ஈழத்தின் கிழக்கே உள்ள அம்பாறை மாவட்டத்தின் கிழக்குக் கரையோரமாய் அமைந்துள்ள ஒரு கிராமமாகும். இக்கிராமத்தைச் சுற்றி ஆறொன்று ஓடுவதாலும், முற்காலத்தில் காரைமரங்கள் நிறைந்து காணப்பட்டமையாலும் இது காரைதீவு என அழைக்கப்பட்டது. 2004 ஆம் ஆண்டு இடம்பெற்ற சுனாமியால் இது மிகவும் பாதிக்கப்பட்டது. சுமார் 2000 பேர் இறந்ததாக கூறப்படுகிறது.
காரைதீவு என்னும் ஊரின் பெயர் இலங்கையின் வேறு சில இடங்களிலும் காணப்படுகின்றது. யாழ்ப்பாணத்தின் காரைதீவு காரைநகர் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்னும் ஒரு காரைதீவு புத்தளம் மாவட்டத்தில் உள்ளது. மட்டக்களப்பிற்குத் தெற்கே 36 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ள காரைதீவு காரேறுதீவு காரேறு சோலை எனவும் அழைக்கப்பட்டு வந்துள்ளது. எனினும் காரைதீவு என்னும் பெயரே பிரபலமாக உள்ளது. சுவாமி விபுலாநந்தர் பிறந்த ஊரும் இதுதான். இவ்வூர் காரைதீவு எனப் பெயர் பெற்றிருந்தாலும் தீவல்ல. ஒரு காலத்தில் தீவாக இருந்திருக்கலாம். ‘காரேறு மூதூர்’ எனக் கொண்டு “கார் காத்த வேளாளரின் தீவு” எனவும் வழங்குவர்.
சுவாமி விபுலானந்தர், சுவாமி நடராஜானந்தர், சித்தானைக்குட்டிச் சித்தர், சிவாச் சித்தர் போன்ற ஆன்மீகப் பெரியார்கள் வாழ்ந்த பெருமைவாய்ந்த கிராமம் இக்கிராமமாகும்.
காரைதீவு அம்பாறை மாவட்டத்தில் காணப்படும் மிக முக்கியமான கண்டல் சூழற்றொகுதியை தன்னகத்தே வைத்துள்ள ஒன்றிரண்டு பிரதேசங்களில் மிக மிக முக்கியமான பிரதேசமாகும். அதன் வனப்பும், அழகும், தாவரங்களும், செடி, கொடிகளும், விலங்குகளும் பறவைகளும் தனிச் சிறப்புக்குரியவை. தனியே கிண்ணமரங்களை வைத்திருக்கும் அதிசயக் காடாகும்.
கடல் வளமும் நிலவளமும் நிறைந்த காரைதீவு கண்ணகி அம்மன் வழிபாட்டு வரலாறு கொண்ட ஊராகும்.
ஈழ போராட்டத்தில் காரைதீவு இம் மண்ணில் தனது தீயாகத்தையும் கரைந்துள்ளது. பல மாவீரர்கள் போராளிகள் ஆன்மீகத் தலைவர்கள் அறிஞர்கள் படைப்பாளிகள் கலைஞர்கள் என பலரை உருவாக்கி கம்பீரமாக நிற்கிறது காரைதீவு.