மலேயா வாழ் தமிழர்களின் நிலையைக் கண்டு மனம் கொதித்து அவர்களின் துயர் துடைக்க தொண்டாற்றியவர் மலேயா கணபதி. பாட்டாளி வர்க்கத்தின் பாதுகாவலராக விளங்கிய கணபதி ஏகாதிபத்தியப் பிடியிலிருந்து அடிமைப்பட்ட மக்களை மீட்கப் போராடிய விடுதலை வீரராகவும் திகழ்ந்தார். தமிழ்தேசிய வாதியாக, தமிழறிஞராக, தமிழ் ஆய்வாளராக, தமிழ்த்தொண்டராகவும் திகழ்ந்தார்.
இந்திய தேசிய இராணுவத்தை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அமைத்தபோது, அவரால் அழைக்கப்பட்டு அதில் சேர்ந்து வீரர்களுக்குப் பயிற்சியளிக்கும் ஆசிரியராகத் திகழ்ந்தார் .
போருக்குப்பிறகு மலேசியாவில் உள்ள அனைத்து இனத் தொழிலாளர்களையும் ஒன்றுதிரட்டி வலிமை வாய்ந்த தொழிற்சங்க இயக்கத்தை உருவாக்கினார். பல்வேறு தொழிற்சங்கப் போராட்டங்களின் மூலம் வெள்ளை முதலாளிகளுக்கும் பிரிட்டிஷ் அரசுக்கும் சிம்மசொப்பனமாக விளங்கினார். அவரின் நடவடிக்கைகளினால் ஆத்திரம் அடைந்த பிரிட்டிஷ் அரசு அவரைக் கைது செய்தது. பொய்க்குற்றச்சாட்டுகளின் பேரில் அவருக்கு விதிக்கப்பட்ட மரணத் தண்டனையை இன்முகத்துடன் ஏற்றுத் தூக்கில் தொங்கியவர் மலேயா கணபதி ஆவார்.