மக்களுக்கான திலீபன் இலவச மருத்துவ சேவையை தலைவர் பிரபாகரன் ஆரம்பிக்க காரணம் யார் தெரியுமா?
1998 காலப்பகுதி அது. ஈழத்தில் யுத்தம் தொடர்ந்து நடந்துகொண்டிருந்த காலம் அது. மக்களுக்கு போக்குவரத்து வசதிகள் இல்லை. அவசர தேவைக்கு அம்புலன்ஸ் வாகனத்தை அழைக்க முடியாது. தொலைபேசி வசதிகள் இல்லாத காலம் அது. மேலும் மருத்துவமனைகளும் கிராமங்களில் இல்லை. மருத்துவர்கள் பற்றாக்குறை இன்னொரு புறம். கிராமங்களில் இருந்து மக்கள் மருத்துவமனைகளுக்கு வருவதாயின் மாட்டு வண்டிகளிலும், அல்லது அருகிலுள்ள முகாம் போராளிகளின் உதவியுடன் தங்கள் அவசர தேவைகளை பூர்த்தி செய்த காலம்.
அத்தகைய காலப்பகுதியில் கிளிநொச்சி இராமநாதபுரம் எனும் ஊரில் தலைவர் பிரபாகரன் அவர்களின் மனைவி பிள்ளைகள் வசித்து வந்தனர். அப்போது தலைவரின் மூன்றாவது மகன் பாலச்சந்திரன் பிறந்து இரண்டு வயது ஆகியிருந்தது. மாதத்தில் ஒரு முறையாவது தலைவர் பிரபாகரன் அவர்கள் தனது மகனை பார்க்க செல்வார்.
அப்படி ஒரு முறை மகனை பார்க்க இராமநாதபுரத்திலுள்ள மனைவி வீட்டிற்கு சென்று தங்கியிருந்த போது இரவு வேளையில் பாலச்சந்திரனை திருநீலகண்டன் எனும் பெரும் வகை மட்டைத் தேள் (பூரான்) கடித்து விட்டது. அந்த வகை பூரான் மிகவும் கொடிய விசம் கொண்டது. உடனடியாக போராளி மருத்துவர் அன்ரி (பத்மலோசினி) யிடம் தலைவரின் மனைவி மற்றும் பாதுகாப்பு போராளிகள் ஆகியோர் அழைத்துச் சென்று விட்டனர்.
அப்போது வீட்டில் தலைவருடன் துவாரகா மற்றும் சார்லஸ் அன்ரனி ஆகியோர் இருந்தனர். அன்று இரவு யாருமே தூங்கவில்லை. தலைவரும் கூட. இரண்டு வயது பாலகனுக்கு கடித்ததால் பாதுகாப்பு போராளிகள் மற்றும் வீட்டில் எல்லோருமே பதட்டத்துடன் இருந்தனர். ஆனால் துவாரகா தம்பிக்கு இப்படி நடந்துவிட்டதே உயிருக்கு ஆபத்து ஏற்படுமா என எந்த சலனமும் இல்லாமல் பாதுகாப்பு போராளிகளுக்கு தேநீர் தயாரித்து கொடுப்பதும் சிரித்து பேசுவதுமாக இருந்துள்ளார். இதனை அவதானித்த தலைவர் துவாரகாவை அழைத்து தம்பிக்கு தேள் கடித்து என்ன நிலையில் இருக்கிறான் என உனக்கு கவலை இல்லையா என கேட்டார்.
அதற்கு துவாரகா அப்பா என் தம்பிக்கு தேள் கடித்ததற்கு நீங்கள் எல்லோரும் பதறியடித்து உடனடியாக வாகனத்தில் ஏற்றி அம்மாவுடன் மருத்துவமனைக்கு அனுப்பி விட்டீர்கள். ஆனால் இந்த ஊரில் உள்ள கர்ப்பிணி அம்மாக்களும் சரி குழந்தைகளுக்கு பாம்பு கடித்தாலும் சரி யாரிடம் போவார்கள்? அருகில் எங்காவது மருத்துவமனைகள் உள்ளதா? என கேட்டார். அப்போது தலைவரும் சரி நீயே சொல்லு கிராமங்களில் உள்ள மக்களுக்கு என்ன செய்யலாம்? என துவாரகாவிடம் கேட்டபோது, எமது மருத்துவ போராளி அண்ணாக்களை ஒவ்வொரு ஊர்களுக்கும் மக்களுக்கு சேவையாற்ற விட முடியாதா? என கேட்டதும். இது நல்ல யோசனைதான் எனவும் நாளையே இதற்கான ஒழுங்குகளை செய்வதாக துவாரகாவிடம் கூறி படுக்கைக்கு சென்றுவிட்டார்.
அதன்படி தலைவர் பிரபாகரனின் மகள் துவாரகாவின் சிந்தனையில் உருவாகி ஈழத்தின் மருத்துவமனைகள் இல்லாத கிராமங்களுக்கு திலீபன் ஞாபகார்த்த மருத்துவமனைகள் அமைக்கப்பட்டன. அங்கு மருத்துவ போராளிகள் உதவி மருத்துவர்களாக நியமிக்கப்பட்டு அம்புலன்ஸ் வாகனமும் கொடுக்கப்பட்டது. மக்களுக்கு இறுதி வரை சேவையாற்றினார்கள்.
இதில் இன்னொரு முக்கிய விடையம் என்னவெனில் யுத்த நிறுத்த காலப்பகுதியில் ஸ்ரீலங்கா இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்த பிரதேசங்களில் அமைக்கப்பட்ட திலீபன் மருத்துவமனைகளில் ஸ்ரீலங்கா இராணுவத்தினரும் சென்று மருத்துவப் போராளிகளிடம் தங்கள் மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்து கொண்டனர். அவர்களுக்கு தெரியும் புலிகள் எதிரிகளாக இருந்தாலும் மருந்துகளை மாற்றிக்கொடுத்து துரோகம் செய்ய மாட்டார்கள்…