×

தஞ்சை பெரும் கோவில்

கடைச்சோழ வம்சத்தில் உதித்த விஜயாலயன் பரம்பரையினர் வழியில் வந்த மாமன்னன் ராஜராஜன் 1003-ம் ஆண்டுக்கும் 1010-ம் ஆண்டுக்கும் இடையே எழுப்பிய கோயில் இது. மனிதன் எவ்வளவு மகத்தானவன் என்பதை மானுடத்திற்கு பறைசாற்றிக் கொண்டிருக்கும் அழகின் பேரழகு அது. வரலாற்று சிறப்புமிக்க இந்த கோயில் இன்றளவும் எப்படி கட்டப்பட்டது என்ற தெளிவான பார்வை கிடைக்கவில்லை. இன்றைக்கும் தமிழனின் கலை, அறிவியல் மற்றும் கட்டடக்கலைக்கு சான்றாக உள்ளதோடு, யுனெஸ்கோவின் பாரம்பரிய கலை மற்றும் பண்பாட்டு சின்னமாகவும் அரிய பொக்கிஷமாகவும் போற்றிப் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

விஞ்ஞானம் பல்வேறு தொழில்நுட்பங்களை உருவாக்கியுள்ளது. விஞ்ஞானம் வளராத காலத்தில், எவ்வித தொழில் நுட்பக் கருவிகளும் இல்லாத ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட மகத்தான கலைப் படைப்பே தஞ்சை பெரிய கோவில்.

 பெரியகோவிலை ஆராய்ச்சி செய்யும் வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்கள், இன்றைய அதி நவீன உத்திகளையும் விஞ்ஞானத்தின் துணையோடும், என்ன தான் தலைகீழாக நின்று அக்குவேறு ஆணிவேராக ஆராய்ச்சி செய்து பார்த்தாலும் அதன் கட்டுமான ரகசியம் இன்னும் பிடிபடாமல் தலையை பிய்த்துக்கொண்டுதான் உள்ளனர். இருந்தாலும் அவர்களாகவே ஒரு அனுமானத்திற்கு வந்து இப்படி கட்டியிருப்பார்கள், அல்லது அப்படி கட்டியிருப்பார்கள் என்று தீர்மானத்திற்கு வந்துவிடுகிறார்கள்.

பெரிய கோவிலின் கட்டுமான ரகசியமும் இன்னமும் யாருக்கும் விளங்கவில்லை என்பது தான் உண்மை. காரணம் இக்கோவில் கட்டப்பட்ட விதமும், அதற்கு பயன்படுத்தப்பட்ட தூய்மையான கிரானைட் கற்களும் தான். கிரானைட் கற்கள் என்பது 20ஆம் நூற்றாண்டில் தான் அறிமுகப்படுத்தப்பட்டது என்று அனைரும் நினைத்துக்கொண்டிருக்கையில், சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பே கிரானைட் கற்கள் கொண்டு இக்கோவில் பயன்படுத்தப்பட்டுள்ளது ஆச்சரியம் தான்.

பெரிய கோவில் கட்டுமான அமைப்பானது, இலகு பிணைப்பு என்ற முறையில் உருவாக்கப்பட்டதாகும். அதாவது, இக்கோவிலின் கட்டுமானத்தின் போது, ஒவ்வொரு கல்லையும் பிணைக்கும் போது, ஒரு நூலளவு இடைவெளி விட்டு விட்டு பிணைத்துள்ளனர். அதாவது, இன்றைக்கும் கிராமப்புறங்களில் உள்ள வீடுகளில் பெரியவர்கள் கயிற்றுக் கட்டிலை பயன்படுத்துவதை அனைவரும் அறிவார்கள். அந்த கயிற்றுக் கட்டில் முறையைத் தான் பெரியகோவில் கட்டுமானத்திற்கும் பயன்படுத்தி உள்ளார்கள் என்பது ஆச்சரியம்.

இக் கோயிலின் கட்டுமானம் பொறியியல் துறையில் ஓர் அற்புதம் என்று போற்றப்படுகிறது. கருங்கற்கள் சிறிதும் இல்லாத செம்மண் வெளியில் கட்டப்பட்டதாகத் தெரிகிறது. கண் எட்டிய தூரம் வரை மலைகளோ, குன்றுகளோ இல்லாத பெரும் சமவெளியே தஞ்சை. ஆனால் பெரும் கற்களால் இந்தக் கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கோவிலுக்கான கற்கள் எங்கிருந்து கொண்டுவரப்பட்டது என்பது முதல் கேள்வியாக மனதில் எழுகிறது. இரண்டாவது எப்படிக் கொண்டு வந்து சேர்த்தார்கள் என்பதே.

சிறிய சக்கரம் மாட்டிய கைப்பெட்டியை இழுத்து வருவதற்குள் வேர்வை சிந்தும் மனிதர்களைப் பயணத்தின் பொழுது பார்த்திருப்போம். இது எப்படி சாத்தியமானது. கற்பனை செய்யவே மனம் அஞ்சுகிறது. கற்கள் கொண்டு வந்து சேர்த்ததற்கான ஆய்வுகளைத் தேடினால் சில தரவுகள் கிடைக்கிறது. திருச்சிக்கு அருகே மாமலை என்றொரு மலை இருந்ததாகவும், அந்த மலையை முற்றிலும் அறுத்து எடுத்து, யானைகள் மூலம் கொண்டு வரப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. மனிதர்கள் நினைத்தால் மாமலையும் கடுகு தான்.

கோவிலுக்குள் சென்றவுடன் உடல் சிலிர்க்கிறது. படைப்பின் பிரமாண்டத்தில். பொன் நகைகளில் செய்வதைப் போன்று கல்லில் நுட்பமான அழகிய வேலைப்பாடுகளை செதுக்கி வடித்திருக்கிறார்கள்.

மாபெரும் மனித உழைப்பும், கலைஞர்களின் சிந்தனை ஆற்றலும் இணைந்து இதை சாத்தியப்படுத்தி இருக்கிறார்கள்.

இக்கோவில் சிவலிங்கத்தின் உயரம் 12 அடி தமிழின் உயிர் எழுத்துக்கள் 12.

சிவலிங்க பீடத்தின் உயரம் 18 அடி. தமிழின் மெய் எழுத்துக்கள் 18.

கோயிலின் கோபுரத்தின் உயரம் 216 அடி. தமிழின் உயிர் மெய் எழுத்துக்கள் 216.

சிவலிங்கத்திற்கும் நந்திக்கும் உள்ள இடைவெளி 247 அடி. தமிழ் மொழியின் மொத்த எழுத்துக்கள் 247.

பக்தி இயக்க பரவலாக்கத்தில் மொழிக்கான முக்கியத்துவத்தை சைவம் உள்வாங்கியதன் வெளிப்பாடாக இது அமைக்கப்பட்டுள்ளது. தஞ்சை பெரிய கோவில் நந்தியின் உயரம் 12 அடி. நீளம் 20 அடி. தஞ்சை நந்தியின் வேலைப்பாடும், கலை அழகும் தனித்துவமானது. இந்த நந்தி பெரம்பலூர் மாவட்டம் பச்சைமலையிலிருந்து கொண்டு வரப்பட்ட ஒரே கல்லில் செய்யப்பட்ட நந்தி இது.

தமிழர்களின் கட்டடக் கலைக்கும், சிற்பக் கலைக்கும், ஓவியக் கலைக்கும், வானியற் கலைக்கும், மரக் கலைக்கும் தந்தை என மயன் புகழப்படுகிறான். மயன் கால பிரமிடுகளின் முன் மாதிரியே தஞ்சை பெரிய கோவில் என்கிறார். கருங்கற்களால் இரண்டு சுவர்கள் சுற்றி அமைக்கப்பட்டு கருவறையில் லிங்கம் அமைக்கப்பட்டுள்ளது. உள் சுவரின் அகலம் 11 அடி. வெளிச்சுவரின் அகலம் 13 அடி. இந்த இரண்டு சுவர்களுக்கிடையேயான தூரம் 6 அடி. இந்தச் சுவர்களில் சோழர்களின் ஓவியங்கள் வியக்கத்தக்க வகையில் வரையப்பட்டுள்ளன. இந்த இரண்டு சுவர்களுக்குமான ஆற்றலை அறிந்தால் அதிர்ந்து தான் போக வேண்டியுள்ளது. 216 அடி உயரம் கொண்ட கருங்கற்களால் இழைக்கப்பட்ட விமானத்தின் ஒட்டு மொத்தச் சுமையையும் இந்த இரண்டு சுவர்களுமே தாங்கி நிற்கிறது.

இத்தகைய பிரமாண்ட கோவில் கோபுரத்தின் ஆழம் 10 அடிகள் மட்டும் தான். தஞ்சை பெரிய கோவில் கோபுரம் என்றே இதை பலரும் அழைக்கிறார்கள். ஆனால் இது கோபுரம் அல்ல. விமானம் என்றும், கோவிலின் முகப்பில் அமைவதே கோபுரம் என்றும் கூறுகிறார்கள் கட்டிடக்கலை வல்லுநர்கள்.

தஞ்சை பெரிய கோயில் விமானம் தென் இந்தியாவிலேயே மிக உயர்ந்த விமானமாகும். அது கட்டப்பட்ட காலத்தில் இந்த அளவுக்கு உயரமான கட்டடம் உலகிலேயே எங்கும் கட்டப்படவில்லை என்கின்றனர் ஆய்வாளர்கள். ஆயிரம் ஆண்டுகளாக தமிழர்களின் உழைப்பின் மேன்மையை உலகுக்கு பறைசாற்றும் உன்னதப் படைப்பல்லவா அது?

எகிப்திய பிரமிடுகளின் கட்டுமான முறைக்கும் தஞ்சை மற்றும் கங்கைகொண்ட சோழபுர கோவில்களின் கட்டுமான முறைக்கும் ஒற்றுமை இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இரண்டிலுமே தேர்ந்தெடுக்கப்பட்ட கற்கள் அடுக்கியும் கோர்த்தும் வைத்து கட்டப்பட்டுள்ளது. இரண்டிலுமே கோள்களின் கதிர்வீச்சுக்கள் அதன் மையப் பகுதியில் குவியுமாறு வடிவமைக்கப்படுள்ளது. புவி அதிர்வுகளினால் பாதிப்புகள் ஏற்படுவதில்லை.

எல்லோரா குகைகள் (கி பி 700) எப்படி ஒரு பெரிய மலையை குடைந்து கட்டப்பட்டதோ; அது போல் தஞ்சை பெரிய கோவில் விமானமும்(கி பி 1000) ஒரு பெரிய மலையை அந்த கோபுர வடிவத்திற்கு வெட்டப்பட்டபின், நுட்பமாக சிற்பங்கள் அந்த விமானத்தில்மேல் செதுக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டு உள்ளது.

கருவறை மிகத் துல்லியமான சதுரமாக நான்கு பக்கமும் சிறிதும் பிசிரின்றி கட்டப்பட்டிருக்கிறது. இதேபோல் சிவலிங்கத்தின் மையப் பகுதியில் நூல்வைத்துப் பிடித்து, கோபுரத்தின் உச்சிக்குக் கொண்டு சென்றால் அது கோபுரத்தின் துல்லியமான மையத்தில் இருக்கும். மரம், இரும்பு,காரை போன்ற பொருள்களைப் பயன்படுத்தாமல் முழுக்க முழுக்கக் கற்களை மட்டுமே கொண்டு கட்டப்பட்டது இந்தக் கோயில்.

இவை எல்லாவற்றையும் கடந்து கோபுர விமானத்தின் உட்புறம், ஒரு டம்ளரைக் கவிழ்த்து வைத்திருப்பது போன்ற உள்கூடாகக் காட்சியளிக்கும். கற்களை ஒன்றோடு இணைத்து, நுட்பமான முறையில் கட்டப்பட்டிருக்கிறது இந்தக் கோவில்.விமானக் கோபுரத்தின் உட்புறம் உள்ள மேல் அறை ஒன்றில் 108 கர்ணங்கள் கொண்ட பரத நாட்டியச் சிற்பங்கள் காணப்படுகின்றன.

இந்த கோவிலின் சிறப்பம்சம் என்னவென்றால் மதிய வேளைகளில் இந்த கோவிலில் உள்ள கோபுரத்தின் நிழல் ஆனது கீழே விழுவதில்லை என்பதாகும். அதே போல் கோபுரத்தின் மேல் உள்ள வைக்கப்பட்டுள்ள கலச வடிவிலான மேற்கூரை கல் சுமார் 80 டன் எடை கொண்ட ஒற்றை கல்லால் செய்யப்பட்டது என்பது பெரிய அதிசயம். அதை விட அதிசயமாக அதை எப்படி அவ்வளவு மேலே எடுத்துச் சென்றனர் என வியக்க வைப்பதாக உள்ளது.

கோயில் கட்டிடக் கலைஞரும், ஆய்வாளருமான பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் இதையொட்டி கூறிய கருத்து முக்கியமானது.

“பெரிய கோயில் வடிவமைப்பையும் அதன் தரைப்பகுதியையும் சில ஆண்டுகளுக்கு முன்பே ஆய்வு செய்தோம். அதில் கோயிலின் அஸ்திவாரம் மரபுவழி கட்டுமானமான ஆற்று மணல் படுகையைக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. அதாவது, தரையின் மேற்பகுதியில் இருக்கும் கல்லால் ஆன கோயில் கட்டுமானத்தைவிட இரு மடங்கு சுமை கீழே இருக்க வேண்டும்.

அதன்படி இயற்கையாக அங்கிருந்த சுக்கான் பாறையை தொட்டியாக வெட்டி, அதில் பரு மணலை நிறைத்து, அதன் மீது கோயிலைக் கட்டியிருக்கிறார்கள். கருங்கல் தொட்டி, மணல் விலகாமல் இருக்க உதவும். அதேசமயம், மணல் இயல்பாக அசைந்துகொடுக்கும் தன்மை உடையது. பூமித் தகடுகளின் எதிர்பாராத அசைவுகளின்போது மணலின் அசைந்து கொடுக்கும் தன்மையால் மேற்பகுதியில் இருக்கும் கட்டுமானம் விலகாது. அதாவது, பூகம்பம் வந்தாலும் கோயிலுக்கு எந்த பாதிப்பும் நேராது.

முழு கட்டுமானத்தையும் முடித்து கருவறை உச்சியில், மிகப்பிரமாண்டமான 80 டன் எடைகொண்ட, சதுர வடிவ கல், நந்தி, விமானம் என 240 டன் எடையை அழுந்தச் செய்வதன் மூலமாக பெரிய கோவிலின் ஒட்டுமொத்த கட்டுமானமும் பலம் பெற்றுவிடும். இப்படித்தான் பெரிய கோவிலின் அஸ்திவாரத்தை ஒட்டுமொத்தமாக கருவறை உச்சியில் கொண்டுபோய் வைத்தார்கள் அன்றைய நம் தமிழர்கள். இது வரையிலும் எத்தனையோ பூமி அதிர்ச்சி, நில நடுக்கம் என உருவாகி அசைக்க முயன்றாலும் கூட அவை அத்தனையும் பெரிய கோவில் கட்டுமானத்தின் முன்பு தோற்று மண்டியிட்டு வணங்கி சென்றது தான் மிச்சம். ஒரு துரும்பைக் கூட அசைக்க முடியவில்லை என்பது தான் அறிவியல் ஆச்சரியம்.

தஞ்சை பெரிய கோயிலின் ஒரு கன அடி கல்லின் எடை 70 கிலோ. தோராயமாக கோயிலின் எடை ஒரு லட்சம் டன். அதனை ஒப்பிடும்போது அஸ்திவாரமாக சுமார் ஒரு கோடி கன அடி பருமணலை கல்தொட்டியில் நிரப்பியிருக்க வேண்டும் என்று தெரிகிறது. இதன்மூலம் பூமித் தகடுகளின் அசைவின்போது மணல் அஸ்திவாரம் தன்னைத்தானே சமப்படுத்திக்கொள்ளும்.

இயல்பிலேயே கருங்கல் கட்டுமானங்களுக்கு மணல் அஸ்திவாரமே பொருத்தமானது. அதனால்தான் பெரும்பாலான கடல் கட்டுமானங்களில் கருங்கற்களும் ஆற்று மணலும் இடம்பெறுகின்றன. 2010-ம் ஆண்டு கோயிலுக்குள் ஆழ்துளைக் கிணறு தோண்டியபோது அஸ்திவாரம் மணல் என்பதாலேயே அங்கு சத்தம் வரவில்லை. அங்கு வெளியேறிய மணலில் மண் மற்றும் பாறைத் துகள் எதுவும் இல்லை. 350 அடி ஆழத்துக்கு கீழே தோண்டிய பிறகுதான் களிமண் வெளியேறியுள்ளது.

இந்த மணல் தஞ்சாவூர் முகத்துவாரப் பகுதிக்கான மணல் அல்ல. தஞ்சாவூர் பகுதியில் இருப்பது சமதளத்தில் ஓடும் காவிரி ஆற்றுப் பகுதியின் குறுமணல். ஆனால், கோயிலின் அடியில் கிடைத்தது, அதைவிட மூன்று மடங்கு பெரிய பருமணல். இது மலைகளில் பாய்ந்தோடும் காட்டாறுகளில் படியும் மணல். மேற்குத் தொடர்ச்சி மலைகளின் காட்டாற்றுப் படுகைகளில் இருந்து இந்த மணலைக் கொண்டுவந்திருக்கலாம்” என்கிறார் பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன்.

காலை நேரத்தில் கோபுரத்திற்குப் பின்பக்கமும், மாலை நேரத்தில் கோபுரத்தின் முன்பக்கமும் கோபுரத்தின் நிழல் தரையில் விழும். உயரே இருப்பது 80 டன் உள்ள ஒரே கல் அல்ல. பல கற்களை ஒன்றாக ஒட்டி வைத்திருக்கும் நுட்பமான வேலைப்பாடே. ஆரஞ்சு பழம் ஒன்றோடு ஒன்று ஒட்டியிருப்பதைப் போன்ற நுட்பமே அது.

பெரிய கோவிலின் உயரம் எவ்வளவு உயர்கிறதோ அந்த அளவுக்கு சுற்றி மண்ணை சாய்வாக கொட்டிவிடுவார்கள். இதன் மலை போன்ற சாய்ந்த பகுதிகளில் கற்பாறைகளைக் கொண்டு சென்றிருப்பார்கள் என்கிறார்.

மழைநீர் தேங்கி ஆலயத்திற்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க இரண்டு வடிகால்கள் அமைக்கப்பட்டுள்ளது. வடக்கு பக்கத்தில் ஒன்றும், தெற்குப் பக்கத்தில் ஒன்றுமாக நீர் வெளியேறும் பாதைகள் உள்ளது.முதலில் அழுக்காக வரும் நீர் தெற்கு பக்கம் மூலமாக நந்தவனத்திற்கும், இரண்டாவது வரும் நல்லநீர் வடக்குப் பக்கமாக சிவகங்கை குளத்திற்கும் செல்லும் வகையில் இணைக்கப்பட்டுள்ளது. முதல் மழைநீர் சேகரிப்புத்திட்டம் இதுதான்.

https://www.google.com/amp/s/tamil.oneindia.com/amphtml/astrology/news/thanjavur-brihadeeswara-temple-amazing-of-karuvarai-vimanam-375933.html

https://www.google.com/amp/s/tamil.news18.com/amp/news/special-articles/tanjore-big-temple-vjr-250855.html

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments