1992.03.01 அன்று தரைப்படையிலிருந்து முப்பது பெண்போராளிகள் கடலுக்குள் குதித்தார்கள்.
தலைவர் அவர்கள் கடற்புலிகளுக்குரிய பயிற்சித் திட்டங்களை வரையறுக்கும் போது நீச்சற்போட்டி ஒன்று வைத்தார். ஆண்கள் மூன்று கடல்மைல்களையும், பெண்கள் இரண்டு கடல்மைல்களையும் அடிப்படையில் முடித்திருக்கவேண்டும். ஆனால் நீச்சலுக்கான விருதைப் பெறுவதாயின், ஆண்கள் ஐந்துகடல்மைல்களையும், பெண்கள் மூன்று கடல் மைல்களையும் நீந்தி முடிக்கவேண்டும்.
பெண்கள் ஐந்து கடல் மைல்களை நீந்தி முடித்தார்கள். தலைவர் அவர்களிடமிருந்து சிறப்புப் பரிசுகளை பெற்றுக் கொண்டார்கள்.
1995ஆம் ஆண்டு ஓகஸ்ற் மாதத்தில், சிறிலங்கா கடற்படையின் முன்னாள் மாலுமிகள் உட்பட நூற்று இருபத்தெட்டுப் பயணிகளைச் சுமந்து வந்த ” ஐரிஷ்மோனா ” கடற்புலிகள் மகளிர் படையணியால் வழிமறிக்கப்பட்டு, முல்லைத்தீவுக் கடற்பரப்பில் தடுத்து வைக்கப்பட்டது. கடற்புலிகளின் இலக்கு ” ஐரிஷ்மோனா ” அல்ல. இது இறால், இறாலை மகளிர் படையணி தக்கவைத்துக் கொண்டது.
இறால் தேடி சுறாக்கள் புறப்பட்டன. தேடிவந்த சிங்களக் கடற்படையினரின் இரண்டு சுப்படோரா படகுகள் கடற்புலிகளால் மூழ்கடிக்கப்பட்டன. நவீன ராடர் கருவிகளும், நவீன பீரங்கிகளும் கைப்பற்றப்பட்டன. இருபது படையினரைக் காணவில்லை என சிங்கள அரசின் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.