இந்திய அரச பிரதிநிதிகளால் தமிழீழ விடுதலைப் போராட்டப் போராளிகளுக்கு ஆயுதப்பயிற்சி வழங்கப்பட்ட நேரம் அது.
1983 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இந்தியாவின் வடமாநில மலைகளாற் சூழப்பட்டபிரதேசத்தில் நாம் பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தோம். அங்கு பயிற்சி ஆசிரியராக இருந்த இந்திய இராணுவ அதிகாரி ஒருவர் எமக்குப் பழக்கப்படாத உறைபனிநிலையை எதிர்கொள்வதற்கான தனிப்பட்ட கவனிப்பிலும் அதீத அக்கறை எடுத்துச் செயற்பட்டுக்கொண்டிருந்தார். பயிற்சி பெறும் அனைவருக்கும் பொறுப்பாக இருந்த பொன்னம்மானுக்கு அடுத்த நிலையில் இருந்த கிட்டு அண்ணை உட்பட எம்மிற் பலருடன் நெருக்கமான உணர்வு உறவினை குறித்த அதிகாரி ஏற்படுத்தியிருந்தார்.
தலைவர் எமது பயிற்சி முகாமிற்கு வந்து பயிற்சிகளைப் பார்வையிட்டார். அவ்வேளையில் எம்மிற் பலர் குறித்த அந்த அதிகாரி பற்றியும், அவர் எம்மீது கொண்ட கரிசனை பற்றியும் சொன்னதைத் தலைவர் அமைதியாயக் கேட்டபடி இருந்தார். தெரிவுசெய்யப்பட்ட பொறுப்பாளர்களுடன் அன்றிரவு தலைவர் சந்திப்புக்கு ஒழுங்குசெய்தார். அப்போது அவர் கூறிய கருத்துகள் இன்னும் பசுமையாக என் நினைவில் உள்ளன.
“இந்தியா தனது சுயநல நோக்கிலேயே செயற்படுகிறது. உண்மையில் எமது விடிவிற்காக நாமே போரிடவேண்டும். எமது விடுதலையை இந்தியா பெற்றுத்தரும் என்ற எண்ணத்துடன் இருப்பது எமது விடுதலைப்போரைப் பலவீனப்படுத்திவிடும். எனவே, இந்தியாவை நம்பியிருக்காது எமது போராளிகளுக்கு மன உறுதியை ஏற்படுத்துங்கள்…”
இந்தியா எமக்கான விடுதலையை ஒருபோதும் பெற்றுத்தரப்போவதில்லை என அன்றே கூறிய அவரது தீர்க்கதரிசனமான சிந்தனையே… எமது போராட்டம் சொந்தக்காலில் நிற்பதற்கும் , நெருக்கடிகளின்போது நிலைத்து நிற்பதற்கும் அடிப்படையாகும்.
ச.பொட்டு.
(விடுதலைப்பெரொளி)