முதல் பெண் மாவீரரான 2ஆம் லெப். மாலதியின் வீர வரலாறு.
”பெண் விடுதலைக்கு வித்திட்ட 2ம் லெப் மாலதி “ பெண் அடிமைத்தனத்தின் விலங்குகளை உடைத்தெறியாத எந்த ஒரு நாடும், எந்த ஒரு சமூகமும், முழுமையான சமூக விடுதலையைப் பெற்றதாக கூறமுடியாது…”
– தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள்-
1987.10.10 தமிழீழ வரலாற்றில் புதிய சரிதம் ஒன்றைப் படைக்கப்போகும் அந்த இரவு அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தது. ஆணிவேர் ஆளப்பதிந்து கொண்டிருந்த எமது போராட்டத்தை அழித்துவிடும் நோக்குடன் தமிழீழத்திற்கு அனுப்பப்பட்ட இந்திய இராணுவம் போராளிகளைத் தேடி, இருள் கிழித்து உலாவத் தொடங்கியது. எல்லா இடங்களிலும் எம்மவரின் விழிகள் பகை வரவை எதிர்பார்த்தபடி காத்திருந்தன.
அப்போது நேரம் 1.15. கோப்பாய் கிறேசரடியில் நின்ற மகளிர் அணி வீதியில் போய்வரும் ஊர்திகள் யாருடையவை என அவதானித்தவாறு தாக்குதலுக்குத் தயாராக நிற்க, அதில் ஒருவராக தனது ஆ16 ஐ அணைத்துப்பிடித்தபடி மாலதியும் நிற்கின்றார். வானம் கரிய இருளைச் சொரிந்து கொண்டிருக்க, குவியல் குவியலாகச் சிந்திக்கிடந்தன நட்சத்திரப் பூக்கள். இடையிடையே வீதியால் போய்வரும் ஊர்திகளின் ஒளிகள் வானத்தை நோக்கி நீண்ட ஒளிக் கோடுகளை வரைய, ஒவ்வொன்றையும் அவதானித்தபடி நிற்கிறார் மாலதி.
அப்பால் கைதடி நோக்கி விரிந்திருந்த வெளிகளினூடாக ஊடுருவிய கண்கள், இப்பால் கோப்பாய்ச் சந்தி கடந்து மிக வேகமாக வந்து கொண்டிருந்த ஊர்தியை நோக்கித் திரும்பின. மிக அண்மையில் வந்து விட்ட ஊர்தியிலிருந்து குதித்த இராணுவம் இவர்களிருந்த பகுதி நோக்கிச் சுடத்தொடங்கியது. அந்த இடத்தில் இந்திய இராணுவத்தை நோக்கிச் சுழன்ற முதலாவது சுடகலனும் மாலதியினுடையதுதான். கோப்பாய் – கைதடி வெளியில் எழுந்த சூட்டுச் சத்தங்கள் எங்கள் சரித்திரத்தில் புதிய அத்தியாயத்தை எழுதத் தொடங்கின.
சண்டை கடுமையாகத்தான் நடந்தது. சீறும் ரவைகளின் ஒலியும், அவற்றின் ஒளிர்வும் தாக்குதலின் கடுமையைப் பறைசாற்றின. மாலதி இராணுவத்தினருக்கு மிக அண்மையில் நின்று தாக்குதலைச் செய்து கொண்டிருந்தார். திடீரெனக் காலில் காயமுற்ற மாலதியின் குரல் வேட்டொலிகளையும் மீறி ஒலித்தது. “நான் காயப்பட்டிட்டன். என்ர ஆயுதத்தைப் பிடியுங்கோ. என்ர ஆயதத்தைக் கொண்டு போய் அண்ணையிட்டைக் குடுங்கோ”
காயமுற்ற பின்னும் சுட்டுக் கொண்டிருந்தவர் இராணுவம் அதிகமாக நிற்பதைப் புரிந்து கொண்டார். தான் வீரச் சாவடைந்தாலுங்கூட, தான் நேசித்த ஆயுதம் எதிரியிடம் விடுபட்டுவிடக் கூடாது என்ற எண்ணத்தில், தன்னைப் பார்க்காமல் ஆயுதத்தைக் கொண்டு போகும் படி கூறிக் கொண்டிருந்தார். அவரை எப்படியும் காப்பாற்ற வேண்டும் என்ற வேகத்துடன் ஊர்ந்து சென்ற விஜியிடம்,”என்ர ஆயுதம் பத்திரம். என்னை விட்டிட்டு ஆயுதத்தைக் கொண்டுபோ” எனச் சொல்லி ஆயுதத்தைக் கொடுத்தவர், கழுத்திலிருந்த நஞ்சையருந்தி மண்ணை முத்தமிட்டார். தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்ட வரலாற்றில் முதல் பெண் மாவீரர் 2ஆம் லெப். மாலதி வழிகாட்டிச் சென்ற பாதையில் பயணங்களைத் தொடருவோம். அவர் உயிரிலும் மேலாக நேசித்த ஆயுதமும், இந்தத் தேசமும் அவரின் வரலாற்றைச் சுமந்திருக்கும்.
மன்னார் மகளே! தொடர்வோம் உன் வழியில். பதுங்கிப் பதுங்கி வாழ நாங்கள் ஒன்றும் கோழைகள் அல்ல. பொங்கி எழுந்த புலி இனம்தொடர்வோம்……….. காப்போம் எம் தேசம்.
நன்றி: விழுதாகி வேருமாகி
தொகுப்பு: கயல்விழி
எமது சமூகத்தில் வேரூன்றியிருந்த, பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். பெண்ணானவள் இப்படித்தான் இருப்பாள். இதற்கு மேல் அவளால் முடியாது. ஆணைவிட பெண்ணுக்கு ஆற்றல் குறைவு என்ற கருத்துக்களை – 2ஆம் லெப். மாலதி 34 ஆண்டுகளுக்கு முன் பொய்யாக்கினாள். பெண்ணினால் எல்லாம் முடியும் என்று செய்து காட்டினாள். அந்நிய ஆக்கிரமிப்பில் எமது தேசம் துவண்டிருந்த போது வீறு கொண்டெழுந்தாள். பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாவதைப் பார்த்துக் கொதித்தாள்.
நாட்டின் விடுதலையோடு பெண்ணினத்தின் விடுதலையையும் கருத்தில் கொண்டு ஆயுதம் தூக்கியவள், அந்த இலட்சியக் கனவோடே வீரச்சாவை தழுவிக் கொண்டாள்.
வரலாற்றில் எழுந்த இலக்கியம், இதிகாசம், புராணம் என எதுவானாலும் பெண்ணின் புற அழகிற்கே முக்கியத்துவத்தை கொடுத்து பெண்ணின் பலத்தை வெளிக்கொணராமல் போயுள்ளன. பெண் எனப்பட்டவள் இயலாமையின் வடிவம் என்ற பிம்பத்தை தோற்றுவிப்பதில் சமூகத்தின் பிற்போக்குவாதிகள் வெற்றி கண்டுள்ளனர். வீட்டில் ஆண் குழந்தை பிறந்துவிட்டால் மகிழ்ச்சி பெருமிதம். பெண் பிறந்துவிட்டால் கவலை. ஏக்கப் பெருமூச்சு. இதுதான் இன்றுள்ள நிலை. இந்த அவலம் ஏன் நமக்கு ஏற்பட்டது? ஏன் எங்கள் மனங்களில் மாற்றம் வரவில்லை. ஒரு ஆணுக்குரிய ஆற்றல் அவ்வளவும் பெண்ணுக்குள்ளும் இருக்கிறதுதானே. அப்படியிருந்தும் சமூகத்தில் ஏன் இந்தப் பாகுபாடு? இந்தக் கேள்விகள் எல்லோர் மனங்களிலும் எழவேண்டும். இதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைக்கும் திறன் புதிய தலைமுறைக்கு உண்டு.
மனிதகுல வரலாற்றில் கிறிஸ்துவுக்கு 6000 (ஆறாயிரம்) ஆண்டுகளுக்கு முன் தாய் வழிச் சமூகமே இவ்வுலகில் ஆட்சி புரிந்தது. காடுகளில் குழந்தைகள் குழுக்களாக வாழ்ந்த காலத்தில் தாயின் இராச்சியமே நடைபெற்றது. குழுவிற்கு தாய்தான் தலைமை தாங்கினாள். பெண்ணே பெரிதாக மதிக்கப்பட்டாள். தாய் என்ற சொல்லே மருவி தலைவி என்றாகிவிட்டது என வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். தன்னுடைய இனத்தைக் காக்கும் சக்தியாக பெண் விளங்கினாள். அவளின் சக்திக்கு கட்டுப்பட்டு பின்னால் செல்ல அவளது சமூகம் தயாராகவிருந்தது அன்று. தனது இனத்தை பாதுகாக்கவும், அவர்களுக்கு உணவு கொடுக்கவும், தேவையானவற்றை தேடிக் கொடுக்கவும், தாயானவள் தன்னைப் பலி கொடுக்கவும் தயாராகவிருந்தாள் என்பது உயர்ந்த தியாகமாகும். அது அன்றே இருந்தது.
எதிரிகளிடமிருந்தும் காட்டு விலங்குகளிடமிருந்தும் தனது இனத்தை காக்க தானே தலைமை தாங்கி வழி நடத்தினாள். பஞ்சாயத்து சபையை நிறுவி நிர்வாகம் செய்தாள். அன்றைய பெண்ணும் போர் முனைகளைச் சந்தித்தவள்தான். எதிரிக் குழுக்களை தாக்க, வேட்டையாட தானே ஆயுதங்களைக் கொண்டு முன்னே சென்று தாக்குவாள். அந்த தாய்க்குப் பின்னால் தான் அவளது குழுவைச் சேர்ந்த பெண்களும், ஆண்களும் வருவார்கள். சண்டை செய்வார்கள். சாவைச் சந்திப்பார்கள். வெற்றி பெறுவார்கள்.
மலைகளின் மீது மான்களைப் போன்று ஏறி எதிரியை விரட்டவும், தேனை எடுக்கவும் அந்தப் பெண்களால் முடிந்தது. தேன் குடிக்க கரடி ஏற முடியாத இடத்தில் கூட ஏறி நின்று தேன் குடிப்பாள் வீரமங்கை. கல்லினால் கூரிய ஆயுதம் செய்யவும், தோலினால் கருவி செய்யவும், பாத்திரம் செய்யவும், அழகிய குடிசை கட்டவும், நடனமாடவும் அந்தப் பெண்களால் முடியும்.
உலகில் சரிபாதியினர் பெண்கள், எமது சமூகத்திலே சரிபாதியினர் பெண்கள். இந்தச் சரிபாதித் தொகையினரான பெண்கள் போராட்டத்தில் பங்கு பெறாது எமது தேசத்தின் விடுதலை சாத்தியப்படாது. சரிபாதியினரான பெண்களுக்கு விடுதலையின்றி எமது தேசவிடுதலையும் முழுமை பெறாது என்பது தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரனின் கருத்தாகும். அடக்கு முறையின் வடிவமாக பெண்ணை ஆளாக்கியுள்ள நமது சமூகம் அந்தத் தளையை அறுக்க முன்வரவில்லை. பெண் ஒடுக்குமுறைக் கருத்துகள் இன்னமும் பலமான நிலையில் பேசப்படுகின்றன. அவ்வாறான சமூக கட்டமைப்பு எழுதப்படாத வாக்கியமாக நிலைத்து நிற்கிறது. சாதி வேறுபாடுகள், மூட நம்பிக்கைகள் புரையோடிப் போயிருந்த சூழ்நிலையில் பெண்கள் அதிலே புதையுண்டு போனதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. தமிழரது வாழ்வில் அடிமைத்தனம் என்பது பல ஆண்டுகளாக நீடித்துள்ளது. அந்நியப் படையெடுப்புகளால் தமிழரது கலாசாரம் பண்பாடு என்பன சிதையுண்டு போயுள்ளன.
தமிழர் வாழ்வில் பெண் மதிக்கப்பட்டு அவளுக்குரிய கௌரவம் வழங்கப்பட்டு வந்திருக்கிறது. ஆனால் ஆரியப்படைகளுக்கு தமிழன் அஞ்சியோடவில்லை. ஆனால் வஞ்சகமாக ஆன்மீக தத்துவங்களை புகுத்தி ஆரிய சக்கரவர்த்திகள் தமிழ் நாடுகளை அடிபணிய வைத்தார்கள். அதுதான் தமிழ்மக்களின் தமிழ்ப் பெண்களின் வாழ்வுக்கு அஸ்தமனமாகவிருந்தது. அவர்கள் போட்ட விதைதான் பெண்ணடிமை, சீதனம், சாதிமுறை, குலதொழில் என்பன. இன்றுகூட இந்தியாவில் பெண்கள்படும் இழிவுநிலை ஏராளம். இந்திய ஆதிக்கம் ஈழத்திலும் நிலை கொண்டதனால் ஈழப்பெண்களும் இதுபோன்ற அடக்கு முறைக்கு ஆளாகினர்.
அன்று எமது சமூகத்தில் பெண்களுக்கெதிரான சமூக அநீதிகள் அதிகரித்திருந்தன. பெண் அடக்குமுறைக் கருத்துகள் பலமாக நிலவின. எமது சமூகமே சாதி சமய வேறுபாடுகளால் ஆழமாகப் பிளவுபட்டு நின்றது. எல்லாவற்றுக்கும் மேலாக நிலச்சுவாந்தர் முறைமையையும், சாதியக் கட்டமைப்புக்களையும் இறுக்கமாகப் பின்னிப்பிணைத்து அமைந்த பொருளாதார உற்பத்தி முறையில் எமது சமூகக் கட்டமைப்பு எழுதப்பட்டிருந்தது. அது சுய சிந்தனைக்கு வரம்புகளை விதித்தது. பெண்கள் தாம் அடக்கு முறைக்குள் வாழ்கிறோம் என்பதை உணரவிடாது தடுத்தது. அத்தோடு எதிரியின் இன அழிப்புப் போர் என்றுமில்லாதவாறு எம்மண்ணில் தீவிரமடைந்திருந்தது. அந்நிலையில் அடிப்படையான சமூக மாற்றத்தை ஏற்படுத்தி பெண் விடுதலைக்கு வழிசமைப்பது பற்றி நாம் சிந்திக்க முடியாதிருந்தது.
எனவே விடுதலைப் போராட்டத்தில் பெண்களையும் அணி சேர்ப்பதினூடாகப் படிப்படியாக சமூகமாற்றத்தை ஏற்படுத்தி பெண் விடுதலையையும், தேசவிடுதலையையும் சாத்தியமாக்கலாம். இவ்வாறுதான் எமது போராட்டத்தில் பெண் புலிகள் தோற்றம் பெற்று இன்று எதிரியின் படைப்பலத்தைச் சிதைத்து யுத்தத்தின் போக்கையே நிர்ணயிக்கின்ற பெரும் படையணிகளாக எழுந்து நிற்கிறார்கள்.
ஒரு நூற்றாண்டுக்கு மேலாக மேற்குலகப் பெண்கள் பெரும் போராட்டங்களை நிகழ்த்தி, புரட்சிகளை நடத்தி விவாதங்களை புரிந்து கருத்தமர்வுகளை மேற்கொண்டு பெற்றெடுத்தவற்றைவிட எமது பெண் புலிகள் மிக்க குறுகிய காலத்துக்குள் எமது பெண்களுக்குப் பெற்றுக் கொடுத்த உரிமைகளும், சுதந்திரங்களும் அளப்பரியவை. அத்தோடு சமூகத்திலே பெரும் புரட்சியை நிகழ்த்தியிருக்கிறார்கள். சமூகக் கருத்துலகில் புதிய பார்வையை வளர்த்து வருகிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக ஆணும், பெண்ணும் சமமான ஆற்றல்களுடனேயே படைக்கப் பட்டிருக்கிறார்கள் என்ற உடற் கூற்றியல் நிபுணர்களது, கூற்றுக்கு பெண் புலிகளே உலகுக்கு உதாரணமாக வாழ்கிறார்கள் என பெண் போராளிகள் பற்றி தலைவர் பிரபாகரன் பெருமிதத்துடன் குறிப்பிடுகிறார்.
ஆதிரை (புரட்சி)
நிலவரம் குழுமம் மீள் பதிப்பு 2007