2000ஆம் ஆண்டளவில் 2 கோடி பனைகள்! மாபெரும் கற்பகச் சோலை திட்டம்!
90களில் விடுதலை போராட்டம் கடுமையான பொருளாதார தடையை எதிர்நோக்கியபோது போஷாக்கின்மை, பட்டினி சாவு, ஒடுக்கும் அரசின் நிகழ்ச்சி நிரலில் தங்கி வாழ்தல், வேலை வாய்ப்பின்மை, உளவியல் அழுத்தம், தற்கொலை மனப்பான்மை, உற்பத்தி முடக்கம் போன்ற பன்முனை தாக்குதலில் இருந்து எம் மக்களை பாதுகாத்து வாழ்வாதாரங்களை மேம்படுத்தி, உள்ளூர் வளங்களை விஞ்ஞான ரீதியாக ஆய்வு செய்து அவற்றினை உச்ச பயன்பாட்டுக்கு கொண்டு வருதல் என்ற அடிப்படையில் தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம் பல்வேறு திட்டங்களை வகுத்து செயல்படுத்தியது.
அவை எதிரியின் நோக்கங்களை தவிடு பொடியாக்கி போர் அழிவின் உச்சத்தை தொட்ட போதும் எம் மண்ணை வளப்படுத்தி எம் மக்களை பட்டினிச் சாவிலிருந்தும் ஏனைய நாசகார நடவடிக்கைகளில் இருந்தும் பாதுகாத்து பேணியது.
“2000ஆம் ஆண்டளவில் 2 கோடி பனைகள் – மாபெரும் கற்பகச் சோலை திட்டம்” 5 வருடங்களில் 50 லட்சம் பனைகள் நடப்பட வேண்டும் என்று எம்மால் வைக்கப்பட்ட இலக்கு மிகத் துரிதமாக நடைமுறைக்கு வரத் தொடங்கியது. தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம் பனை தென்னை வள அபிவிருத்தி தொடர்பான அனைத்து சங்கங்களையும், பனை அபிவிருத்தி நிறுவனத்தையும் பொது மக்களையும் அறிவுசார் சமூகத்தினரையும் அரச திணைக்கள அதிகாரிகளையும் கலந்தாலோசித்து அவர்களின் பங்களிப்பினை ஒருங்கிணைத்து மிகவும் ஆக்கப்பூர்வமான செயல்திறனுடன் இலக்கை நெருங்கியது.
உறக்கமற்று உழைக்க ஏற்படுத்தப்பட்ட சிறந்த திட்டமிடல்களின் அடையாளம்!