குன்றக்குடி அடிகள் (சூலை 11, 1925 – ஏப்ரல் 15, 1995) சமயம், இலக்கியம், மட்டுமன்றி பேச்சுத்திறன், எழுத்துத்திறன், இசை போன்று பல துறைகளிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர்.
வாழ்க்கைக் குறிப்பு
நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்துள்ள திருவாளப்புத்தூருக்கு அருகிலுள்ள நடுத்திட்டு என்னும் சிற்றூரில் சீனிவாசப் பிள்ளை – சொர்ணத்தம்மாள் தம்பதிக்கு குன்றக்குடி அடிகளார் பிறந்தார். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் அரங்கநாதன். அவருக்கு முந்திப் பிறந்த சகோதரர் இருவர்; சகோதரி ஒருவர்.
அப்போது அவன், நான்காம் வகுப்பு பயிலும் சிறுவன். வழக்கறிஞரும், தமிழ்ப்பேராசிரியருமான ரா. பி. சேதுப்பிள்ளையின் வீட்டில், அவரது அறையின் ஜன்னல் முன் நின்று தினம் ஒரு திருக்குறள் ஒப்பித்துக் காலணா பெறுவது அரங்கநாதனின் வழக்கம். இவ்வாறு அரங்கநாதனின் வாழ்வை உயர்த்திய திருக்குறள், பின்னாளில் அடிகளாரான அவருக்குப் பொதுநெறி ஆகியது. இதே போல, அரங்கநாதனின் பிஞ்சு உள்ளத்தில் தீண்டாமை விலக்கு உணர்வும், மனிதநேயப் பண்பும் குறிக்கோள்களாகப் பதியக் காரணமானவர் விபுலானந்த அடிகள் ஆவார்.
பள்ளி இறுதி வகுப்புவரை படித்த அரங்கநாதன், தருமபுர ஆதீனத்தில் கணக்கர் வேலை இருப்பதை அறிந்து 1944 ஆம் ஆண்டு அப்பணியில் சேர்ந்தார். 1945-48 கால இடைவெளியில் முறைப்படி தமிழ் கற்று வித்துவான் ஆனதும் அங்கேதான். அத்திருமடத்தின் 25ஆவது பட்டமாக வீற்றிருந்த தவத்திரு சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், அரங்கநாதனைத் துறவுக்கு ஆட்படுத்திக் கந்தசாமித் தம்பிரான் ஆக்கினார்கள்.
1945ஆம் ஆண்டு தருமபுர ஆதீனத்தின் கட்டளைத் தம்பிரானாக நியமனம் பெற்ற கந்தசாமித் தம்பிரான், சமயம் தொடர்பான பல பணிகளைத் திறம்பட ஆற்றினார். அவர் தருமையாதீனத்தின் சார்பில், குன்றக்குடித் திருவண்ணாமலை ஆதீன குருபூஜை விழாவொன்றில் பங்கேற்றுச் சொற்பொழிவாற்ற நேர்ந்தது. கந்தசாமித் தம்பிரானின் நாவன்மையால் கவரப்பட்ட குன்றக்குடித் திருமட ஆதீனகர்த்தர் திருப்பெருந்திரு ஆறுமுக தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் முறைப்படி தருமையாதீனத்திடம் இசைவுபெற்றுத் தமது திருமடத்துக்கு ஆதீன இளவரசராகக் கந்தசாமித் தம்பிரானை ஆக்கினார்.
அப்போது தெய்வசிகாமணி “அருணாசல தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்” என்ற திருப்பெயரும் அவருக்குச் சூட்டப்பட்டது.
1949 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 இல் ஆதீன இளவரசராகிய அவர், 1952 ஜூன் 16 ஆம் தேதி முதல் அத்திருமடத்தின் தலைமைப் பொறுப்பேற்று, 45ஆவது குருமகா சந்நிதானமாக விளங்கினார். பின்னர் தம் பணிகளால், அடிகளார் ஆகி, ஊர்ப்பெயர் இணைய, குன்றக்குடி அடிகளார் என்று மக்களால் சிறப்புடன் அழைக்கப்பட்டார். அடிகளார் ஆதீனப் பொறுப்பேற்ற காலம், இந்து மதத்திற்கு மிகவும் சோதனையான காலம். இறைமறுப்புப் பிரசாரங்களால் தாக்குதலுக்கும், கண்டனத்துக்கும் உரியதாக இந்து மதம் ஆயிற்று. இதன் எதிர்கால விபரீதங்களை மனதில் எண்ணிய அடிகளார், காலத்திற்கேற்ப, இந்து மதத்தின் உன்னத சீலங்களைப் புரியவைக்கும் முயற்சியில் இறங்கினார். இதன்பொருட்டு 1952 ஆகஸ்ட் 11 ஆம் நாள் சமயச் சான்றோர்களையும், பெருந் தமிழறிஞர்களையும் குன்றக்குடியில் ஒன்றுதிரட்டிப் பெரும் மாநாடு ஒன்றை நடத்தினார். அதன்விளைவாகத் தோன்றியதே “அருள்நெறித் திருக்கூட்டம்”.
1954 ஜூலை 10 ஆம் நாள் இதன் முதல் மாநாடு தேவகோட்டையில் மூதறிஞர் இராஜாஜி தலைமையில் நடைபெற்றது. பின்னர் முழு வீச்சோடு செயல்பட்ட இவ்வியக்கத்தின் கிளைகள் தமிழகம் மட்டுமல்லாது, இலங்கையிலும் கிளைத்தன. அதன் செயலாக்கப்பிரிவாக “அருள்நெறித் திருப்பணி மன்றம்” எனும் அமைப்பும் 1955 ஜூன் 10 ஆம் நாள் கிளைத்தது. அப்போதைய தமிழக அரசின் துணையோடு தமிழ்நாடு “தெய்வீகப் பேரவை” எனும் அமைப்பு, 1966 இல் ஆரம்பிக்கப்பட்டது. தருமை ஆதீன குருமகா சந்நிதானம் தலைமையேற்ற இப்பேரவையில் அவருக்குப்பின், 1969 முதல் 1976 வரை அடிகளார் தலைமையேற்று அரும்பணிகள் பல ஆற்றினார்.
வெளிநாடுகள் பயணம்
வெளிநாடுகள் பலவற்றுக்கும் சென்று வந்தார் அடிகளார். அவர் மேற்கொண்ட அந்த மேலைநாட்டுப் பயணங்கள், அவரைத் தமிழ்நாட்டின் பண்பாட்டுத் தூதுவராகவும், அங்குள்ள தமிழ் மக்களின் வளர்ச்சிக்குத் துணைபுரிபவராகவும் ஆக்கின. இவ்வாறு, அவர் 1972 இல் சோவியத் ஒன்றியத்தில் மேற்கொண்ட பயணத்தின் விளைவாக தோன்றியது தான் “குன்றக்குடி கிராமத்திட்டம்”.
இதழ்கள் வெளியிடல்
பேச்சுக்கு நிகராக, எழுத்திலும் வல்லவரான அடிகளார், தம் வாழ்நாளில் ஏராளமான நூல்களை எழுதியதோடு, மணிமொழி, தமிழகம், அருளோசை முதலிய இதழ்களையும் நடத்தினார். அவர் ஆரம்பித்து, இன்றளவும் வந்துகொண்டிருக்கும் மக்கள் சிந்தனை, அறிக அறிவியல் ஆகிய இதழ்களும் குறிப்பிடத்தக்கன.
விருதுகள்
தமிழ்நாடு அரசின் முதல் திருவள்ளுவர் விருது 1986ல் வழங்கப்பட்டது.
அண்ணாமலைப் பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டம் (D.Litt) 1989ல் வழங்கிச் சிறப்பித்தது.
இந்திய அரசின் அறிவியல் செய்தி பரப்பும் தேசியக்குழு, 1991ல் தேசிய விருது வழங்கிச் சிறப்பித்தது.