×

அவனில்லாமல் போனால்… – கடற்கரும்புலி லக்ஸ்மன்   “ வெடிவாயன்”

அவனில்லாமல் போனால்…
– கடற்கரும்புலி லக்ஸ்மன்
“ வெடிவாயன்”
பொருத்தமான பெயர்.

கூப்பிட்டால் செல்லமாகக் கோபித்துகொண்டு ஒற்றைக் காலால் துரத்திச்செல்வான். யாழ் “ மணியந்தோட்டம் – 2 “ பயிற்சி முகாமில் இராணுவ பயிற்சி  பெற்ற லக்ஸ்மன் என்ற  புலி வீரனின்  முதல்  போர் களம், யாழ்  கோட்டை இராணுவ  முகாம்  மீதான தாக்குதல்  நடவடிக்கையாகும். அதைத் தொடர்ந்து மாங்குளம் ,சிலாபத்துறை ,ஆனையிறவு ,மணலாறு ,காரைநகர் ,பலாலி என்று  சிங்கள  ஆக்கிரமிப்பாளர்களின்  அத்தனை  முகாம்கள் மீதும்  அந்த  வீரன்  போர்  தொடுத்தான் .

தச்சன்காட்டில் – பலாலிப்பெருந்தளத்தின் ஒருபகுதி காவல் வீயூகத்தை உடைத்தெறிய முனைந்த ஒரு தாக்குதலில், கை எலும்புகளையும் நொருக்கி, வாய்ப்பகுதியையும் பிளந்து விட்டன துப்பாக்கிச் சன்னங்கள். ஒரு துண்டு இல்லாமல் போய்  ஒரு பக்கமாய் இழுபட்டு நெளிந்து போயிருந்த வாயால் அவன் பேசும் போதும் , பார்க்க அழகாய்த்தான் இருக்கும்.

பண்டத்தரிப்புக்கு பகைவன் நகர்ந்த சண்டையில் காலை இழந்தவன், “பலவேகய  – 2 “இராணுவ நடவடிக்கை தொடங்கிய போது, பொய்க்கால் பொருத்திக் கொண்டு ஆனையிறவுக்கு ஓடினான்.ஆனாலும், இயக்கச்சி பகுதியில்  வைத்து தளபதியால் போருக்கு செல்லவிடாமல்   அவன் திருப்பி அனுப்பப்பட்டான். குடிமகனொருவன் தன் தாய் மண்ணுக்காகச் செய்யக் கூடிய அதி உயர்  தியாகத்தை தான் செய்ய வேண்டுமென்ற வேட்கையை சுவாசக்காற்றாய் சுமந்துகொண்டு திரிந்தான் அந்தக் கடற்புலி.

அந்தச் சந்தர்ப்பத்திற்காக அவன் கடல் மடியில் தவம் கிடந்த நாட்கள் ஏராளம். சதுரங்கப் பலகையில் – தனது சேனையை மதிநுட்பத்தோடு வழிநடாத்தி எதிராளளிகளின் அரசுகளை முற்றுகையிட்டு ,முறியடித்து வீழ்த்துகின்ற அந்தச் சதுரங்க வீரன், கற்பிட்டிக்கடலில் – ஒரு கரும்புலியாக எதிரியின் ‘கடல் அரசனைத்’ தகர்த்து மூழ்கடித்தான்.

“’ஆசிர் “ கடற்பயிற்சிப் பாசறையில் தளபதி சாள்ஸ் வளர்த்தெடுத்த கடற்புலி வீரர்களுள் , லக்ஸ்மனும் ஒருவன். கிளாலிக் கடல் போர்களத்தில் அந்த வீரத்தளபதி வீழ்ந்த போது, அவனது கைகளில் வளர்ந்த இந்தக் கரும்புலிக் குழந்தைகள் வெகுண்டெழுந்தார்கள். சுட்டெறித்துச் சாம்பலாக்க எங்கள் கடலெங்கும் பகைவனைத் தேடியலைந்தார்கள். பருத்தித்துறையில் ‘சுப்படோறா’ வைத் தகர்த்த போதும், அவன் இதயத்தில் விழுந்த அந்த ஆழமான காயம் ஆறவேயில்லை.

அந்தத் தளபதியின் நினைவோடு ஆரம்பிக்கப்பட்ட பயிற்சிக்கல்லூரியில்  பயின்று வெளியேறிய மாணவர்கள் தான் – சிலாபத்துறையில் – பகைவனின் மடியில் மூட்டிமோதி, “சாகரவர்தனா” என்ற பகைவனின்  கப்பலை  சாகடித்துச் சாதனை படைத்தார்கள். லக்ஸ்மன் இயல்பாகவே புத்திசாலி, பொதுவான எல்லாவிடயங்களைப் பற்றியும் அவனது சிந்தனை ஓட்டம்   இருந்தது.  இந்தப் பூமிப்பந்தில் மானிடன் கண்டுபிடித்தஎல்லாவற்றையும் பற்றித் தானும் அறிந்திருக்க வேண்டும் என்ற முனைப்பும் முயற்சியும் கொண்டவன் லக்ஸ்மன். அந்த ஆர்வத்தினால் – எல்லாவற்றையும் பற்றித் துருவித் துருவி ஆராய்வான்.

‘பிரணவன்’  அவனது இயற் பெயர் ,     பிறந்தது 05.07.1974 இல். பிறந்த ஊர் நல்லூர் சங்கிலி மன்னனின் பழைய இராசதானி.
படித்தது யாழ்ப்பாணம் ‘ஸ்ரான்லி கல்லூரி’யில் விளையாட்டில்  துடுப்பாட்டம்  மிகவும் பிடித்த விளையாட்டு, வீட்டில் துடுப்போடும் பந்தோடும் தான் படுக்கைக்குப் போவானாம். லக்ஸ்மனுக்கு சண்டையில் வெடிபட்டு, ஒரு கையில் இயக்கம் இல்லாமல் போய் விட்டது. பண்டத்தரிப்பில் மிதிவெடி வெடித்து ஒரு காலின் பாதம் சிதைந்து போய்விட்டது. இருந்த போதும் – கடலில் இறங்கி, தோழர்களின் தோள்களைப் பற்றி மெல்ல மெல்ல நீந்தப் பழகியவன் – கொஞ்சகாலத்திற்குப் பிறகு , தன்னந்தனியாக நீந்திக் கடந்த தூரம் 5 கடல்மைல்கள். லக்ஸ்மன் நல்லதொரு படகோட்டி. நீண்டகால அனுபவம் பெற்றிருந்தவர்களை விடவும் குறுகிய காலத்திற்குள் அவன் பெற்றிருந்த திறமை எங்களை ஆச்சரியப்பட வைத்தது.

கடற்புலிகளில் சிறந்த படகோட்டிகளுள் ஒருவனென அவனைச் சொல்ல முடியும். இன்னதென்று இல்லாமல், என்னவிதமாக வடிவமைக்கப்பட்ட படகையும் தனது கைகளுக்குள் அவன் வசப்படுத்துவான்.

லக்ஸ்மனின் படகு உறுமிக்கொண்டு தண்ணீரை  கிழித்துக்கொண்டு  அசுரவேகத்தில் எதிரியின்  படகை விரட்டும் போது,  எதிரி தாக்குபிடிக்க  முடியாது  தலைதெறிக்க  ஓடுவான் . அவன் படகை வேகமூட்டும் போது படகு  பக்கவாட்டில் சரிந்து வளையும் – தண்ணீர் அள்ளித தெறிக்கும். இயந்திர இயக்கத்தை அவன் உச்சப் பயன்பாட்டுக்கு உயர்த்த, படகு அசுர வேகத்தைப் பெறும் – அலை கிழிந்து வழி விடும் – கடல் பிளக்கும். நெளிந்த வாயை இன்னும் நெளித்து அவன் ஆனந்தமாய்ச் சிரிப்பான். அந்தி சாய்கிற செவ்வானப் பின்னணியில் ஆகா! அது ஒரு கண்கொள்ளாக் காட்சி தான்….. லக்ஸ்மன் என்ற  கரும்புலி வீரனின்  கவலை எல்லாம்,  அவனது  தாக்குதல்  இலக்கு முக்கியத்துவம் குறைந்ததாக இருந்து விடக்கூடாது என்பதாகும்.

ஒரு கரும்புலி வீரனென்ற வகையில் தனக்குள்ளிருந்த அந்த மன ஏக்கத்தை அந்த நண்பன் எங்களுடன் பகிர்ந்து கொள்வதுண்டு. நெடுநாளாய் தேடிய பெரியதாக்குதல்  இலக்கிற்கான வாய்ப்பு , கடலில் வருவதாக வேவு வீரர்கள் தகவல் தந்த ஒரு மாலைப்பொழுது, அவனது அன்புத் தங்கையின் “ பூப்புனித நீராட்டு “ நிகழ்வில்  பங்கேற்க  புறப்பட்டுக்கொண்டிருந்தான் அந்த அண்ணன், ஆசைத் தங்கை, அதிலும் ஒரு முக்கியமான நிகழ்வு , அண்ணன் வருவானென்று தங்கை  காத்துக்கொண்டேயிருப்பாள்; இனி ஒருபோதும் பார்க்கக் கிடைக்காமலும் போகலாம்… அங்கேயும் போக வேண்டும்.

பெற்றெடுத்த தேசம், பிணங்களாய் தினம் ஒதுங்கும் எமதினிய மக்கள், பகைவனின் ஆளுகையில் எம் கடல், தேடி அலைந்த இலக்கு தவறவிட்டுவிடக்கூடாத ஒரு சந்தர்ப்பம்… இங்கேயும் நிற்க வேண்டும். அவனில்லாமல் போனாலும் அடிப்பதற்கு வேறு வீரர்கள் தயாராகவும் இருந்தார்கள், ஆனாலும் அந்தத் தர்மசங்கடமான நிலைக்கு அவன் சுலபமாக  முடிவெடுத்தான். படகைத் தயார் செய்து கடலில் இறக்கினான். நல்ல காலம்… பகைவனுக்கும் அவனது தங்கைக்கும் நல்ல காலம் – காலநிலை வாய்ப்பாக அமையாததாலும் வேறு காரணங்கள் தடையாக வந்ததாலும் பகைவன் தப்பிவிட்டான். மறுநாள் தான் தளபதிக்கு செய்தி தெரிந்த போது ! அவனைத் துரத்தி  வீட்டுக்கு  அனுப்பிவைத்தார். அதைப்போலவே,  இன்னொரு நாள், இன்னொரு முனை, இன்னொரு இலக்கு, இன்னொரு தயார்ப்படுத்தல், இன்னொரு தங்கைக்கு “ பூப்புனித நீராட்டு “ நிகழ்வு மீளவும் ஒரு இக்கட்டான நிலை – புறப்படுவதற்கு முன்னாலிருந்த சின்ன இடைவெளிக்குள் – ஓடோடி வீட்டுக்குச் சென்று, எல்லோரோடும் ஒன்றாயிருந்து, அன்புத் தங்கையை ஆரத் தழுவி முத்தமிட்டு விடைபெற்றுப் போனவன்…..போனதுதான்.

காத்துக்கொண்டிருந்தவர்களுக்கு – சிலாபத் துறையில் கப்பலடித்த அந்தச் செய்திதான் வந்தது!

நினைவுப்பகிர்வு – விடுதலைப்புலிகள் இதழ்
ஐப்பசி – கார்த்திகை, 1994

கடற்கரும்புலி லக்ஸ்மன்

விடுதலைப்புலிகள் குரல் 52

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments