×

நாகேஷ்

நாகேஷ் (இயற்பெயர் செய்யூர் கிருஷ்ணாராவ் நாகேஷ்வரன், புரட்டாசி 27, 1933 – தை 31, 2009) த‌மிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிக‌ராவார். இவர் நகைச்சுவை நடிக‌ராகவும், துணை நடிகர், வில்லனாகவும் தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் 1000 திரைப்படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். இவரின் நகைச்சுவை பாணி ஹாலிவுட் நடிகர் ஜெர்ரி லூயிஸின் பாணியை ஒத்திருந்ததாகக் கூறப்படுகின்றது.

நடிப்புத் துறையில்
சிறுவயதில் இருந்தே நடிப்பின் மீது பற்றுக் கொண்ட நாகேஷ் அமெச்சூர் நாடகங்களில் நடித்து வந்தார். மணியன் எழுதிய ‘டாக்டர் நிர்மலா’ நாடகத்தில், ‘தை தண்டபாணி’ என்ற பாத்திரத்தில் “தை, தை” என்று நோயாளியாய் மேடையில் குதித்ததால், ‘தை நாகேஷ்’ என்றும் பின்னர் ஆங்கிலத்தில் Thai என்பதை ‘தாய்’ என்று மாற்றி படித்ததால், இவர் “தாய் நாகேஷ்” என அழைக்கப்பட்டார்.

1959 ஆம் ஆண்டில் திரைப்படத்துறையில் புகுந்தார். தாமரைக்குளம் என்ற திரைப்படத்தில் முதன் முதலாக நடித்தார். அதன்பின்னர் சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துக் கொண்டிருந்தார். ஸ்ரீதரின் காதலிக்க நேரமில்லை திரைப்படத்தில் முக்கிய நகைச்சுவைப் பாத்திரத்தில் தோன்றினார். இவருடன் பல படங்களில் ஜோடியாக நடித்தவர் மனோரமா ஆவார்.

கே. பாலசந்தர் கதை, வசனம் எழுதிய சர்வர் சுந்தரம் திரைப்படத்தில் மிகச் சிறப்பாக நடித்து குணச்சித்திர நடிப்பிலும் நாகேஷ் சிறந்து விளங்கினார்.

திருவிளையாடல் படத்தில் தருமி என்ற கதாபாத்திரம், தில்லானா மோகனாம்பாள் படத்தில் வைத்தி என்ற பாத்திரம் பலராலும் பாராட்டப்பட்டது. எம். ஜி. ஆர், சிவாஜி கணேசன் போன்றோருடன் பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார்.

கதை நாயகனாக
நீர்க்குமிழி என்ற படத்தில் நாகேஷை கதாநாயகனாக நடிக்க வைத்தார் இயக்குனர் கே. பாலச்சந்தர். அந்தப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன் சிறந்த நடிப்புத் திறமை கொண்டவர் நாகேஷ் என்பதை ரசிகர்களுக்கு உணர்த்தியது. தேன்கிண்ணம், நவக்கிரகம், எதிர் நீச்சல், நீர்க்குமிழி, யாருக்காக அழுதான், அனுபவி ராஜா அனுபவி போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

Source: Wikipedia

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments