
வட – தென்தமிழீழத்தை இணைக்கின்ற பூமி மணலாறு. இந்திய வல்லாதிக்க பசிக்கு எம் விடுதலைப்போர் இரையாகிப் போய் விடாமல் காத்த பூமி. தீர்க்கமும், தியாகமும், வீரமும், விவேகமும் நிறைந்த தலைவனை தமிழ் மக்களுக்காய் காத்து தந்த பூமி. புதிய பல படையணிகளை வளர்த்தெடுக்கத் தளமாக அமைந்த பூமி. தமிழீழ விடுதலைப்போரில் சாதனைகள் பல படைக்க களம் தந்த பூமி. தென் தமிழீழப் போருக்கு உயிர்கொடுக்கும் ஊடகமாய் அமைந்த பூமி. கடல் வளமும், நிலவளமும், வனவளமும் நிறைந்த பூமி.
மொத்தத்தில் களம், தளம், வளம் நிறைந்த மணலாறு தமிழீழத்தின் இதயபூமி என்பதை எவரும் மறுக்கமுடியாது. இதயத்தில் கால்பதிக்க நினைத்த எதிரிக்குத் தகுந்த பாடம் புகட்டிய எம் வீரர்களின் நடவடிக்கைக்கு, ‘இதயபூமி’ எனப் பெயரிட்டது மிகப் பொருத்தமானதே.
ஏறக்குறைய ஏழுமைல் பிரதேசத்தை இராணுவத்தின் பிடியிலிருந்து விடுவித்து, துடைத்துத் துப்பரவாக்கிய இந்த அதிரடி நடவடிக்கையில் நிலைநாட்டப்பட்ட சாதனைகள், படிப்பினைகள் நெஞ்சில் ஆழப்பதிந்த தியாக நினைவுகள், மனங்கொண்ட நிறைவுகள் மிகப்பல.
சாதனை, படிப்பினை, நிறைவு, நினைவு அனைத்தும் நிறைந்த “இதயபூமி” நடவடிக்கை, தமிழீழ விடுதலைப்போரின் புதிய வரலாற்றுப்பதிவு.
மண்கிண்டி (ஜானகபுர) இராணுவ முகாமும், அதனருகே அமைந்த இரண்டு இராணுவ மினிமுகாம்களும், இவற்றைச் சூழ திட்டமிட்டு அமைக்கப்பட்ட ஆயுதம் தரித்த சிங்கள ஊர்க்காவல் படையின் நிலைகளும் முப்பதே நிமிடங்களில் துடைத்துத் துப்பரவாக்கப்ட்டன.
இப்பணியில் விடுதலைப் புலிகளோடு, அவ்வமைப்பின் பிரிவான விசேட பயிற்சி பெற்ற – துணைப்படை வீரர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மண்கிண்டி மலை
கொக்குத்தொடுவாய் கிராமத்திலிருந்து முந்திரிகைக்குளம் நோக்கி செல்லும் வீதியின் மையத்தில் அமைந்துள்ளது இம்மலை.
வட – தென் தமிழீழத்தை கூறுபோட இவ்வீதியில் இராணுவ வேலியை அமைத்துக் கொண்டது இலங்கையரசு. இந்த இராணுவ வேலி அறுந்துவிடாமல் இருக்க, மண்கிண்டி மலையில் மிகப்பெரியதொரு இராணுவ முகாமை அமைத்துக் கொண்டது.
இராணுவ முகாமைச்சூழ திட்டமிட்ட சிங்களக்குடியேற்றத்தையும் அது அமைத்துக்கொள்ளத் தவறவில்லை. அதுமட்டுமல்ல, ‘ஜானகபுர’ என சிங்களப் பெயரையும் அதற்குச் சூட்டிக்கொண்டது.
முந்திரிகைக்குள இராணுவமுகாம், சாம்பான்குள இராணுவ முகாம், மண்கிண்டி இராணுவ முகாம், கோட்டக்கேணி இராணுவ முகாம், கொக்குத்தொடுவாய் இராணுவ முகாம் என வரிசையாக அமைக்கப்பட்ட முகாம்களிடையே, பல தொடர் பாதுகாப்புக் காவலரண்களையும் அமைத்துக்கொண்டது. மூன்றே ஆண்டுகளில் மிகவேகமாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் இவை.
கொக்குத்தொடுவாய், கோட்டக்கேணி இராணுவத்தினருக்கு உதவி வழங்கும் முக்கிய தளமாக மண்கிண்டி இராணுவ முகாமமைந்தது மட்டுமல்ல, மணலாற்றின் ஏனைய தமிழ்க் கிராமங்கள்மீது எறிகணைகள் வீசும் தளமாகவும் இதனை மாற்றிக் கொண்டனர். இதே இராணுவ முகாமில் இருந்தே சில திட்டமிட்ட இராணுவ நடவடிக்கைகள் மணலாற்றில் மேற்கொள்ளப்பட்டன. இத்தகைய பலமான ஒரு இராணுவ தடுப்பு வேலியால் புலிகள் வடதமிழீழத்திலிருந்து தென் தமிழீழத்திற்கு நகர்வதையும், தென் தமிழீழத்திலிருந்து வடதமிழீழத்திற்கு நகர்வதையும் தடுத்துவிடலாமென, இலங்கையரசின் தலைமையும் படைத்தலைமைகளும் தப்புக்கணக்குப் போட்டுக்கொண்டனர்.
கொக்குத்தொடுவாய், கொக்கிளாய்ப் பிரதேசத்திலும் தென்னமரவாடி பிரதேசத்திலும் தன் சுய விருப்பிற்கேற்ப குடியேற்றங்களை அமைத்துக்கொள்ள, இந்த இராணுவ முகாம்களை அரசு பயன்படுத்திக் கொண்டது.
தமிழீழ இலக்கைத் துண்டிக்க மட்டுமன்றி, மணலாற்றுக்கடல், நில, வன வளங்களைக் கபளீகரம் செய்யவும் இம்முகாம்களைப் பயன்படுத்திக்கொள்ள முனைந்தது. இச் சிந்தையின் வெளிப்பாடாக அளம்பில் கிராமத்தைப் பாரிய இராணுவ முகாமாக மாற்றினர். ஆனால் அம்முகாமைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள முடியாமல் பின்வாங்கிச் சென்றனர்.
நாயாற்றுப் பகுதியில் கடல்வழியால் பலமுறை தரையிறங்க முயற்சி செய்து தோல்வி கண்டனர். இவையெல்லாம் மணலாற்றின் கடல் வளத்தினை தன்வசமாக்க நினைத்துத் தோற்றுப்போன வரலாற்றுப் பாடங்கள்.
மணலாற்றுக்கேயுரிய வனவளத்தையும், அங்கு அமைந்திருக்கும் புலிகளின் பலம்மிக்க படைத்தளங்களையும் கைப்பற்றும் நோக்கில் ஹயசேன, மின்னல், ஹயபார (சிக்சர்) என்ற பெயர் சூடி மிகப்பெரும் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு, அவ்வப்போது முறையான தோல்விகளைச் சந்தித்து, நவீன பீரங்கிகளைக்கூட பறிகொடுத்து ஓடியதை அவர்கள் மறக்க மாட்டார்கள்.
இவை எல்லாம் கடந்த காலத்தில் சிங்கள அரசின் தலைமையும், இராணுவத் தலைமைகளும் கற்றுக்கொண்ட கசப்பான உண்மைகள். இந்தக் கசப்பான நடவடிக்கைகளின் போதெல்லாம், மண்கிண்டி இராணுவவ முகாமைப் பெரிதும் பயன்படுத்திக் கொண்டனர். மொத்தத்தில்….. மணலாற்றிலிருந்து தமிழ் மக்களை வெளியேற்றுவதற்கும் வட – தென் தமிழீழத்தைக் கூறு போடுவதற்கும், திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை அமைத்துக்கொள்வதற்கும் – கடல், வன வளங்களை சுருட்டிக் கொள்வதற்கும்.
கொக்குத்தொடுவாய், கோட்டக்கேணி, சாம்பான்குள இராணுவ முகாம்களைத் தக்க வைத்துக்கொள்வதற்கும் – விடுதலைப் புலிகளின் பலம்மிக்க காட்டுத்தளங்களைத் தாக்கி அழிக்கும் முயற்சிக்கும் – மண்கிண்டி இராணுவ முகாமை பெரிதும் பயன்படுத்தி வந்தனர்.
சிங்கள தேசத்தின் சிந்தனையும் செயலும் ‘இதயபூமி – 1’ நடவடிக்கையினால் சிதறடிக்கப்பட்டுள்ளமை மறைக்க முடியாத உண்மை.
‘இதயபூமி – 1’ தாக்குதலின் உணர்வலைகள்
1983 ஆம் ஆண்டு யூலைத் திங்கள் 23ஆம் நாள், திருநெல்வேலியில் நடைபெற்ற இராணுவத்தின் மீதான வெற்றிகரத்தாக்குதல், உலகின் கவனத்தினை தமிழீழ விடுதலைப் புலிகளின் இலட்சியப் போரில் திசைதிருப்பியது.
1987ஆம் ஆண்டு யூலைத் திங்கள் 5ஆம் நாள், மில்லரின் கரும்புலித் தாக்குதலில், இலங்கைப்படையும், அரசும் கதிகலங்கி இந்தியாவின் காலடியில் விழுந்தன.
பலம்மிக்க இந்தியப் படையை எதிர்த்துநின்று விடுதலைப்போரின் உறுதியை நிலைநிறுத்தியபோது, உலகம் வியந்து நின்றது. அமெரிக்காவுக்கொரு வியட்நாம், ரஷ்யாவுக்கொரு ஆப்கானிஸ்தான், இந்தியாவுக்கொரு தமிழீழம் பாடமாய் அமைந்ததென, இந்தியாவின் தோல்வியை ‘வெரித்தாஸ்’ போன்ற வெளிநாட்டு வானொலிகள் கணிப்பிட்டன.
முற்றுகைக்குள்ளாக்கப்பட்டு கொக்காவில், கொண்டச்சி, கோட்டை, மாங்குளம் இராணுவ முகாம்கள் கைப்பற்றப்பட்டபோது தமிழீழத்தின் மீதும், விடுதலைப்புலிகள் மீதும் மீண்டுமொரு முறை கவனம் திருப்பப்பட்டது.
ஆனையிறவுச் சமர், “இலங்கைத்தீவில் இரண்டு இராணுவங்கள்” என்ற கருத்தை விதைத்தது. அதிரடி மூலம் முப்பது நிமிடங்களில், கேந்திரமுக்கியத்துவம் மிக்க மண்கிண்டி இராணுவமுகாம் தகர்க்கப்பட்டமை, உலகப் பத்திரிகைகள் – வானொலிகள் கவனத்தை ஈர்த்தது மட்டுமன்றி, மீண்டும் உலக உதவியினை நாடும் நிலைக்கு இலங்கையரசைத் தள்ளியுமுள்ளது.
“விடுதலைப்புலிகள் பலவீனமடைந்துள்ளதாலேயே போர் நிறுத்தம் – பேச்சுவார்த்தை என்பவற்றை நாடியுள்ளனர்.” என்ற இலங்கையரசின் கனவு, இதயபூமி – 1 நடவடிக்கையால் கலைந்து போயுள்ளது.
“வடக்குக் கிழக்கை சிங்களக் குடியேற்றமூலமும் இராணுவ முகாம்களின் மூலமும் துண்டித்துவிட முடியும்” என்ற, இராணுவத்தினதும் அரசினதும் எண்ணம் சிதறடிக்கப்பட்டுள்ளது.
இராணுவத்தை நம்பி சிங்கள மக்கள் குடியேற்ற நிலைகளில் குடியேற மறுத்து, இடம் பெயர்ந்து ஓடும் நிலை தோற்றம் பெற்றுள்ளது.
கற்பூரமும், ‘பற்றறி’யும், பெற்றோலும் புலிகளின் விடுதலைப் போராட்டத்தை நலிவடையச் செய்யவில்லை; பொருளாதாரத் தடையால் விடுதலைப் போராட்டத்தை நலிவடையச் செய்யலாமென்ற தப்பான முடிவு சிதைக்கப்பட்டுள்ளது.
கனரக ஆயுதங்கள் எண்ணற்ற வகையில் பறிகொடுக்கப்பட்டதால் இராணுவப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இராணுவ முகாம்களும், கனரக ஆயுதங்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி விட்டதுடன், கேலிக்குரியதாயும் அமைந்துவிட்டது.
அரசுத்தலைமை, கூட்டுப்படைத்தலைமை, இராணுவத் தளபதிகளிடையே விசனங்களும் முரண்பாடுகளும் முளைவிட்டுள்ளன.
மணலாற்றுக் காட்டில் மேற்கொள்ளப்பட்ட ஏழு இராணுவ நடவடிக்கைகளுக்கு, மண்கிண்டி இராணுவமுகாம் கட்டளைத் தலைமையகமாகப் பயன்படுத்தப்பட்டது, அதனால் அனைத்து இராணுவத் தளபதிகளும் கால்மிதித்த தளம், இத்தளமே சிதைக்கப்பட்டமை இராணுவத் தளபதிகளினதும் சிப்பாய்களினதும் உறுதியைக் குலைத்துள்ளது. மாறாக, விடுதலைப்புலிகளின் வேகமும் உறுதியும் வளர்க்கப்பட்டுள்ளன.
உலகப் பத்திரிகைகளும் செய்தித் தாபனங்களும் தொடர்ச்சியாக இத்தாக்குதல் பற்றியும், விடுதலைப் புலிகளின் உண்மை வளர்ச்சி பற்றியும் செய்தி வெளியிட்டுக் கொண்டிருப்பதும், உயர்மட்ட இராணுவக் குழுவொன்று இத்தாக்குதல் பற்றி ஆராய உடனடியாக நியமிக்கப்பட்டதும், இலங்கை ஜனாதிபதி இராணுவத் தளபதிகள் மீது ஆவேசம்கொண்டு பாய்ந்ததும் மாதங்கள் ஒன்றாகியும் அவர்கள் குழப்பத்திலிருந்து விடுபடாமல் இத்தாக்குதல் பற்றியே ஆராய்வதும் ‘இதயபூமி – 1’ தாக்குதலின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தி நிற்கும் உணர்வலைகளும், உண்மைகளுமாகும்.
துணைப் படையின் மூன்றாண்டு வளர்ச்சியில்…
1984 ஆம் ஆண்டு மார்கழித்திங்கள் 21ஆம் நாள், முல்லை மாவட்டத்தின் மணலாற்றுப் பிரதேசத்தை, தடைப்பிரதேசமென சிங்கள அரசு பிரகடனம் செய்தது. அன்று வெளியேற்றப்பட்ட மக்கள் இன்றுவரை மீளக் குடியமர்த்தப்படவில்லை. மாறாக சிங்கள மக்களை அப்பிரதேசத்தில் ஆயுததாரிகளாய் குடியமர்த்தி வருகின்றது.
இடம்பெயர்ந்த தமிழர்களுக்கென வந்த – வருகின்ற – வெளிநாட்டு உதவிகளை, இப்பிரதேசத்தில் குடியமர்த்திய சிங்கள மக்களுக்கு வழங்கி வருகின்றது.
முல்லைப்பட்டின கிராமங்களின் மக்கள் முல்லைத்தீவு இராணுவ நடவடிக்கையின்போது வெளியேற்றப்பட்டனர். மூன்று ஆண்டுகளாகியும் அந்த மக்கள் நிலைபற்றி, சிங்கள அரசு சிந்திக்கவில்லை. எதிர்மாறாக முல்லை மணலாற்றுப் பிரதேசத்தில் மக்களின் வீடுகள், கல்விகூடங்கள், வழிபாட்டு இடங்கள், மருத்துவ மனைகள் என்பன வான் படைக் குண்டுவீச்சுக்கு இலக்காக்கப்பட்டன.
தொடர்ச்சியாக இம்மண்ணின் மக்களுக்கு சிங்கள அரசால் இழைக்கப்பட்ட கொடுமைகளின் வெடிப்பே, துணைப்படை, தம்மைத்தாமே காத்து, தமது மண்ணில் சுதந்திரமாக வாழ, 1990 இன் ஆரம்பத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் துணை அமைப்பாக, துணைப்படை தோற்றம் பெற்றது.
முல்லை மணலாற்றுப் பிரதேச கிராம மக்கள் அனைவரும் இப்படையணியில் இணைந்து கொண்டனர்.
ஒருசில கிராமங்கள் தவிர்ந்த ஏனைய கிராம மக்கள், விடுதலைப் புலிகளின் துணையோடு அவர்தம் மண்ணில் மீண்டும் குடியமர்த்தப்பட்டனர். தம்மைத்தாமே தற்காத்துக்கொள்ளும் பயிற்சியோடு, வேட்டைத் துப்பாக்கியணியாகத் துணைப்படை எழுச்சி பெற்றது.
1991 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், துணைப்படை இரண்டாம் கட்ட வளர்ச்சியை எட்டியது. விசேட பயிற்சி பெற்று 303 ரக துப்பாக்கி, ளு.டு.சு ரக துப்பாக்கியணியாக மாற்றம் பெற்றது. 1993 இன் அரம்பகாலம் வரை முல்லை மணலாற்றுப் பிரதேசங்களில் சிங்கள இராணுவம் மேற்கொண்ட பாரிய நடவடிக்கைகளை விடுதலைப்புலிகள் முறியடித்தபோது, புலிகளின் தாக்குதலணிக்குப் பலவழிகளில் துணைநின்றனர்.
இன்றுவரை மூன்று துணைப்படை வீரர்கள் மாவீரர் துயிலும் இல்லத்தில் பூசிக்கப்படும் கல்லறைகளாயினர்.
1993 ஆம் ஆண்டு ஆனி மாதம், துணைப்படை மூன்றாம் கட்ட வளர்ச்சியினை எட்டியது பயிற்சியிலும், ஆயுத பயன்பாட்டிலும் மாறுபட்ட வளர்ச்சி நிலை கண்டது. விசேட அதிரடி பயிற்சி பெற்று, கனரக இயந்திரத் துப்பாக்கியணியாய் நிமிர்ந்து நிற்கிறது.
தமிழீழ மக்களின் மனதில் நம்பிக்கை ஒளி ஏற்படுத்தியதும், சிங்கள அரசையும் இராணுவத் தளபதிகளையும் நிலைதடுமாற வைத்ததுமான ‘இதயபூமி – 1’ என்னும் விடுதலைப்புலிகளின் சிறப்பு நடவடிக்கையில், முல்லை மாவட்ட துணைப்படையணிகள் நேரடியாக களத்தில் நின்று உதவி புரிந்தன.
விடுதலைப்போராட்ட வரலாற்றில் இது ஒரு புதிய திருப்புமுனையாகும். இது மட்டுமல்ல, மக்கள் தம் மண்ணை மீட்டுவிட முடியுமென்ற நம்பிக்கையின் தொடக்கமும் கூட. அன்று – சென்ற ஆண்டுகளில் உயிரைப் பிச்சையெனக் கையேந்தியும் உயிர் பறிக்கப்பட்டது. இன்று அந்நிலைமாறி, “பகைவனே! உனது உயிரில் ஆசையிருந்தால் எங்கள் மண்ணில் கால் மிதிக்காதே” என்ற நிலையில், முல்லை மாவட்ட மக்கள் களத்திலும் எல்லையிலும் ஆயுதத்துடன், சொந்த மண்ணைக் காத்து நிற்கின்றனர்.
கைதிகள் விடுதலை
இதயபூமி -1 நடவடிக்கையின் போது திசைமாறி, திகைத்து தஞ்சமடைந்த சிங்கள மக்கள் ஏழுபேரை விடுதலைப் புலிகள் எந்தவித நிபந்தனையுமின்றி விடுதலை செய்தனர். தென்னிலங்கைப் பத்திரிகைகள் இவ்விடுதலை பற்றி ஆச்சரியத்தோடு கருத்து வெளியிட்டன. ஆனால், இதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமேயில்லை.
ஏதுமறியாத ஏழைச் சிங்கள மக்களுக்கு ஆசைகாட்டி, தமிழர்கள் உங்களுக்கு எதிரானவர்கள் என்ற தவறான கருத்தைத் திணித்து, ஆயுத தாரிகளாய் மணலாற்றில் குடியேற்றியது இலங்கையரசு.
இனவாத அரசியல் வெற்றிக்கும், இனவழிப்பு இராணுவ முகாம்களில் பாதுகாப்பிற்கும் இவர்கள் கவசங்களாக்கப்பட்டனர்.
ஆயுதமேந்திய குடியேற்றவாசிகள் என்ற அடிப்படையில், புலிகள் இவர்களைக் கொன்றுபோட்டிருக்க முடியும். ஆனால் இதை ஏன் அவர்கள் செய்யவில்லை; கைதிகளாக இவர்களை ஏன் தடுத்து வைக்கவில்லை என்கின்ற உண்மைகளை, அனைவரும் உணரவேண்டும்.
ஆசைகாட்டி, ஏமாற்றிக்கொண்டு வந்து குடியமர்த்தப்பட்டவர்கள் இவர்கள். அது மட்டுமன்றி தம் இராணுவத்தில் நம்பிக்கை இழந்து, தம்மைக் கைவிட்டு ஓடிய அவர்களின் கோழைத்தனத்தைக் கண்டு, இதுவரை தம்மை ஏமாற்றி குடியமர்த்தி வைத்திருந்த உண்மையை உணர்ந்து புலிகளிடம் தஞ்சமடைந்தவர்கள் இவர்கள்.
பொதுமக்களைக் கொல்வது புலிகளின் இலக்கல்ல. அது மட்டுமன்றி, தஞ்சமடைந்தவர்களை காத்து கௌரவிப்பதுதான் தமிழனின் வீரப்பண்பு. சிங்கள மக்கள் எங்களின் எதிரிகளல்ல. அவர்களை என்றும் நாம் நேசிக்கின்றோம். இந்தக் கொள்கையின் நிலைப்பாட்டிலேயே நந்தசிறி, நந்தசிறிகுஸ் தமயந்தி, நந்தசிறி தினேசசிங்க, யந்துலாங்கனி, சூரசேன விமலாவதி, சிந்தக ஜெமதாக, சமான் ஆகிய ஏழுபேரும் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த உண்மை நிலையினை சிங்கள மக்கள் உணர்வதுமட்டுமல்ல தென்னிலங்கைப் பத்திரிகைகளும் இக்கருத்தை மக்களுக்கு புரியவைக்கும் வகையில் எழுதவேண்டும். இவ்வேழு பேரின் விடுதலை இவ்வுண்மையினை சுட்டிநிற்கிறது.
ஆதாரம்: கீழே அழுத்தவும்
எழுத்துருவாக்கம்: மணலாறு விஜயன்.
நன்றி: ‘இதயபூமி 01’ நூல் மற்றும் விடுதலைப்புலிகள் இதழ் (ஆவணி, 1993).