×

நலம் புனைந்து உரைத்தல்

அதிகாரம் 112 –  நலம் புனைந்து உரைத்தல் குறட் பாக்கள் / குறள் #1111

நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
மென்னீரள் யாம்வீழ் பவள்.

பொருள்
அனிச்ச மலரின் மென்மையைப் புகழ்ந்து பாராட்டுகிறேன்; ஆனால் அந்த மலரைவிட மென்மையானவள் என் காதலி.

குறள் #1112

மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்
பலர்காணும் பூவொக்கும் என்று.

பொருள்
மலரைக்கண்டு மயங்குகின்ற நெஞ்சமே! இவளுடைய கண்ணைப் பார்; பலரும் கண்டு வியக்கும் மலராகவே திகழ்கிறது.

குறள் #1113

முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு.

பொருள்
முத்துப்பல் வரிசை, மூங்கிலனைய தோள், மாந்தளிர் மேனி, மயக்கமூட்டும் நறுமணம், மையெழுதிய வேல்விழி; அவளே என் காதலி!.

குறள் #1114

காணின் குவளை கவிழ்ந்து நிலனோக்கும்
மாணிழை கண்ணொவ்வேம் என்று.

பொருள்
என் காதலியைக் குவளை மலர்கள் காண முடிந்தால், “இவள் கண்களுக்கு நாம் ஒப்பாக முடியவில்லையே!” எனத் தலைகுனிந்து நிலம் நோக்கும்.

குறள் #1115

அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு
நல்ல படாஅ பறை.

பொருள்
அவளுக்காக நல்லபறை ஒலிக்கவில்லை; ஏனெனில் அவள் இடை ஒடிந்து வீழ்ந்துவிட்டாள்; காரணம், அவள் அனிச்ச மலர்களைக் காம்பு நீக்காமல் தலையில் வைத்துக்கொண்டதுதான்.

குறள் #1116

மதியும் மடந்தை முகனும் அறியா
பதியின் கலங்கிய மீன்.

பொருள்
மங்கையின் முகத்துக்கும், நிலவுக்கும் வேறுபாடு தெரியாமல் விண்மீன்கள் மயங்கிக் தவிக்கின்றன.

குறள் #1117

அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல
மறுவுண்டோ மாதர் முகத்து.

பொருள்
தேய்ந்தும், வளர்ந்தும் ஒளிபொழியும் நிலவில் உள்ள சிறுகளங்கம்கூட, இந்த மங்கை நல்லாள் முகத்தில் கிடையாதே!.

குறள் #1118

மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மதி.

பொருள்
முழுமதியே! என் காதலுக்குரியவளாக நீயும் ஆக வேண்டுமெனில், என் காதலியின் முகம் போல ஒளிதவழ நீடு வாழ்வாயாக.

குறள் #1119

மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்
பலர்காணத் தோன்றல் மதி.

பொருள்
நிலவே! முலரனைய கண்களையுடைய என் காதல் மங்கையின் முகத்திற்கு ஒப்பாக நீயிருப்பதாய் பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டுமேயானால் (அந்தப் போட்டியில் நீ தோல்வியுறாமல் இருந்திட) பலரும் காணும்படியாக நீ தோன்றாது இருப்பதே மேல்.

குறள் #1120

அனிச்சமும் அன்னத்தின் தூவியு மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்.

பொருள்
அனிச்ச மலராயினும், அன்னப்பறவை இறகாயினும் இரண்டுமே நெருஞ்சி முள் தைத்தது போல் துன்புறுத்தக் கூடிய அளவுக்கு, என் காதலியின் காலடிகள்அவ்வளவு மென்மையானவை.

திருக்குறள் அருஞ்சொற்கள்

மையாத்தி 

மயங்குகின்றாய்

முறி 

தளிர் வண்ணம்

முறுவல் 

பல்

முத்தம் 

முத்து

வெறிநாற்றம் 

இனிய மணம்

வேய் 

மூங்கில்

மாண் 

மாட்சிமை

பெய்தாள் 

சூடினாள்

நுசுப்பு 

இடை

படாஅ 

ஒலியா

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments