
“அம்மா நீங்கள் ஒரு உதவி செய்வீர்களா?”
“சொல்லுங்கோ தம்பிமார் என்ன செய்ய வேணும்?”
“அம்மா எங்களுக்கு நீங்கள் சமைச்சு தர வேணும். களமுனையில் நிக்கிற போராளிகளுக்குத்தான். முல்லைத்தீவு ராணுவ முகாமை கிளப்ப வேணும். நீங்கள் சமைச்சு பார்சலாக்கி வையுங்க. பெடியள் வந்து எடுத்துக்கொண்டு போவாங்கள்.”
“சரி தம்பிமார் கட்டாயம் சமைச்சு தாறன். எங்கட பிள்ளைகளுக்கு நாங்கள் செய்யாமல் வேற யார் செய்கிறது?”
“சரியம்மா நன்றி அம்மா.”
பக்கத்து வீட்டில் எனது அக்காவின் குடும்பம்தான் வாழ்ந்தது. அக்காவின் மகள் பாமாவையும் உதவிக்கு சேர்த்துக்கொண்டேன். பெரிய பாத்திரங்களில் சமையல் செய்ய வேண்டி இருந்ததால் அனுபவம் வாய்ந்த ஒரு ஐயாவையும் சேர்த்தேன். எனது பிள்ளைகள் ஒருவர் விடாமல் கை கொடுத்தார்கள். அப்போது சந்தையில் எந்த மரக்கறி மலிவோ அந்த மரக்கறிதான் அன்றைய கறியாக இருக்கும். 500 முதல் 700 வரையான உணவு பொதிகளை மூன்று நேரமும் சமைத்து போடுவது என்பது சாதாரண வேலையாக இருக்கவில்லை. மிகுந்த அர்ப்பணிப்போடு நாங்கள் எங்கள் பிள்ளைகளுக்கான உணவை சமைத்தோம்.
ஆயிரம் ஆண்டுகளாக அடிமைப்பட்டுக் கிடந்த ஒரு இனத்தை விடுதலை செய்ய அந்த இனத்தின் ஒரு பகுதியினர் இவ்வாறு அணியமாகியிருந்தனர்.