
கணப்பொழுது கப்டன் கௌதமன் – வீரவணக்க நாள் இன்று 19.07.1996
1974ம் ஆண்டு மே மாதம் 01ம் திகதி கௌதமன் அடைக்கலம் தம்பதியினருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தான். இவனுக்குப் பெற்றோர், இன்பசோதி எனப் பெயரிட்டனர். இவன் வீட்டிற்கு ஒரே ஒரு ஆண் குழந்தை என்பதனால் இவனது பெற்றோரும், சகோதரிகளும் அன்பாகப் பார்த்தனர். படிப்பிலும் சரி, விளையாட்டிலும் சரி திறமையாகவே செயற்பட்டான். இவனுக்கு துடுப்பாட்டம் மிகவும் பிடித்த விளையாட்டு. துடுப்பாட்டத்தில் இவனது திறமையைக் கண்டு சென். பற்றிக்ஸ் கல்லூரியின் துடுப்பாட்ட அணிக்குத் தலைவனாகத் தெரிவு செய்யப்பட்டான். இவன் தனது கல்லூரிக்காக துடுப்பாட்டத்தில் பல வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளான்.
இன்பசோதி கிறிக்கற் மச்சுக்கு வந்தால் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்பது அவனது தோழர்களின் நம்பிக்கை. இதனால் நண்பர்கள் ‘இன்பசோதி வந்து பற் பண்ணீட்டு மட்டும் போடா’ என்று கேட்பார்கள். பற்றைப் பிடித்து பந்தை விளாசுவதில் கெட்டிக்காரன். அவனது திறமையை பத்திரிகைகளும் சொல்லும்.
இவ்வாறு படித்துக் கொண்டிருந்தவனுக்கு, எமது மக்களுக்கு அந்நிய இராணுவமான சிங்கள இராணுவம் செய்த கொடுமைகள் அவனது நெஞ்சத்தைத் தொட்டன. கோட்டையிலிருந்தும், மண்டை தீவிலிருந்தும் ஏவும் எறிகணைகள் வீழ்ந்து வெடித்து எமது மக்களை வயது வேறுபாடின்றி அழித்து, உடைமைகளை நாசமாக்குவதைக் கண்டு கொதித்தான். ஏன் நமது மக்களுக்கு இந்த அவல வாழ்வு? இப்படியே தொடர்ந்தால் எமது மக்கள் அடிமைகளாகவும், விலங்குகளாகவும் வாழ நேரிடும். நாம் போராட்டத்தில் இணையாது ஒதுங்கினால், எமது எதிர்கால இளஞ்சந்ததி எமது சொந்த மண்ணில் அடிமை வாழ்க்கை வாழ நேரிடும். எனவே இனியும் தாமதியாது சந்ததியின் வாழ்விற்காக உயிரைத் தியாகம் செய்யும் படையணியில் இணைந்து ஆயுதத்தால் அடக்கும் எதிரிக்கு, ஆயுதத்தால் பதில் சொல்ல வேண்டும் என எழுந்தான்.
ஆம், அந்த நாளும் வந்தது. 1991ம் ஆண்டு ஜுலை மாதம். இக்காலப்பகுதியில் தான் கௌதமனும் சில பாடசாலைத் தோழர்களுடன் தன்னை முழுமையாக விடுதலைப் புலிகளுடன் இணைத்துக் கொண்டான். இயக்கத்தில் இணைந்த இவன் மண்தோட்டம் ஆறாவது பயிற்சி முகாமில் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்த வேளை, பல தோழர்களுடன் அவனும் விசேட பயிற்சிக்கெனத் தேர்ந்தெடுக்கப்பட்டு, சரத்பாபு முன்றில் பயிற்சி எடுத்தான். பாடசாலை விளையாட்டுக்களில் திறமையாக ஈடுபட்டதால் இவனுக்கு அடிப்படை பயிற்சி கடினமாக இருக்கவில்லை. பயிற்சிகளில் கிடைக்கும் சிறு ஓய்வு நேரங்களில் தன்னைச் சுற்றியிருக்கும் தனது தோழர்களை பகிடி விட்டு சிரிக்க வைத்துக் கொண்டிருப்பான். இதனால் தோழர்களும் அவனைச் சூழ்ந்தே இருப்பார்கள்.
பயிற்சி முடியும் முன்பே அவனது சண்டைக் களமும் ஆரம்பமானது. ஆம், ஆனையிறவுச் சமருடனும், சிலாபத்துறைச் சமருடனும் புலிகள் பலமிழந்து விட்டார்கள் இனி அவர்களை இலகுவில் அழித்து அடிபணிய வைக்கலாம் என நினைத்து தமிழீழத்தின் இதயமான மணலாற்றில் இராணுவ நடவடிக்கையை சிங்களப்படை ஆரம்பித்தது. புலிப்படை ஒரு போதும் பலமிழந்ததில்லை. ஒவ்வொரு சண்டையிலும் புது அனுபவம் பெற்று பலம் பெற்றே உள்ளனர் என்று துப்பாக்கிகளால் பதில் சொல்லிக் கொண்டிருந்த வேளை அந்தப் பகுதிக்கான உதவிக் குழுவில் கௌதமனும் தெரிவு செய்து அனுப்பப்பட்டான். அங்கு அவன் துணிவுடனும், திறமையுடனும் கொடுத்த வேலையைச் செய்தான்.
இவ்வேளையில் இவனுடன் இணைந்த பாடசாலை நண்பனான வீரவேங்கை வாசு வீரச்சாவடைந்ததும், முதன் முதலாக அவன் மனம் இறுகியது. இச் சண்டை முடிந்ததும் மீண்டும் பயிற்சி முகாம் சென்று தனது அடிப்படை பயிற்சியைப் முடித்தான். அடிப்படை பயிற்சி முடிந்ததும், முக்கிய பணிக்காக இவன் சில போராளிகளுடன் தெரிவு செய்யப்பட்டான்.
எனினும் இவனுக்கு சண்டைக்குச் செல்லவேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது. இருப்பினும் கொடுக்கப்பட்ட பணி ஒரு முக்கிய பணி என்பதால் விரும்பி ஏற்றுதிறமையாகச் செயற்பட்டுவந்தான். விவரிக்க முடியாத அவன் செய்த வேலைகள் அவனுக்கே தெரியும். அப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது விடுதலைப் புலிகளால் இரண்டாவதாகப் பெயர் சூட்டி நடாத்தப்பட்ட தாக்குதலுக்குச் செல்ல பொறுப்பாளரால் அனுப்பப்பட்டான்.
தமிழீழத்தைத் துண்டாடி, சிங்களவர்களைக் குடியமர்த்தி, அவர்களுக்கு ஆயுதங்களும் கொடுத்திருந்தது சிங்கள அரசு. இவர்களுக்குப் பாதுகாப்பாக அமைக்கப்பட்ட மண்கிண்டிமலை இராணுவ முகாம், தமிழர்களுக்குப் பெரும் துன்பத்தைக் கொடுத்தது. இத்தாக்குதலான இதயபூமி 1ல் கௌதமன் சிங்களப் படைகளுக்கு வு56-2 வினால் பதில் சொன்னான். இம் முகாம் கைப்பற்றிய சண்டையின் பின், மீண்டும் பழைய பணியில் ஈடுபட்டான். 1995ம் ஆண்டு காலப்பகுதியில் சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கை ஆரம்பமானது. சமாதானத்தை நிலை நாட்டுவோம். அப்பாவி மக்கள் யுத்தத்தால் அநியாயமாகக் கொல்லப்படுகிறார்கள்.
சமாதானத்தை நிலை நாட்டுவோம் என்று முழக்கமிட்ட சந்திரிகா அரசு, தானும் தமிழ் மீது யுத்தத்தின் கோரப் பற்களைப் பதித்தது. இந் நடவடிக்கையால் தமது உடமைகளையும் உறவுகளையும் இழந்து தமிழ் மக்கள் இடம் பெயர்ந்தார்கள். இவன் தனது பணிகளுக்காக வன்னிக்கு மாற்றப்பட்டு, முகாம் அமைக்கும் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான். இவ்வேளையில் ‘நான் சண்டைக்குப் போகப்போறன்’ என பொறுப்பாளரிடம் அனுமதி கேட்டான். அவன் விரும்பியபடி அனுமதியும் கிடைத்தது. அவனின் நீண்டநாள் ஆசை நிறைவேறத் தொடங்கியது. ‘இனி சண்டைதான் பிடிக்கவேணும்’ என்று கூறுவான். மகிழ்ச்சியுடன் சண்டைக்கான பயிற்சிக்குச் செல்லும் போது ‘என்ன மச்சான், இந்த சண்டை முடிய பழைய வேலைக்கு வருவாய் தானே’ என்று சகபோராளி கேட்க, ‘இனி என்ர இலக்கு வேறதானே’ என்று உறுதியாகக் கூறினான்.
சண்டைக்கு தயாரான போது கௌதமன் ஒரு பிளட்டூனுக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டான். அப்பொழுது தனது சகபோராளிகளுக்குச் சொன்னான். ‘இப்ப ஆமி என்ன செய்வினம், தங்கட இடம் எண்டு ஓடித்திரிவினம். காம்புக்க அடி விளேக்க தான் தெரியும் இது ஆற்ற இடமெண்டு’. இரவுத் தாக்குதலுக்கு தயாரானபோது கௌதமனின் குழுவுக்கு, மற்றைய அணிக்கு உதவியாக இருக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டது. 18.07.1996 இரவு சண்டை தொடங்கி புலிகள் வீரத்துடன் போராடி முல்லை முகாமைக் கைப்பற்றினர். ஓடிய படையினரை புலிகள் தேடி அழித்தனர்.
19ம் திகதி காலை வானொலியில் முகாம் புலிகளிடம் வீழ்ந்தது என்று கூறிக்கேட்டு, துள்ளிக்கொண்டு சந்தோசத்திலிருந்தான். இதன் பின் அன்று கடற்கரையில் எதிரிப்படை தரையிறங்காது தடுக்க இவனது பிளட்டூன் அனுப்பப்பட்டது. அவ்வேளை முகாமை இழந்த சிங்களத் தலைமை அதனைக் கைப்பற்ற கடலாலும், ஆகாயத்தாலும் படைகளைத் தரையிறக்கியது. உயரத்தே பறந்த கெலியை ‘கொஞ்சம் பதிஞ்சுவா’ என்று சிரித்துக் கொண்டு கூறினான். அன்றே தரையிறக்கிய படையுடன் உக்கிர சண்டை தொடங்கியது. தரையிறக்கிய படையினருக்கு கௌதமனின் கையிலிருந்த ஏ.கே பதில் சொன்னது. ஆம், ஆவேசத்துடன் எதிரிகளைச் சல்லடையாக்கிக் கொண்டிருந்தான்.
சிங்கள அரசுக்கு அது ஒரு பயங்கர அடிபோல் இருந்தது. வீரத்துடன் முழக்கமிட்டுக் களமாடிக் கொண்டிருந்த கௌதமனின் மார்பில் எதிரியின் ரவையொன்று துழைத்தது. அந்தக் கணப்பொழுது எந்த மண்ணை நேசித்தானோ, அந்தத் தமிழீழ மண்ணை தனது குருதியால் கழுவி முத்தமிட்டான். எனினும் அவன் வளர்த்த போராளிகள் அவனது இலட்சியத்தினையும் ஆயுதத்தினையும் சுமந்து கொண்டு அவனது பாதச் சுவட்டிலே தொடர்கின்றனர். தமிழீழம் மலரும் வரை பயணம் தொடரும்.
எழுதியவர் – போராளி பரிமேலழகன்