×

தகை அணங்குறுத்தல்

அதிகாரம் 109 –  தகை அணங்குறுத்தல்

குறட் பாக்கள்

குறள் #1081

அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலுமென் நெஞ்சு.

பொருள்
எனை வாட்டும் அழகோ! வண்ண மயிலோ! இந்த மங்கையைக் கண்டு மயங்குகிறதே நெஞ்சம்.

குறள் #1082

நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து.

பொருள்
அவள் வீசிடும் விழிவேலுக்கு எதிராக நான் அவளை நோக்க, அக்கணமே அவள் என்னைத் திரும்ப நோக்கியது தானெருத்தி மட்டும் தாக்குவது போதாதென்று, ஒரு தானையுடன் வந்து என்னைத் தாக்குவது போன்று இருந்தது.

குறள் #1083

பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்
பெண்டகையால் பேரமர்க் கட்டு.

பொருள்
கூற்றுவன் எனப்படும் பொல்லாத எமனை, எனக்கு முன்பெல்லாம் தெரியாது; இப்போது தெரிந்து கொண்டேன் அந்த எமன் என்பவன் பெண்ணுருவத்தில் வந்து போர் தொடுக்கக்கூடிய விழியம்புகளை உடையவன் என்ற உண்மையை.

குறள் #1084

கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்
பேதைக் கமர்த்தன கண்.

பொருள்
பெண்மையின் வார்ப்படமாகத் திகழுகிற இந்தப் பேதையின் கண்கள் மட்டும் உயிரைப் பறிப்பதுபோல் தோன்றுகின்றனவே! ஏனிந்த மாறுபாடு?.

குறள் #1085

கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கமிம் மூன்றும் உடைத்து.

பொருள்
உயிர்பறிக்கும் கூற்றமோ? உறவாடும் விழியோ? மருட்சிகொள்ளும் பெண்மானோ? இளம் பெண்ணின் பார்வை இந்த மூன்று கேள்விகளையும் எழுப்புகிறதே.

குறள் #1086

கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்
செய்யல மன்னிவள் கண்.

பொருள்
புருவங்கள் வளைந்து கோணாமல் நேராக இருந்து மறைக்குமானால், இவள் கண்கள், நான் நடுங்கும்படியான துன்பத்தைச் செய்யமாட்டா.

குறள் #1087

கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில்.

பொருள்
மதங்கொண்ட யானையின் மத்தகத்தின் மேலிட்ட முகபடாம் கண்டேன்; அது மங்கையொருத்தியின் சாயாத கொங்கை மேல் அசைந்தாடும் ஆடைபோல் இருந்தது.

குறள் #1088

ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் உட்குமென் பீடு.

பொருள்
களத்தில் பகைவரைக் கலங்கவைக்கும் என் வலிமை இதோ இந்தக் காதலியின் ஒளி பொருந்திய நெற்றிக்கு வளைந்து கொடுத்துவிட்டதே!.

குறள் #1089

பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்
கணியெவனோ ஏதில தந்து.

பொருள்
பெண்மானைப் போன்ற இளமை துள்ளும் பார்வையையும், நாணத்தையும் இயற்கையாகவே அணிகலன்களாகக் கொண்ட இப்பேரழகிக்குச் செயற்கையான அணிகலன்கள் எதற்காக?.

குறள் #1090

உண்டார்க ணல்லது அடுநறாக் காமம்போல்
கண்டார் மகிழ்செய்தல் இன்று.

பொருள்
மதுவை உண்டால்தான் மயக்கம் வரும்; ஆனால், கண்டாலே மயக்கம் தருவது காதல்தான்.

திருக்குறள் அருஞ்சொற்கள்

அணங்கு 

பெண்

கொல் 

தெய்வம்

மாதர் 

மானுடப்பெண்

மாலும் 

மயங்கும்

தானை 

சேனை

பண்டு 

கண்டு

கூற்று 

எமன்

தகையால் 

குணங்கள்

பேரமர் 

பெரிய வாய்

கட்டு 

கண்கள்

அமர்த்தன 

மாறுபட்டிருந்தன

அஞர் 

துயர்

கடாக்களிறு 

மத யானை

கட்படாம் 

முகப்படாம்

துகில் 

ஆடை

ஒண்ணுதற் 

ஒளி பொருந்திய நெற்றி(ஒள்+நுதல்)

ஞாட்பு 

போர்க்களம்

நண்ணார் 

எதிர்த்தவர்

உட்கும் 

அஞ்சுவதற்கு ஏதுவாகும்

அடு நறவு 

காய்ச்சப்பட்ட மது

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments