பிரிகேடியர் தமிழேந்தி, தமிழீழ நிதிப் பொறுப்பாளர் (சபாரத்தினம் செல்லத்துரை), யாழ் மாவட்டம், (15.02.1950 – 10.03.2009).
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தொடக்க காலத்தில் இருந்து விடுதலைக்காக உழைத்து அனைவராலும் “தமிழேந்தி அப்பா” என அழைக்கப்படும் பிரிகேடியர் தமிழேந்தி தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதிப்பிரிவுப் பொறுப்பாளராக செயற்பட்டு விடுதலைப் போராட்டத்திற்காக தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் நிதியினைப் பெற்றுக்கொள்ளும் பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபட்டார்.
தாயகத்தில் பல்வேறு துறைகளை உருவாக்கி ஒருநாட்டின் அரசாங்கத்தின் வருமானங்களை எவ்வழிகளில் பெற்றுக்கொள்ளலாமோ அவ்வாறு பலவழிகளில் பெற்றுக்கொள்வதற்கான செயற்பாடுகளில் ஈடுபட்டார்.
இதற்காகப் பல பிரிவுகளை உருவாக்கி பண்ணைகளை உருவாக்கி, தொழிற்சாலைகளை உருவாக்கி மற்றும் விவசாயச் செய்கையினை மேற்கொண்டு விடுதலைப் போராட்டத்திற்காக வருமானங்களை ஈட்டிக்கொண்டிருந்தார்.
மற்றும் விடுதலைப் புலிகளின் கட்டமைப்பின் தள அமைப்பு வேலைகள் உள்ளிட்ட கட்டுமான வேலைகள் அனைத்தினையும் ஒழுங்குபடுத்தி மேற்கொண்டார். சமாதான காலப்பகுதியில் தமிழ்மொழியில் பற்றுக்கொண்டு அனைத்து நிர்வாக கட்டமைப்புக்களிலும் தமிழ்ப்பெயர் சூட்டித் தமிழினை வளர்க்கப் பெரும்பாடுபட்டார்.
பல போராளிகளுக்கு தமிழ் மொழி ஊடாகப் பல திட்டங்களையும் தமிழின் வரலாற்றினையும் கற்றுக்கொள்ள பல முனைப்புக்களுடன் செயற்பட்டார்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலகட்டத்தில் இருந்து அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்து தனது தனித்துவமான திறமையால் நிதித்துறையை திறம்பட செயலாற்றி தேசியத் தலைவர் அவர்களினதும் போராளிகளினதும் நன்மதிப்பைப் பெற்றிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும் .