
அனுமதிப் பத்திரமுறை (பாஸ்) ஏன் நடைமுறைப் படுத்தப்படுகிறது?
சுமார் நான்கு மாதங்களுக்கு முன்னர், சங்குப்பிட்டியில் நீண்டிருந்த மக்கள் வெள்ளத்தில் ஒருவராக நடுத்தரவயது மதிக்கத்தக்க ஒருவரும் நின்றார் . இடையிடையே இருமிக்கொண்டு குளிரில் நடுங்கியபடி நின்ற அந்த நோயாளி மனிதரைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது.
மருத்துவ சிகிச்சைக்காக கொழும்பு செல்லும் அந்த நோயாளி யாழ்ப்பாணத்தில் இருந்தால் மருத்துவ வசதியின்றிச் சிலநாட்களில் இறந்து போய் விடலாம். வழியிலும், வள்ளத்தில் ஏறும்போதும்,இறங்கும் போதும் ஒழுங்குபடுத்துவதற்கு நின்ற இளைஞர்கள் அந்நோயாளிக்கு அனுதாபத்துடன் உதவிசெய்தனர்.
தாண்டிக்குளம் காவலரணையும் கடந்து வவுனியா நகருக்குள் அவர் செல்கின்றார். இதுவரை நிமிர்ந்து சென்ற தமிழர்கள் தலை குனிந்து நடந்தனர்,ஆனால் அந்த நோயாளி நிமிர்ந்து நெஞ்சை நிமிர்த்தி நடந்தார், அவரின் நோயாளித் தோற்றம் மறைந்தது. நகரத்துக்கடையொன்றில் வைத்துத் தேசவிரோதக் கும்பலைச் சேர்ந்த ஒருவனைச் சந்தித்தவுடன் அவர் கையோடு கொண்டு சென்ற மருந்துப் போத்தலை எடுக்கின்றார். அதற்குள் சுருட்டி வைத்தபடி வரைப்படம் ஒன்று இருந்தது. இருவரும் சிரித்தமுகத்துடன் சிங்களப் படை முகாமிற்குள் நுழைந்தனர்.
இரண்டு நாட்களின் பின், தமிழீழப் பத்தரிகைகளில் செய்திகள் வெளிவந்தன “விமானங்கள் மூன்று இடங்களில் அகோரக்குண்டுவீச்சு ” இரண்டு புலிளும் பத்துப் பொதுமக்களும் பலி” இது கற்பனையில் வடிக்கப் பட்ட கதையல்ல இப்படிப்பல நிகழ்ச்சிகள் இந்த மண்ணில் தொடர்ந்தும் நிகழ்கின்றன.
இந்தத் துரோகங்கள் எப்படி நிகழ்கின்றன?
இவற்றைத் தடுக்க வழியில்லையா? என்ற கேள்விகளுக்கு விடைகாணும் போது அனுமதிப்பத்திரத்தின் தேவையும் – அவசியமும் . உணரப் படமுடியும் இன்று வடதமிழீழம் எமது நிருவாகத்திற்குள் இருக்கின்றது. இங்கே சிங்கள இனத்தைச் சேர்ந்த உளவாளி ஒருவன் எமது தெருக்களில் நடமாடித் தகவல்களைச் சேர்க்க முடியாது ஆகவே எமது இனத்தைச் சேர்ந்த துரோகி ஒருவரிடமிருந்துதான் எதிரிக்கு தகவல்கள் செல்கின்றன.
எமது நிர்வாகப் பகுதிகளிலிருந்தபடி துரோகி ஒருவன் வோக்கி-டோக்கி போன்ற தொலைத் தொடர்புக் கருவிகளுக்கூடாக எதிரிக்குத் தகவல்களை வழங்கமுடியாது. அதேசமயம் இந்தப்பகுதிகளில் இருக்கும் இராணுவ முகாம்களுக்கு நேரடியாகச் சென்று கொடுக்கவும் முடியாது. ஏனெனில் அந்த முகாம்கள் எமது முற்றுகைக்குள்ளேயே இருக்கின்றன.
இந்த நிலையில் உளவாளிகளின் தகவல்கள் வவுனியாவிற்கான பயணப்பாதையூடாகத்தான் பரிமாறப்படுகின்றன. வடதமிழீழத்தை விட்டு அப்பாற் செல்லவிரும்பும் ஒருவன் ஏதோ ஒரு காரணத்தைக் கூறிக் கொண்டுதான் செல்கின்றான் அவ்விதமே உளவாளியும் ஏதோ ஒரு காரணத்தைக் கூறிக்கொண்டுதான் செல்கின்றான். இவன் தன்னை உளவாளி என பிரகடனப் படுத்தமாட்டான்.
அப்படியாயின் உளவாளிகளையும், சந்தேகத்துக்கு இடமானவர்களையும் எவ்விதம் நாம் அடையாளம் காண்பது?
அனுமதிப் பத்திரமுறை இதற்கு உதவும்.
அனுமதிப்பத்திர முறையானது உலகில் புதியதொன்றல்ல. இது வெவ்வேறு பெயர்களில் உலக நாடுகள் அனைத்திலுமுண்டு. தனது நாட்டிற்குள் வருவோர் -போவோர் தொடர்பாக ஒரு கட்டுப்பாட்டையும் கண்காணிப்பையும் வைத்திருக்க வேண்டியது ஒவ்வொரு அரசினதும் கடமையாகும் அனுமதிப்பத்திர நடைமுறையூடாக இவைகள் செயற்படுத்தப்படுகின்றன. தமிழீழத்தைப் பொறுத்தளவில் உளவாளிகளும், நாசகாரசக்திகளும் நச்சுக்காய்களாக இருக்கின்றார்கள். இவர்களைக் கண்காணிக்கவும், அத்துடன் போதைப்பொருள் வருகையையும், குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பியோடி விடாதபடியும் அனுமதிப்பத்திரமுறை தடுத்து வைத்திருககின்றது.
அனுமதிப்பத்திரத்தைப் பெறுவதற்குச் சில ஒழுங்கு முறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. இந்த ஒழுங்கு முறைகள் துரோகங்கள் நடப்பதைத் தடுப்பதுடன் உளவாளிகள் உருவாவதற்குரிய சூழலையும் இல்லாமல் செய்கின்றது. அகாவது வடதமிழீழத்தை விட்டு அப்பால் செல்லவிரும்பும் ஒருவர் முதலில் தன்னைக் கிராம மத்தியில் அடையாளம் காட்டிக் கொள்ள வேண்டும். கிராமரீதியாக அமைக்கப்பட்ட சிற்றூரவைத் தலைவர்களது உறுதிப்படுத்தப்பட்ட நற்சான்றிதழ் கடிதத்துடன் பிரதேசப் பொறுப்பாளரை அணுகித் தமது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். அங்கே அந்த விண்ணப்பம் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் மாவட்டச் செயலகத்தின் அனுமதியுடன் உரியவரிடம் அனுமதிப்பத்திரம் கையளிக்கப்படும்.
அனுமதிப்பத்திர முறைக்கூடாகப் பல உளவாளிகளையும், தப்பியோட முயன்ற சில குற்றவாளிகளையும், சமூகச்சீர்கேடுகளில் ஈடுபட்டுவந்த சில நபர்களையும் கைதுசெய்துள்ளோம். இதில் மிக அண்மையில் கைதுசெய்யப்பட்ட முக்கியமான ஒருவரது விபரத்தைப் பார்ப்போம் மணியந்தோட்டம் 2-ம் குறுக்குத் தெருவைச் சேர்ந்த சிறீகணேசபுனிதன் என்ற 31 வயதுடைய நபர் 1983 ஆம் ஆண்டிலிருந்து புளொட் குழுவுடன் இயங்கி வந்திருக்கின்றார்.
தேச விரோதச் செயல்க ளுக்காக 1986ம் ஆண்டின் பிற்பகுதியில் புளொட் தடை செய்யப்பட்ட பின்னர் இவர் உடுவிலில் ஒரு மணிக்கூட்டுக் கடையை வைத்திருந்தார். ஆனால் அங்கே இருந்தபடி தமிழீழத்திற்கு வெளியே இருந்த புளோட்டினருக்கு தகவல்களைக கொடுக்கும் ஒரு உளவாளியாகவே இவர் வேலை செய்து வந்தார். இந்திய இராணுவம் தமிழீழத்தை ஆக்கிரமித்த பின்னர் இந்தியப்படைகளுடன் சேர்ந்து தேசபக்தர்களை ஒழிக் கும் நடவடிக்கைகளில் “புளொட்சிறி” என்று அழைக்கப்படும் இவர் செயற்பட்டு வந்தார். அந்தக் காலப் பொழுதில் புளொட்டின் யாழ் மாவட்ட உதவிப் பொறுப்பாளராக இருந்துள்ளார். கொள்ளை, ஆட்கடத்தல் உட்பட பல சமூகவிரோதச் செயல் களுக்கும் இவர் தலைமை தாங்கியுள்ளார்,
முக்கியமாக உரும்பிராயைச் சேர்ந்த பாக்கியம் அக்கா ( நடராஜா பாக்கியம் ) எனப் படும் தேசபக்தர் 01-06-1988 அன்று இவனால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார். தமிழீழத்தை விட்டு இந்திய இராணுவம் வெளியேறிய போது இவனும் கொழும்புக் குத் தப்பியோடியிருந்தான் பின்னர் மீண்டும் தன்னை உருமாற்றிக்கொண்டு திருட்டுத்தனமாக வட தமிழீழத்துக்குள் புகுந்து கொண்டான்.
இங்கிருந்தபடி சிங்களப் படைகளுடன் இருக்கும் புளோட் கும்பலுக்கு இரகசியமாக தகவல்களைப் பரிமாறிக் கொண்டு சில நாசவேலைகளுக்குத் திட்டமிட்டுக் கொண்டிருந்தான் இவனது தகவல்களின் பேரில் சில இடங்கள் விமானக் குண்டுவீச்சுக்கு இலக் காகியது, மீண்டும் இந்த நிலையில் கொழும்பு சென்று தனது சகாக்களை நேரடியாகச் சந்தித்து சதியோசனை நடாத்துவதற்காக போலிப்பெயரில் அனுமதிப்பத்திரத்துக்கு விண்ணப்பித்திருந்தார்.
இந்த விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்ட போது சந்தேகம் கொண்ட நாம் புலன் விசாரணைகளில் ஈடுபட்டபோது சம்பந்தப்பட்ட நபர் யார் என்பதைக் கண்டுபிடித்தோம். இதே போன்று பல உவாளிகள் அனுமதிப்பத்திரமுறை என்ற வடிகட்டியூடாக வடித்தெடுக்கப் பட்டுள்ளார்கள்.
அப்படியாயின் எதற்காக அனுமதிப்பத்திரம் பெறுவதற்கு முன் மண்மீட்பு நிதி செலுத்தப்படவேண்டும் எனக் கேட்கப்படுகின்றது?
மண்மீட்புநிதி செலுத்தப்பட் டிருந்தால் மட்டுமே அனுமதிப்பத்திரம் கிடைக்கும் என்பது தவறானது. மண்மீட்பு நிதியை வழங்க உண்மையாகவே வசதி இல்லாதவர்கள் வெளியே செல்வதற்கு உரிய தகுந்த காரணங்கள் காட்டப்பட்டால் அனுமதிப்பத்திரம் வழங்கப்படும். இங்கே நடைபெற்றுக் கொண்டிருப்பது மக்கள் போராட்டம். மக்களுக்கான போராட்டம். மண்மீட்புநிதி என்பது எமது போராட்டத் திற்குத் தேவையான நிதியைத் திரட்டும் ஒரு வழிமுறை. இந்த நிதியைத் தமிழீழ மக்கள் தான் வழங்கவேண்டும். அன்னியர்கள் அதை வழங்குவார்கள் என எதிர்பார்க்கக் கூடாது. அவ்விதம் எதிர்பார்ப்பது, தேசாபிமானம் அற்ற, கௌரவமற்ற ஒரு இழி செயல்.
இன்று, தேசாபிமானம் மிக்க மக்கள், எது நடந்தாலும் இந்தத் தேசத்திலேயே இருக்கப் போகின்றவர்கள். மண் மீட்பு நிதியைச் செலுத்திக் கொண்டிருக்கின்றார்கள் பலர் தங்களை வருத்தியும், தங்களுடைய தேவையைச் சுருக்கியும் தேசாபிமான உணர்வோடு அதை வழங்குகின்றனர். இதேசமயம் மண்ணை விட்டோடும் மனநிலையில் இருப்பவர்களும், சுயநலமிகளும். பல்வேறு காரணங்களைக் காட்டி மண்மீட்புநிதி செலுத்துவதைத் தட்டிக்கழித்து வருகின்றனர். இவர்கள் வசதியின்மையைத்தான் காரணம் காட்டுகின்றனர்.
ஆனால் இவர்கள் அனுமதிப்பத்திரம் பெறமுனைவது வெளிநாடுளுக்குச் செல்வதற்கும், கொழும்பில் நீண்ட காலம் தங்கியிருந்து சுகபோக வாழ்வு வாழ்வதற்காகவுமே. இத்தகையவர்களிடம் மண் மீட்புநிதியைச் செலுத்திவிட்டு அனுமதிப் பத்திரத்தைப் பெறுங்கள் என்று கேட்பதில் தப்பில்லைத்தானே. இவ்விதமாகத் தமிழீழ தேசத்தின் நலனைக் கருத்திற் கொண்டு அனுமதிப்பத்திர முறையை அமுல் படுத்துகின்றோம்.
![]()