உலக வரலாற்றில் மனித இன விடுதலைக்கான போராட்டங்கள் பல நடைபெற்றிருக்கின்றன. இனத்தின் பேராலும், நிறத்தின் பேராலும் நடைபெற்ற ஒடுக்கு முறைகளை எதிர்த்துப் போராடி பல்வேறு இன்னல்களையும், துயரங்களையும், அடக்குமுறைகளையும் சந்தித்து அப்போராட்டங்கள் வெற்றி பெற்றிருக்கின்றன.
அதே போல் இரத்தம் தோய்ந்த தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் சந்தித்த போர்களும், இழப்புகளும் கொஞ்சமல்ல. பிறந்த மண்ணைத் துறந்து சொந்த மக்களை இழந்து உலகின் பல்வேறு நாடுகளில் புலம் பெயர்ந்து ஏதிலிகளாக வாழும் நிலை.
எல்லாவற்றையும் விட இந்த நூற்றாண்டின் மனிதப்பேரவலம் தமிழீழத்தில் நடந்து இருக்கிறது. ஈழத் தமிழினத்தைப் போல பாவப்பட்ட வேறொரு இனம் தற்போது இருக்க முடியாது. இந்த அளவுக்கு பலவந்தமாக அவலப்படுத்தப்பட்ட இனமாகவும், சர்வதேசத்தினால் முற்று முழுதாகக் கைவிடப் பெற்ற ஓர் இனமாகவும், ஈழத்தமிழினம் போய்விட்டது என்பது சோகத்திலும் சோகம். வல்லரசு வல்லூறுகளின் பிராந்திய வல்லாதிக்கப் போட்டிகளின் நடுவே சிக்குண்டு சின்னாபின்னமாகிப் போனது ஈழத்தமிழரின் வாழ்வு. வளமாய் வாழ்ந்த இனம் இன்று தன் வாழ்வை தொலைத்து நிற்கிறது.
ஆனால், மீண்டும் எழுந்து போராட வேண்டிய கடமை தமிழினத்திற்கு உள்ளது.
எந்தப் போராட்டங்களிலிருந்தும் என்னால் விலகி நிற்க முடியவில்லை. அது என்னால் இயலாது. அவ்வாறு ஒரு மனிதனாக ஈழப்போராட்டத்தை 1983 ஆம் ஆண்டிலிருந்து உள்வாங்கியவைகளை ஒரு கலைஞனாக புயலின் நிறங்கள், உயிர் உறைந்த நிறங்கள் என்ற தலைப்புகளில் ஏற்கனவே வெளிப்படுத்தியிருக்கிறேன்.
தற்போது போர்முகங்கள் ஓவியங்களும் – ஒரு வரலாற்றுச் சான்று.
– ஓவியர் புகழேந்தி
மேலும் கட்டுரைகளுக்கு கீழே அழுத்தவும்.