைய காலத்தில் இதில் வீரச்சாவை தழுவிய சுலோஜனின் பெயரில் கடல்புலிகளின் சுலோஜன் நீரடி நீச்சல் பிரிவு உருவாக்கம் பெற்று பற்பல வெற்றிகரமான தாக்குதல்களை நடாத்தி போராட்ட வரலாற்றில் படைத்து உலகம் வியந்தது யாவரும் அறிந்ததே.

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments