×

எல்லாளன் நடவடிக்கையில் முக்கியபங்காற்றிய லெப்.கேணல் தமிழ்மாறன்….

எல்லாளன் நடவடிக்கையில் முக்கியபங்காற்றிய லெப்.கேணல் தமிழ்மாறன்….

​22.10.2007 அன்றைய நாளை தமிழ் மக்கள் மட்டுமல்ல, சிங்கள மக்களும் ஏன் உலக இராணுவ வல்லுனர்களும் இலகுவில் மறந்து விடமாட்டார்கள். எல்லாளனைத் தோற்கடித்ததாகப் பெருமைகொண்ட சிங்கள இனத்திற்கு, யார் எல்லாளன் என்பதை தமிழீழ தேசியத் தலைவர் காண்பித்த நாள் அது. ஏன் இந்த உலகமும் எல்லாளனை அறிந்துகொண்டது அந்த நாளில்தான்.

இந்த எல்லாளன் நடவடிக்கை ஒரு சில மணி நேரங்களுக்குள் நடந்து முடிந்துவிட்டபோதும், இதற்கான திட்டமிடல்களும், பயிற்சிகளும், வேவுகளும் மிக நீண்ட காலமாக இடம்பெற்றன. இந்த வெற்றிக்காக கொடுக்கப்பட்ட விலையும் மிகவும் அதிகம். இந்த வெற்றிக்காக 21 அற்புதமான போராளிகள் தங்கள் உயிர்களை விலையாகக் கொடுத்திருக்கின்றார்கள். இவர்களின் உயிர்த்தியாகமும், இந்தத் தாக்குதலுக்கான காத்திருப்புகளும், விட்டுக்கொடுப்புக்களும், இழப்புக்களும் வீண்போகவில்லை, வீண்போகவும் மாட்டாது.

ஒரு ஆண்டிற்கும் மேற்பட்ட கடும் பயிற்சியில்தான் இந்த எல்லாளன் பிறப்பெடுத்தான். இதற்கான வேவு நடவடிக்கைகள் ஆண்டுக்காணக்காக நடைபெற்றன. வேவுப் போராளிகளின் நடவடிக்கையினால்தான் அந்தப் பிரமாண்டமான தளத்தின் பல உண்மைகள் கொண்டுவந்து சேர்க்கப்பட்டன. அநுராதபுரம் விமானப்படைத் தளத்திற்கான வேவு நடவடிக்கைக்கென சிறப்பு அணியாக நான்கு பேர் கொண்ட வேவு அணி ஒன்று உருவாக்கப்பட்டிருந்தது. அந்த வேவு அணியின் பொறுப்பாளராக லெப்.கேணல் தமிழ்மாறன் நியமிக்கப்பட்டிருந்தார்.

அநுராதபுர வான்படைத் தளத்தினை முழுமையாக வேவு அணியினர் கண்காணித்து ஒளிப்படம் (வீடியோ) எடுத்து, எங்கு எங்கு காவலரண்கள் இருக்கின்றன. அங்கு பொருத்தப்பட்ட ஆயுதங்கள் என்ன, எந்த எந்தப் பகுதிகளில் விமானங்கள் தரித்து நிக்கின்றன என்பன தொடர்பான முழுமையான தகவல்கள் வேவு அணியினரால் சேகரிக்கப்பட்டிருந்தது. இந்தத் தகவல்களை உள்வாங்கி எல்லாளன் நடவடிக்கைகான செயற்திட்டங்கள் தமிழீழ தேசியத் தலைவரால் நேரடியாக வகுக்கப்பட்டு, படையப் புலனாய்வுத்துறை பொறுப்பாளராக இருந்த றெட்ணம் மாஸ்ரர் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

இந்தத் தாக்குதலுக்காக 21 கரும்புலிப் போராளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். அத்துடன், இந்தத் தாக்குதலுக்கான திட்டம் வெளியில் அல்ல போராளிகளின் உயர் மட்டங்களில் கூட தெரியாத அளவிற்கு மிகவும் இரகசியம் காக்கப்பட்டிருந்தது. இந்தத் தாக்குதலுக்காக ஒருங்கிணைக்கப்பட்டிருந்த 21 கரும்புலி போராளிகளிடமும் தாக்குதலுக்கான திட்டங்கள் நேரடியாக விபரிக்கப்படும். இந்தத் தகவல்களை உள்வாங்கி தாக்குதல் திட்டங்களை இந்த அணிக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்த சிறப்பு கரும்புலி லெப்.கேணல் இளங்கோ ஏனைய கரும்புலிப் போராளிகளுக்கும் அத்திட்டத்தை புரியவைப்பான்.

இந்தக் கரும்புலி அணியினருக்கான பயிற்சிகள் ‘அல்லா-4’ என்ற பயிற்சித் தளத்தில் சிறப்புற ஒழுங்கமைக்கப்பட்ட இடங்களில் நடைபெற்றுக்கொண்டிருந்தது. சில தேவைகள் கருதி வேறு இடங்களிலும் நகர்வுப் பயிற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. பயிற்சி ஆசிரியருடன் லெப்.கேணல் இளங்கோவும் ஒரு பயிற்சி ஆசிரியராக அன்று செயற்பட்டுக்கொண்டிருந்தான்.

இந்நிலையில் தாக்குதலுக்கு முன்னான மாற்றங்கள் குறித்து அறிந்துகொள்வதற்காக அநுராதபுர வான்படைத் தளத்திற்கான இறுதி வேவு நடவடிக்கை லெப்.கேணல் தமிழ்மாறன் தலைமையிலான வேவு அணியினர் மேற்கொண்டிருந்தார்கள். அந்த இறுதி வேவு நடவடிக்கையே 8 மாத காலப்பகுதியாக நடைபெற்றது.

அனைத்து தரவுகளும் உறுதிப்படுத்திக்கொண்டு, இறுதி வேவு பார்த்துவிட்டு தளம் திரும்பிக் கொண்டிருக்கையில்தான் அந்த வெடிவிபத்து இடம்பெற்றது. சிங்களக் கிராமங்களின் ஊடாக அனுராதபுர காட்டுப்பகுதியில் வேவுப் போராளிகள் சென்றுகொண்டிருந்தபோது, அந்தபகுதியில் பொருத்தி வைக்கப்பட்டிருந்த கட்டுக்குழல் துவக்கில் அகப்பட்டு தமிழ்மாறன் காயம் அடைகின்றான். காயத்துக்கான முதலுதவியுடன் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதி நோக்கி வேவு அணியினர் நகர்கின்றார்கள். இவர்களின் வருகைக்காக அன்று மன்னார் மாவட்டத்தின் எல்லைப் பகுதி ஒன்றில் தளபதி றெட்ணம் மாஸ்ரர் அவர்களும், லெப்.கேணல் இளங்கோவும் காத்திருக்கின்றார்கள்.

அடம்பன் பகுதியில் வேவு அணியினர் இவர்களை சந்திக்கின்றார்கள். அங்கிருந்து வாகனம் ஒன்றில் கிளிநொச்சி நோக்கி பயணத்தை தொடர்கின்றார்கள். இந்த காலகட்ட பகுதியில் சிறீலங்காவின் ஆழ ஊடுருவும் படையினர் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் ஊடுருவி கிளைமோர் தாக்குதல்களை பரவலாக நடத்திக்கொண்டிருந்தார்கள். அந்நிலையில் இவர்களது வாகனமும் சிறீலங்காப் படையினரின் கிளைமோர் தாக்குலுக்கு இலக்காகின்றது. ஆனால் உயிர்சேதம் ஏதுவும் ஏற்படவில்லை. உடனடியாக வாகனத்தில் இருந்த இளங்கோ மற்றும் வேவு அணி போராளிகள் காட்டுக்குள் இறங்கி தாக்குதல் தொடுத்து, எதிரியை விரட்டிக் கலைத்தார்கள்.

அன்று அந்தக் கிளைமோர் தாக்குதலில் இவர்களுக்கு ஏதும் நடந்திருந்தால், எல்லாளன் நடவடிக்கை அன்றே இடைநிறுத்தப்பட்டிருக்கும். இவ்வாறான சூள்நிலையில்தான் அன்றைய இறுதி வேவு தகவல்களுடன் போராளிகள் தலைமைப்பீடத்தினை சென்றடைந்து அங்கு அனைத்தையும் பற்றி விபரிக்கின்றார்கள். பின்னர் கரும்புலிகள் அணியினருக்கு விளங்கப்

படுத்துகின்றார்கள். எல்லாளன் நடவடிக்கைக்குரிய மாதிரிப் (மொடல்) பயிற்சியும் முடிந்துவிட்டது. மாதிரிப் பயிற்சி முடிந்துவிட்டால் இனி இறுதிச் சண்டைதான் என்ற மனசந்தோசதம் போராளிகள் மத்தியில் வந்துவிடும். இதன்பின்னர்தான் தலைவருடன் படம் எடுத்து, உணவு உண்டு அளவளாவி பேசி விடைபெறுகின்றார்கள். யாருக்கும் தெரியாமல் ஊர் மக்கள் உலாவிய அந்த வீதியால்தான் அநுராதபுரம் நோக்கி நகர்கின்றார்கள். அந்த 21 சிறப்புக் கரும்புலிகளும் அந்த இரவுப் பொழுதில் தாம் உலாவிய நகர்களுக்கு விடை

கொடுக்கின்றார்கள். இவர்கள் நகர்ந்து சொல்லவேண்டிய தூரம் 50 கிலோ மீற்றருக்கு அதிகம் என்றுதான் சொல்லவேண்டும்.

காட்டுக்குள்ளால் தங்களுக்கு தேவையான வெடிமருந்து உணவுகளுடன் எத்தனையோ ஆறுகளை தாண்டிசெல்லவேண்டிய தேவை. இவ்வாறு நகர்ந்து சென்றுதான் தமது இலக்கினை அடைந்துகொள்கின்றார்கள். இவர்களை அந்த வேவு அணி போராளிகள்தான் இலக்குவரை கொண்டுசென்று விடுகின்றார்கள். உண்மையில் சிங்கப்படையினைபோல் பிணந்தின்னும் கழுகுகளாக அவர்கள் போகவில்லை. இறுதியாக தலைவர் அவர்கள் கூறிய வார்த்தைகளை மனதில் சுமந்தபடியே சென்றார்கள். “இதுமுற்றுழுதாக படைத்தளம். அங்கு உங்கள் வீரத்தைகாட்டுங்கள். ஆனால் படை அதிகாரிகள் யாரினாவது குடும்பங்கள், பிள்ளைகள் அங்கு நிற்கக்கூடும். தாக்குதல் நடக்கேக்க அவர்களை பத்திரமாக அகற்றி, அவையளுக்கு ஒன்றும் நடக்காமல் பாத்துக்கொள்ளுங்கள்” என்ற தலைவரின் அக்கறையையும், மனித நேயத்தையும் அந்தக் கரும்புலி அணியினர் புரிந்துகொண்டிருந்தனர்.

தலைவர் அவர்கள் கூறிய வார்த்தைளை நினைவிற்கொண்டு அந்தக் கரும்புலி மறவர்கள் சிங்களத்தின் குகைக்குள் புகுந்துகொள்கின்றார்கள். அந்தவீரர்களின் ஒவ்வொரு நகர்வும் தலைமைப்பீடத்திற்கு தெரியப்படுத்திக்கொண்டிருந்தார்கள். 21 சிறப்பு கரும்புலிகள் தமிழீழ எல்லை கடந்து எதிரியின் எல்லைக்குள் புறப்பட்ட கணம் முதல் தலைவர் அவர்கள் அந்த வீரர்கள் பற்றியே சிந்தித்துக்கொண்டிருந்தார். அன்று அதிகாலை பொழுது நகர்ந்துகொண்டிருக்கின்றது.

முதன்நாள் இரவு சில தளபதிகளை தலைவர் அவர்கள் தனது இடத்திற்கு அழைத்திருந்தார். காரணம்தெரியாமலேயே தளபதிகள் அங்கு கூடியிருந்தனர். அப்போது, ‘இன்று உங்களுக்கு எல்லாளனை காட்டபோகின்றேன்’ என்று சொல்லிவிட்டு அடுத்துவரும் தகவல்களுக்காக தளபதிகளும் தலைவரும் காத்திருக்கின்றார்கள். பெரும் இலட்சிய நெருப்பை சுமந்து செல்லும் அந்த வீரர்கள் உச்சமான சாதனை புரிந்து தமிழீழ மண்ணின் வரலாறாக வேண்டும் என நினைத்துக்கொண்டிருக்கையில், இலக்கினை அடைகின்றார்கள் கரும்புலிகள்.

இந்த சிறப்பு கரும்புலிகள் அணியினருக்கு வழிகாட்டி அநுராதபுர தளத்திற்குள் கொண்டுசென்று விட்ட வேவு அணியினர், தகவல்களை தலைமைபீடத்திற்கு தெரியப்படுத்தி, உறுதிப்படுத்துவதற்காக ஒளிப்படம் எடுக்கின்றார்கள். தாக்குதல் தொடங்குவதில் இருந்து அநுராதபுரம் தீ மூழும்வரை ஒளிப்படம் எடுத்தவர்கள், கரும்புலிகள் அணியினரின் அனைத்து செயற்பாடுகளையும் தொலைத்தொடர்பு ஊடாக கேட்டுக்கொண்டு அதனை தலைமைப்பீடத்திற்கு தெரியப்படுத்திக்கொண்டும் நின்றார்கள்.

அதிகாலை 1.30 மணி, அனுராதபுர வான்படைத்தளம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கின்ற வேளையில், உள்நுழைந்தவர்கள், அதிகாலை 3.00 மணிக்கு தாக்குதலைத் தொடுக்கின்றார்கள். 21 கரும்புலிகள் சுமார் ஏழு மணி நேரம் அப்பெரும் தளத்தை தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்திருந்தது ஒரு பெரும் சாதனை. சண்டை 10.00 மணிக்கு இறுதிக் கரும்புலியின் வீரச்சாவுடன் நிறைவுக்கு வருகின்றது. இலக்குகளை தாக்கி அழித்துவிட்டு பெரும் வெற்றியைத் தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுத்துவிட்டு கரும்புலிகள் அனைவரும் விழிகளை மூடிக்கொண்டார்கள்.

இவர்களின் வீரச்சாவை உறுதிப்படுத்திக்கொண்டுதான் லெப்.கேணல் தமிழ்மாறன் தலைமையிலான வேவு அணியினர் தாயகம் நோக்கி திரும்புகின்றார்கள். கரும்புலி அணியினரின் தாக்குதலுக்கு பக்கபல உதவியாக விடுதலைப் புலிகளின் வான்புலிகளும் குண்டுகளை வீசி அநுராதபுரம் வான்படைத்தளத்தின் மீது தாக்குதல் தொடுத்துவிட்டு தளம் திரும்பி விடுகின்றார்கள். எதிரியின் சரமாரியான தாக்குதலுக்கு மத்தியிலும் வான்புலிகள் நடத்திய இந்தத் தாக்குதல் வான் புலிகளின் தாக்குதல் வரலாற்றில் ஒரு மைல்கல் என்றுதான் கூறவேண்டும்.

இந்நிலையில் சிறீலங்காப் படைக்கு உதவிக்கு வந்த உலங்குவானூர்தி ஒன்றும் சுட்டுவீழ்த்தப்படுகின்றது. ஒரு சில மணி நேரங்களுக்குள் பல கோடி பெருமதியான போர் விமானங்களையும், இராணுவ தளவாடங்களை இழந்தது. இந்த அவமானத்தை தாங்கமுடியாத சிங்களத் தலைமைகளும், சிங்களப் படையினரும் தமது ஆற்றமையினை அந்தப் போராளிகளின் வித்துடல்கள் மீது காண்பித்தார்கள். அந்த வழித்தோன்றல் நாகரீகம் சிங்களத்தோடு கூடப்பிறந்தது என்பதை முள்ளிவாய்கால் வரையான படுகொலைகளின் சாட்சியங்களும் இப்போது எடுத்துக்காட்டுகின்றன.

அன்று அந்த 21 சிறப்பு கரும்புலிகளும் அநுராதபுரம் வான்படைத் தளத்தில் மட்டும் தீயினை மூட்டவில்லை, பெரும் விடுதலைத் தீயினை உலகில் பரந்துவாழும் தமிழ் மக்களின் இதயங்களில் மூட்டியிருக்கின்றார்கள். நிச்சயம் தமிழீழம் அமைப்பது உறுதி அந்த மாவீரர்களின் இலட்சிய கனவு நனவாவதும் உறுதி.

லெப். கேணல் தமிழ்மாறன். இந்த வீரனை எல்லோருக்கும் வெளியில் தெரியாது. அந்த 21 சிறப்பு கரும்புலிகளுடன் ஒன்றாக அதிகம் பழகியவன். ‘எதிரியே உன் படுக்கையைத் தட்டிப்பார் அதற்குக் கீழும் கரும்புலி உறங்குவான்’ என்ற கவிஞரின் வரிகளில் வேவுப் புலிகளையும் சேர்க்கவேண்டும் என்று சொல்லும் அளவிற்கு அநுராதபுர வான்படைத் தளத்தினுள் சிங்களபடைக்கு அருகில் ஒன்றாக படுத்து உறங்கிய ஒரு துணிச்சல் மிக்க புலி.

சிங்களப் படையின் பெரும் இன அழிப்புப் போரில், முள்ளிவாய்க்கால் வரை எதிர்நின்று சமராடிய வீரன். அந்த முள்ளிவாய்க்கால் மண்ணிலேயே விதையாக வீழ்ந்தான்…

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்.

Operation Ellalan

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments