தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சு.ப.தமிழ்ச்செல்வன் 1984 ஆம் ஆண்டில் தன்னை இணைத்துக் கொண்டார்.
தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் 4வது பயிற்சி முகாமில் அவர் பயிற்சியைப் பெற்று தமிழகத்தில் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் தனிப்பட்ட இணைப்பாளராக பணியாற்றினார்.
1986 இல் தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் தமிழகத்திலிருந்து தமிழீழம் வருவதற்கு முன் தாயகத்துக்கு சென்று களநிலைமைகள் பற்றிய தகவல்களை திரட்டி, மீளவும் தமிழகம் சென்று தமிழீழ தேசியத் தலைவர் அவர்களுடன் சு.ப.தமிழ்ச்செல்வன் தமிழீழம் திரும்பினார். அப்போது அவரின் விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயர் தினேஸ் என்பதாகும்.
தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
03-11-2007.
எனது அன்பான மக்களே!
சமாதான வழியில், நீதியான முறையிலே எமது மக்களது தேசியப் பிரச்சினைக்கு அமைதித்தீர்வு காணுமாறு அனைத்துலகம் அடுத்தடுத்து அழைப்புவிடுத்தபோதும், சிங்கள தேசத்திலிருந்து நல்லெண்ணம் வெளிப்படவில்லை. பௌத்தத்தின் காருண்யத்தைக் காணமுடியவில்லை. சிங்கள தேசம் தனது இதயக் கதவுகளைத் திறந்து, சமாதானத் தூதும் அனுப்பவில்லை. மாறாக, போர்க்கழுகுகளை ஏவி, இராட்சதக் குண்டுகளை வீசியிருக்கிறது. எமது அமைதிப்புறாவைக் கொடூரமாக, கோரமாகக் கொன்றழித்திருக்கிறது.
தமிழுலகமே ஆழமாக நேசித்த ஒரு அரசியல் தலைவனைச் சிங்கள தேசம் இன்று சாகடித்திருக்கிறது. தமிழீழ மக்களின் மனங்களை வென்ற ஒரு தன்னிகரற்ற தலைவனைச் சிங்களம் பலிகொண்டிருக்கிறது. எமது சுதந்திர இயக்கத்தின் அரசியற்றுறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழ்ச்செல்வனையும் ஏனைய ஐந்து போராளிகளையும் இழந்து இன்று தமிழீழ தேசம் வரலாற்றில் என்றுமில்லாத ஒரு பேரிழப்பைச் சந்தித்திருக்கிறது. இந்த மாபெரும் சோக நிகழ்வு எம்மக்களை அதிர்ச்சியிலும் ஆழ்ந்த துயரத்திலும் ஆழ்த்தியுள்ளது.
தமிழ்ச்செல்வன் எமது சுதந்திர இயக்கத்தில் இணைந்த காலத்திலிருந்தே என்னோடு ஒன்றாக, நெருக்கமாக வாழ்ந்தவன். நான் அவனை ஆழமாக அறிந்து, ஆழமாகவே நேசித்தேன். எனது அன்புத் தம்பியாகவே வளர்த்தேன். அவனது அழகிய சிரிப்பும் அதனுள் புதைந்த ஆயிரம் அர்த்தங்களையும் அவனுள் அடர்ந்து கிடந்த ஆற்றல்களையும் ஆளுமைகளையும் நான் ஆரம்பத்திலிருந்தே கண்டுகொண்டேன். இலட்சியப் போராளியாக, தலைசிறந்த தானைத் தளபதியாக, மாபெரும் அரசியல் பொறுப்பாளனாக, அனைத்துலகோடும் உறவாடிய இராஜதந்திரியாக, பேராற்றல்மிக்க பேச்சுவார்த்தையாளனாக அவனை வளர்த்தெடுத்தேன்.
தான் நேசித்த மண் விடுதலை பெறவேண்டும், தான் நேசித்த மக்கள் சுதந்திரமாக, கௌரவமாக, பாதுகாப்பாக வாழவேண்டுமென்று சதா சிந்தித்தான். தான் நேசித்த அந்த மக்களது விடுதலைக்காக, விடிவிற்காகத் தன்னையே ஊனாக உருக்கி, உறுதியாக உழைத்த ஒரு இலட்சிய நெருப்பு அவன்.
நீண்ட நெருப்பு நதியாக நகரும் எமது விடுதலை வரலாற்றில் அவன் ஒரு புதிய நெருப்பாக இணைந்திருக்கிறான். இந்த இணைவிலே, எமது கனத்த இதயங்களில் ஒரு பெரும் இலட்சிய நெருப்பை மூட்டியிருக்கிறான். எமது இலட்சிய உறுதிக்கு உரமேற்றியிருக்கிறான். இந்த உறுதியில் உரம்பெற்று, நாம் எமது இலட்சியப் பாதையில் தொடர்ந்தும் உறுதியோடு பயணிப்போம்.
‘புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்’
‘Sinhala nation has killed our dove of peace’ – LTTE Leader Pirapaharan