பழந்தமிழரின் பழஞ்சோறு உண்ணும் பழக்கம்.. தமிழர்களின் வழக்கமான உணவுகளில் ஒன்றான பழஞ்சோறு என்பது இன்று அனேகம்பேர் மறந்து விட்ட அல்லது ஞாபகத்தில் வைத்திருக்கவிரும்பாத ஒன்றாக மாறிவிட்டது . கிராம மக்களுடைய அல்லது வறிய மக்களுடைய உணவாகவே பழஞ்சோறு இன்று பல மேல்தட்டு மக்களினாலும் பார்க்கப்படுகிறது . பழஞ்சோறு உண்டேன் என்பவரைப் பரிகாசமாகப் பார்க்கின்ற அல்லது அவரை நாகரீகம் அற்றவராகப் பார்க்கின்ற போக்கு இன்று நம்மிடையே அதிலும் குறிப்பாக மேலைத்தேச உணவுகளை விரும்புகின்றவர்களிடையே, நகரவாசிகளிடையே,பணக்காரர்களிடையே காணப்படுகிறது.
நொதித்த உணவு வகைகளுள் ஒன்றான பழஞ்சோறு என்பது முதல் நாள் சமைத்த சோற்றில் தண்ணீர் ஊற்றி மறுநாள் உண்ணும் உணவாகும். சமைத்த சோறு வீணாவதைத் தடுக்க இவ்வாறு எம்மவர்கள் செய்கின்றார்கள். நொதிக்கவைத்தல் என்பது உணவுப் பொருட்களைத் தயாரிப்பதற்கும் அவற்றைக் கெட்டுப்போகாமல் பாதுகாப்பதற்குமான மிகப் பழைய உணவுத் தொழிநுட்ப முறைகளுள் ஒன்றாகும். ஆனாலும் நம் முன்னோர்களின் உடல்நலத்துக்குப் பல நூறு ஆண்டுகளாக பக்க பலமாக இருந்து வந்த பழஞ்சோறு துரதிஸ்டவசமாக துரித உணவுகளை உண்டு களித்து வரும் இன்றைய தலைமுறையினருக்குத் தெரியாமலே போய்விட்ட உணவாகிவிட்டது என்பது கவலைக்கு உரிய விடயமாகும்.
எனினும் இன்றும் கூட அநேக கிராம மக்கள், நகரத்தில வாழ்ந்தாலும் கிராமியம் பேணுகிற மக்கள் குறிப்பாக வயல் வேலை செய்பவர்கள், தோட்ட வேலை செய்பவர்கள், கடற்றொழில் செய்பவர்கள் மற்றும் ஏனைய வேலை செய்பவர்கள் வயது பால் சமூக சமய வேறுபாடின்றி பழஞ்சோற்றினை தங்களது காலை உணவாக உட்கொள்ளுகின்ற வழக்கத்தினை கொண்டிருக்கிறார்கள் .அல்லது பழஞ்சோற்றுத் தண்ணீர் குடிப்பதை தங்கள் பழக்கமாகக் கொண்டுள்ளார்கள் . இப்படித் தொழிலார்கள் கூடுதலாக பழஞ்சோற்றினை உண்பதினால் போலும் அனேகம்பேர் இதனை ஏழைகளின் அல்லது வறியவர்களின் உணவாகப் பார்க்கிறர்கள் போலும் . உண்மையில் பழஞ்சோறு என்பது பழந்தமிழர்களின் உணவாக பல நூறு ஆண்டுகள் இருந்தது என்பதை இலக்கியங்கள் வாயிலாக அறியக்கூடியதாக இருக்கின்றது . சோழநாட்டின் பிடவூர் என்ற ஊரில் உள்ள வேளாண்மை செய்யும் மக்களின் தலைவராக இருந்த பிடவூர் கிழான் என்பவரின் மகனாகிய நொடுங்கை வேண்மால் என்று அறியப்பட்ட பெருஞ் சாத்தன் என்பவரின் நெருங்கிய நண்பராக இருந்த நக்கீரர் அவனின் விருந்தோம்பும் பண்பைப் பாடும்போது “பழஞ்சோற்றப் புகவருந்திந் புகற்றளவின் பூச்சூடி அரிப்பறையாற் புள்ளோப்பி அவிழ்நெல்லி னரியலாருந்து மனைக்கோழிப் பைம்பயிரின்னே” ( புறம் – 395) என்று பழஞ்சோற்றின் பெருமையைப் பாடுகிறார்.
அதேபோன்று தோன்றிமலை என்னும் மலை ஊரின் தலைவனாகிய தாமான் தோன்றிக்கோன் என்பவரின் புகழைப் பற்றி குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் என்ற சோழ அரசனின் நெருங்கிய நண்பராகிய மாற்று வலுவுடைய அதாவது முடவராகிய ஐயூர் முடவனார் என்னும் புலவர் பாடும்போது “பழஞ்சோறு அயிலும் முழங்குநீர்ப் படப்பைக் காவிரிக் கிழவன் மாயா நல்லிசைக் கிள்ளி வளவன் உள்ளி அவன்படர்தும் செல்லேன் செல்லேன் பிறர்முகம் நோக்கேன் நெடுங்கழைத் தூண்டில் விடுமீன் நொடுத்து” ( புறம் 399) என்று பழஞ்சோற்றினைப் பற்றிக் குறிப்பிடுகிறார் . இவ்வாறே பதினோராந்திருமுறையில நக்கீரதேவ நாயனார் பாடிய திருஈங்கோய் மலை எழுபது என்ற பதிகத்தில பழஞ்சோறு என்ற சொல் இடம்பெறுகிறது . “பணவநிலைப் புற்றின் பழஞ்சோற் றமலை கணவ னிடந்திட்ட கட்டி – உணவேண்டி எண்கங்கை ஏற்றிருக்கும் ஈங்கோயே, செஞ்சடைமேல் வண்கங்கை ஏற்றான் மலை” எனினும் பழஞ்சோறு என்ற சொல் இங்கு காணப்பட்டாலும் இங்கு நக்கீரர் நாம் உண்ணும் பழஞ்சோற்றைக் குறிப்பிடாமல் பாம்புப் புற்றில் காணப்படும் புற்றாஞ் சோற்றைத்தான் குறிப்பிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது . அதேபோன்று சதுரகிரி அறப்பளீசுர சதகம் பாடின அம்பலவாணக் கவிராயர் “கைவிலைக் குக்கொளும் பாலகப் பால்வருங் காரார்க் கரந்த வெண்பால் காளான் முருங்கைசுரை கொம்மடி பழஞ்சோறு” என்று பழஞ்சோற்றைப் பற்றிப் பாடுறார்.
இவ்வாறு பழைய இலக்கியங்களிலும் பழந்தமிழர்களாலும் கொண்டாடப்படும் பழஞ்சோறு பற்றி தற்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி முடிவுகள் தமிழர்களின் பழஞ்சோற்று உணவுப் பழக்கம் எத்தகைய சிறந்த உணவுப் பழக்கம் எவ்வாறு நோயை எதிர்க்கிறது எவ்வாறு உடலில் நடக்ககூடிய உயிர் இரசாயனத்தாக்கங்களுக்கு உறுதுணையாக இருக்கின்றது என்பதை பறைசாற்றுகின்றன . பழஞ்சோற்றில் தொழிற்படும் இலக்டிக் அமில பக்டீரியாக்கள் சோற்றில் காணப்படும் ஊட்டச்சத்து எதிர்ப்புக் காரணிகளை உடைத்து எமது உடல் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் உறிஞ்சக்கூடியமாதிரி கனி உப்புக்களான சோடியம், பொட்டாசியம், கல்சியம், இரும்பு, மக்னீசியம் என்பவற்றின் அளவைப் பல மடங்காக அதிகரிப்பதாக சமீப காலங்களில் செய்யப்பட்ட ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன . இவ்வாறு இந்த பக்டீரியாக்கள் தொழிற்படும்போது விட்டமின் பி6, B12 போன்றவற்றையும் அதிக அளவில் உற்பத்தி செய்கின்றன . இத்தகைய பழஞ்சோற்றில் தொழிற்படும் பக்டீரியாக்கள் வயிறு மற்றும் குடல் சார்ந்த நோய்களிலிருந்தும் நம்மை பாதுகாக்கின்றன .அத்தோடு பழஞ்சோற்றில் காணப்படும் செலனின் என்ற மூலகம் தைரோயிட் சுரப்பியின் செயற்பாட்டை ஊக்குவிப்பதன்மூலம் கண்டமாலை போன்ற நோய்கள் வராது தடுப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன . அமெரிக்கன் நியூட்ரிஷன் அசோசியேஷன் என்ற நிறுவனம் பழஞ்சோறு தொடர்பாக நீண்ட ஆய்வினை மேற்கொண்டு தமது முடிவினை வெளியிட்டிருக்கிறார்கள்.
அவர்களின் ஆய்வின்படி பழஞ்சோற்றில் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதனால் மலச்சிக்கலை தவிர்ப்பதுடன் உடல் சோர்வினையும் போக்குகின்றது . அத்தோடு பழஞ்சோறு உண்பதனால் உயர் குருதி அழுத்தம் , ஒவ்வாமைப் பிரச்சினகைள் ,வயிற்றுப்புண் என்பவை சரிசெய்யப்படுகின்றன என்றும் நோய் எதிர்ப்புச் சக்தி கூடுவதனால் புதிய நோய் தொற்றுகள் ஏற்படாமல் இருப்பதுடன் இளமைத் தோற்றத்தினையும் பொலிவினையும் தருவதாகவும் கூறுகிறார்கள் . எமது ஊரில் இன்றும் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும் முதியவர்கள் தமது சிறந்த உடல் உள ஆரோக்கியத்திற்கு காரணம் பழஞ்சோறு உண்ணும் பழக்கம் என்றே கூறுகிறார்கள் . அதேவேளை இன்று பல இளையதலைமுறையினர் தமது முறையற்ற உணவுப்பழக்கம் காரணமாக தொற்றா நோய்களாகிய உயர் குருதி வெல்லம், உயர் குருதி அமுக்கம், அதிக உடற்பருமன் , அதிக கொழுப்பு போன்றவற்றால் துன்பப்படுகிறார்கள் . ஆகவே நவீன ஆராச்சிகள் மூலமும் நமது முன்னோர்களின் அனுபவத்தின் மூலமும் அறியப்பட்ட சிறந்த ஆரோக்கிய உணவான பழஞ்சோறு உண்ணும் பழக்கம் எமது இளைய தலைமுறையினரிடம் ஊக்குவிக்கப்படவேண்டும் . மீளவும் காரைக்கவி கந்தையா பத்மநாதன்