×

தவபாலன் அண்ணையின் மகனின் வரிகள்… 

அன்று மே மாதம் 15ம் திகதி ஒரு வெள்ளிக்கிழமை மதியம் ஒரு 12 மணி இருக்கும். அப்பா நாங்கள் இருந்த கூடாரத்தை நோக்கி வந்தார். என்றுமில்லாதவாறு அன்று அவருடைய முகம் இருந்தது. நானும் அம்மாவும் வெளியில் வந்தோம். ”எல்லாம் முடிஞ்சிட்டு நான் வரமாட்டன் நீங்க போங்கோ.” தாளச் சோகத்தில் கதறி அழுது அப்பாவை அணைத்தேன். இது வரை காலமும் ஒரு சொட்டு கண்ணீரையும் பாத்திராத அவருடைய கண்கள் அன்று அழுதது. இறுதியாக அப்பா விடைபெற நடைபிணங்களாக மாறிய நாங்கள் சரணடைவுக்காக வட்டுவாகல் நோக்கி நடக்க ஆரம்பித்து இடைநடுவே ஓர் இடத்தில் அன்றைய இரவு கழிக்க வேண்டிய சூழ் நிலை. 60mm மோட்டார் செல்கள் சரமாரியாக வீழ்ந்து வெடித்துக்கொண்டிருந்தன. ஏற்கனவே வெட்டி இருந்த அந்த பதுங்குகுழிக்குள் அன்றிரவு ரணமாய் சொல்லமுடியாத அளவு சிந்தனைகளால் நிரம்பியதாய் அந்த இரவு நகர்ந்தது.”

அன்று மே 16 விடிகாலைப்பொழுது சரணடைய வேண்டும் என்பது உறுதியாக விட்ட போதிலும் எங்கே எப்படி என அறிந்திருக்கவில்லை. காலை வேளையில் சரணடைவதற்காக புதுக்குடியிருப்பு பக்கமாக நகர்ந்தோம். சரமரியாக செல்வீச்சும் சன்னங்களும் வந்து கொண்டிருந்தன. செல்கின்ற வழியெங்கும் பிணங்கள். ஏற்கனவே வெட்டப்பட்ட பதுங்குகுழிகளுக்குள் இருந்து நகர்ந்தோம். இறுதியாக புதுக்குடியிருப்பு பக்கமாக இருந்த இறுதி எல்லையை எட்டிய பொழுது எதிர்பாராத விதமாக அப்பாவை சந்திக்க நேர்ந்தது. அந்த இடம் அடுத்து ஒரு அபரிவிதமான யுத்தம் ஒன்றுக்கு தயாரன இடமாக ஏதோ ஒரு மாயம் குடிகொள்ளப்போகும் இடமென்பது உணரக்கூடியதாய் இருந்தது.

அப்பா உடனடியாக எங்களிடம் இருந்த அவரது புகைப்படங்களை எடுத்து கிளித்து எறிந்துவிட்டு உடனடியாக வட்டுவாகல் பக்கம் செல்லும் படி சொன்னார். சிறிது தூரம் தானும் வந்தார். வருகின்ற வழியில் திடீரென ஒரு ஆர்பியி எறிகணை வந்து வெடித்தது. நாங்கள் சிதறி ஓட ஆரம்பித்தோம். சாரை சாரையாக ரவைகள் வர ஆரம்பித்தன. ஓட ஆரம்பித்தோம். ஆனால் இன்று நான் ஒன்றை உணர்கிறேன். அப்பா தான் வரித்துக்கொண்ட சத்தியத்தின் மீது தீராத பற்றுறுதி கொண்டிருந்தார். அதே போல் எங்களுக்கும் அதை சரியாக தந்திருக்கிறார். அதனாலேயே என்னமோ அப்பாவை எங்களுடன் வரச் சொல்லி அம்மாவோ நானோ அழைத்து அப்பாவை தர்மசங்கடத்துக்குள் உள்ளாக்கவில்லை………

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments