
இன்றைய நிகழ்வில் அன்றைய நிகழ்வு – காக்கா அண்ணை 1992
– வெளிச்சம் இதழ்
விழுதுகள் கட்டுரைத் தொகுதியின் முதற் தொகுப்பை வெளியிட வேண்டும் இந்தநூலின் பின் அட்டைக்காக ஒரு அரிய புகைப்படத்தைத் தேடிக் கொண்டிருந்தேன் சிறீலங்கா அரசுக்கும் எமக்கும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த காலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் அது.பேச்சுவார்த்தையின்போது எமது அனுமதியின்றி முகாமிற்கு வெளியே சிறிலங்கா இராணுவத்தினர் நடமாடுவது தவிர்க்கப்பட வேண்டும் என்று உடன்பாடு காணப்பட்டது.அதற்கு மாறாக யாழ் கோட்டை முகாமைச் சேர்ந்த சிறீலங்கா இராணுவத்தினர் யாழ் கச்சேரி வரை வந்துவிட்டனர். இதனைக் கண்ட அன்ரனி வேகமாக அவர்களை நோக்கி சென்றான்.அவர்களை தடுத்து நிறுத்திய அவன் திரும்பி செல்லுமாறு சிங்களத்தில் எச்சரித்தான் .அவர்களின் வாகனத்தில் கால் வைத்துத் தடுத்தபடி எம் 16 றைபிளால் குறிபார்த்தபடியே எச்சரிக்கை செய்தான்.இந்த காட்சியை யாரோ புகைப்படம் எடுத்து இருக்கின்றார்கள்.அந்த புகைப்படத்தை பலர் பார்த்து இருக்கின்றார்கள் ஆனால் எங்கே இருக்கின்றது என்பது தெரியவில்லை.அன்ரனிக்கு தெரிந்த இடங்களெல்லாம் விசாரித்தாயிற்று மீண்டும் டயஸ் வீட்டுக்குச் சென்றேன். அவர்களிடம் நிலைமையைச் சொன்னேன் அங்கு அன்ரனியைப்பற்றிய எமது உரையாடல் தொடர்ந்தது.அப்போது அன்ரனியின் ஒரு சகோதரி கிருபாகரனைத் திருமணம் செய்ததை நினைவுபடுத்தினார்கள். கிருபாகரன் ஈ.பி..ஆர்.எல்.எவ் ஐச் சேர்ந்தவர். வடக்கு கிழக்கு நிதி அமைச்சராகவும் இருந்தவர்.இவர் தற்போது உயிருடன் இல்லை.
கிருபாகரன் என்றதும் மட்டகளப்பில் அவருக்கும் எனக்குமிடையில் நடந்த சந்திப்புகளை நினைத்துக்கொண்டேன் அதிலும் அந்த சவக்காலை சமச்சாரம் சுவாரசியம் மிக்கது.
1985 ஆண்டில் முதற்பகுதி அப்போது கொக்கட்டிச்சோலைப்பகுதியிலுள்ள (படுவான்கரை) முதலைக்குடாவில்தான் ஈ.பி.ஆர்.எல்.எவ் வினரின் பிரதான செயலகம் அமைந்து இருந்தது. அங்கு நான் அடிக்கடி போக வேண்டியிருந்தது.எல்லாமே ஈ.பி.ஆர்.எல்.எவ் வினரால் எமக்கு ஏற்படும் தொல்லைகள் சம்மந்தமாக அவர்களுடன் கதைக்கத்தான்.நான் அங்கிருந்த காலப்பகுதியில், ஒரு நாள்கூட எமது உறுப்பினர்களால் அவர்களுக்குத் தொல்லை ஏற்பட்டது என்று அவர்கள் எம்மிடம் புகார் செய்ததில்லை .நானும் அடிக்கடி போவதும், தோழர் இனி இந்த மாதிரி நடக்காது.சில புரிந்துணர்வற்ற தோழர்கள் தான் இப்பிடி. மற்றவை தெளிவாக இருக்கினம் என்று கிருபாகரனும் மற்றவர்களும் பதிலளிப்பதும் தொடர்கதையாக நீண்டு கொண்டிருந்தது ஆனாலும் விக்கிரமாதித்த முயற்சியாக நான் அடிக்கடி இந்த விடயமாக அவர்களிடம் செல்ல வேண்டியிருந்தது.
ஒருநாள் காலை நான் ஆரையம்பதியிலிருந்து மண்முனைத்துறையூடாக ஆற்றைக்கடந்து படுவான்கரைக்குச் சென்றேன் அப்போது ஈ.பி.ஆர்.எல்.எவ் வைச் சேர்ந்த குணம் என்பவர் என்னை நோக்கிவந்தார்… தோழர்.. ராத்திரி இந்த றால் கொம்பனி யில கொள்ளையடிச்சிட்டானுங்கள் ஆத்து வழியாக வந்து வெல்டிங் பிளான்றும், வயறுகளும் இன்னும் கொஞ்ச சாமானுகளையும் கொள்ளையடிச்சிட்டு ஆத்துவழியாலயே போட்டானுகள் …இந்த பகுதியில் இருக்கிற கஷ்டப்படுகிற ஆக்களெல்லாம் இந்தக் கொம்பனியில இருக்கிறதால தான் வேலை செய்யுறாங்க இதையும் மூடுறதுக்கு வழி பண்ணுறானுங்கள் போல இருக்கு சரி…கொள்ளை அடிச்சானுங்கள் எண்டா இஞ்ச வேலை செய்யுற ஆக்களுக்குமெல்லா அடிச்சிப்போட்டாங்கள்? அவங்களை தூஷணத்தாலயும் பேசி …….சீ..என்ன இயக்கம் இவனுங்கள்? உங்களுக்கு இதுப்பற்றி எதுவும் தெரியுமா தோழர்…என்று விசாரித்தார் குணம்.
அந்த காலத்தில் வெளிநாட்டு நிறுவனமான ‘செறண்டிப் சில உள்ளூர்வாசிகளின் உதவியுடன் பிரமாண்டமான இறால் பண்ணை ஒன்றை அங்கு அமைத்து இருந்தது.அங்கு நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர். இதற்குப் பொறுப்பாக வெள்ளைக்காரர் ஒருவர் இருந்தார்.
அந்த…. இறால் பண்ணையில் வழக்கமாக தமீழிழ பாதுகாப்பு பேரவையினர்தான் கொள்ளையடிப்பது வழக்கம் பணமாக இல்லாவிட்டாலும் பெற்றோல், டீசல் என்று கொண்டு போவார்கள் .வாகனங்களை கொண்டு போவார்கள் ஆனால் அதை மட்டும் திருப்பிக் கொடுத்துவிடுவார்கள் இதைப்பற்றி நான் விசாரித்தால் ஏதோதோ சர்வதேச தத்துவங்கள் எல்லாம் பேசுவார்கள் இது அமெரிக்கன் கொம்பனி ஒரு முதலாளித்துவக் கொம்பனியினுடைய உடமைகளை ஒரு புரட்சிப் போராட்டத்திற்குப் பயன்படுத்துவதில் தவறில்லை என்று முன்னுரையாகச் சொல்லிவிட்டு அனேக விளக்கங்கள் சொல்வார்கள் அவர்களின் பேச்சுக்கள் இடையே அடிபடும் நாடுகள் கம்யூனிசம் சார்ந்தவை என்பது மட்டும் எனக்கு தெரியும். அதற்கு அப்பால் எனக்கு புரியாது.நானும் ஏதோ விளங்கி கொண்டவன் போல் தலையசைத்துவிட்டுச் செல்வேன். அவர்கள் கொள்ளையடிப்பார்கள்தான் ஆனால் தொழிலாளர்களுக்கு அடிக்கமாட்டார்கள் என்று எனக்கு தெரியும்.
ஆகவே நான் குணத்திடம் இது பாதுகாப்பு பேரவை இல்லை ஈரோசாவும் இருக்காது. நான் நினைக்கின்றேன் இது புளோட் தானெண்டு ஏனெண்டா அவங்கள்தான் தேவையில்லாமல் ஆக்களுக்கு அடிக்கிறவங்கள் ஆனபடியால் அவங்களாத்தான் இருக்கவேணும் மற்றப்படி தூஷணம் பேசுறதை வச்சுஇயக்கம் ஆரெண்டு கண்டு பிடிக்கேலாது என்றேன். மெய்தான் தோழர் அவங்களாதான் இருக்கும். என்ன இருந்தாலும் இது சரி இல்லாத வேலை நீங்கள் என்ன என்ன சொல்லுறீங்கள் தோழர்? என்னைக் கேட்டார். குணம் நீங்கள் சொல்லுறது சரி என்று சொல்லிவிட்டு நகர்ந்தேன் நான்.
”சரி கண்டுபிடிக்கலாம் இதென்ன பெரிய வேலையா?” என்று நினைத்தவாறே எமது ஆதரவாளர் ஒருவரது வீட்டை நோக்கி சென்றேன் அவர் அங்கு வேலை செய்பவர். அவர் அங்கு நடந்த அனைத்தையும் சொன்னார் முடிவாக நான் இது புளெட் தான் எனக்கு சந்தேகம் இல்லை. இல்ல.. ஈ.பி.ஆர்.எல்.எவ் என்றார் அவர் எனக்கு ஆச்சரியமாகிவிட்டது. காலையில் ஈ.பி.ஆர்.எல்.எவ் காரர்தான் இந்த தகவலை சொன்னது .அப்படியிருக்க அவர்களாக இருக்குமா? நம்பமுடியாமல் நின்றேன் நான் அதற்கு அவர் யார் யார் கொள்ளையடிக்க வந்தார்கள் வந்தவர்கள் என்று ஒரு பட்டியலே போட்டார். இறுதியாக அதே இறால் தொழிற்சாலையில் வேலைசெய்யும் ஒருவரையும் சொன்னார். (அவர் ஈ.பி.ஆர்.எல்.எவ் உறுப்பிருங்கூட) அவர் கொள்ளையடிக்க உள்ளே வரவில்லை என்றும் மறைவில் நின்று இன்னென்ன இடத்தில் இவையிவை உள்ளன என்று சொல்லிக்கொண்டு இருந்தார் என்றும் சொன்னார். தான் இனங்காணப்படக் கூடாது என்பதற்காகத்தான் இவர் இவ்வாறு நடந்துகொண்டார் என்பதை என்னால் உணர முடிந்தது.
எனவே நான் அவரிடம் “சரி தாங்கள் கொள்ளையடிச்சதெண்டதை மறைக்கத்தான் குணம் என்னட்ட இப்படிச் சொல்லியிருக்குது. சரி போகுது. விடுவம் என்றேன். இதற்கு அவர் ”அதெப்படிக் காக்கா விடுறது? அவங்க ஆளுக்காள், கடவுள், காந்தன் எண்டு கூப்பிட்டுக் கதைச்செல்லே கொள்ளையடிச்சவனுங்கள்.” என்றார். இதை கேட்டதும் ஆத்திரம் வந்தது. எனக்கு இது வேண்டும் என்றே திட்டமிட்டுச் செய்யப்பட்டது என்பதை என்னால் உணர முடிந்தது. இதுவரை காலமும் கொக்கட்டிச்சொலைப் பகுதியில் இவர்களது பெயர்தான் அடிபட்டது. இப்போது எங்கள் இயக்கத்தின் நடைமுறைகளைப் பார்த்த மக்கள் அவர்களுடனான தொடர்புகளைப் படிப்படியாகக் குறைத்து எம்முடன் ஐக்கியமாகி வருகின்றனர் எனவே எம்மீது பழிபோடுவதற்கென்றே இது செய்யப்பட்டுள்ளது என்பதை உணர முடிந்தது.
காக்கா, இவனுகளுக்குச் சரியான பாடம் படிப்பிக்க வேணும் என்றார் அவர். சரி என்று ஆமோதித்தேன். நான் கொள்ளையடிக்க வந்தவரை அறிந்து கொண்டேன். அவர் பெயர் தயாநிதி. அவர் கல்லடித் தெருவைச் சேர்ந்தவர். அவரை எனக்கு தெரியாது. ஆனால் இந்த இறால் தொழிற்சாலையிக்குச் சொர்தமான சிற்றூர்தியிற் தான் வேலைக்கு வருபவர் என்பது உறுதியாயிற்று.
இந்த தொழிற்சாலையில் வேலை செய்யும் நகரப்பகுதி ஊழியர்களின் போக்குவரத்து வசதிக்காக தொழிற்சாலை நிர்வாகம் ஒரு சிற்றூர்தியை ஒழங்கு செய்திருந்தது காலையும் மாலையும் இச்சேவை நடைபெறும். குறிப்பிட்ட ஊழியர்க்கு அன்று இரவு வேலை என்று அறிந்து கொண்டேன். எனவே பிற்பகல் 5:00 மணியளவில் மகிழடித்தீவுள் சந்தியில் காத்துநின்றேன். என்னுடன் இன்னும் இருவர் நின்றனர். அந்த சிற்றூர்தி வந்தது. நான் கைகாட்டி நிறுத்தினேன். வண்டி நின்றதும் மூவருமாக உள்ளே ஏறினோம் .தயாநிதியை வண்டியைவிட்டு இறங்குமாறு கூறினேன்.ஒருவரும் இறங்கவில்லை எனவே ஒவ்வொருவரது அடையாள அட்டைகளையும் வாங்கிப்பார்க்க தொடங்கினேன். மூன்று பேரின் அடையாள அட்டைகளை பார்த்ததுமே தயாநிதி எழுந்துவிட்டார். நான் தான் தயாநிதி. நின்ற அவர் மிரளத் தொடங்கினார். சரி இறங்கும் என்றேன். தயங்கி தயங்கி இறங்கினார். அப்போது சிற்றூர்தியின் சாரதி என்னிடம் வந்தார். நம்மட பாஸ்ஸிலவாற ஆக்களுக்கு நான் தான் பொறுப்பு.
நீங்க இவரைக் கூட்டிக் கூட்டிட்டு போறதொண்ட கொம்பனியில வந்து வெள்ளைக்காறவிட்டச் சொல்லிப்போட்டு கூட்டிட்டுப் போங்கோ. இல்லாட்டி எனக்கு பிரச்சனைவரும் என்றார். அவரது கோரிக்கை நியாயமாகவே பட்டது எனக்கு. அவரை பின்னால் வருமாறு கூறிப்பிட்டு எனது உந்துருளியில் (மோட்டார் சைக்கிளில்) தயாநிதியை ஏற்றிக்கொண்டு சென்றேன். என்னைக் கண்டதும் எங்கே பணிபுரிபவர்களுக்கு விஷயம் ஓரளவு விளங்கிவிட்டது. என்னருகில் வந்தார்கள். அவர்கள் அவர்களில் ஒருவரை அணுகி நான் இவரைக் கூட்டிக்கொண்டு போகிறேன் என்றும் ஒரு மணித்தியாலத்தில் திரும்பக் கூட்டிக்கொண்டு வருவேன் என்றும் வெள்ளைக்காரரிடம் சொல்லும்படி சொன்னேன். அவர்கள் சொன்னார்கள் அவரும் சம்மதித்தார். தயாநிதியை நான் உந்துருளியுடன் வாசலிலேயே நிறுத்தியதால் அவருக்கு நான் உள்ளே சென்று என்ன சொன்னேன் என்று தெரியாது. நான் திரும்பி வந்ததும் அவரைக்கொண்டு முனைக்காட்டுச் சவக்காலைக்குச் சென்றேன்.
எமது ஏற்பாட்டின்படி அங்கே சவக்கிடங்கு கிண்டிக்கொண்டிருந்தார்கள் இரு போராளிகள் தயாநிதியை ஒரு சமாதிக்குமேல் இருக்குமாறு கூறினேன் அவரும் இருந்தார் கிடங்கு மேலும் தோண்டப்பட்டுக்கொண்டேயிருந்தது. நாம் அவருடன் எதுவும் கதைக்கவில்லை. இடையிடையே அவர் அண்ணாச்சி என்றார் நாம் யாரு திரும்பியே பார்க்கவில்லை தோண்டிக்கொண்டே இருந்தோம் இடையிடையே நான் அவரது முகபாவனையைக் கடைக் கண்ணால் கவனித்துக் கொண்டிருந்தேன். இடையில் ஒரு விசும்பல் சத்தம் கேட்டது சற்று நேரம் செல்ல நான் ஒரு தடவை அவரை உச்சியில் இருந்து உள்ளங்கால் வரை பார்த்துவிட்டு கிடங்கு தோண்டுபவர்களிடம் வந்து நீளங்கொஞ்சங் காணாது போல இருக்கு. கொஞ்சங்கூட வெட்டுங்கோ என்றேன் அவ்வளவு தான் அவரால் தாங்க முடியவில்லை.
சத்தமிட்டுப் பெரிதாக அழுதார் அழுகையினூடே தான் ஈ.பி.ஆர்.எல்.எப். தான் சொல்லிவிட்டு தாங்கள் புறப்பட்ட இடம் கொள்ளைக்கு வந்தவர்கள் பெயர் கொள்ளை நடந்த இடம் தான் நின்ற இடம் எல்லாவற்றையுமே சொன்னார்.கடைசியில் இயக்க தலைமை சொன்னபடியால் தான் கொள்ளைக்குத் தான் வந்தாகவும் கொள்ளையடிக்கும்போது காக்கா,கடவுள், காந்தன் என்ற பெயர்களிலேயே ஒருவரை ஒருவர் அழைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டதாகவும். தன்னை உயிருடன் விடுமாறும் தான் இனி ஈ.பி.ஆர்.எல்.எவ்வுடன் சேரமாட்டேன் என்றும் கூறினார்.நாங்கள் அவரை நிமிர்ந்து கூடப் பார்க்கவில்லை அவர் சொல்லி முடியும்வரை இடையில் ஒரு கேள்விகூடக் கேட்கவில்லை அவராகவே தானியங்கி (Auto) வேகத்தில் சொல்லிக்கொண்டிருந்தார் இனி சொல்வதற்கு இவரிடம் ஒன்றும் இல்லை என்று எனக்குத் தென்பட்டவுடன் நான் உந்துருளியிற் புறப்பட்டேன் ..போகும்போது கவனம் ஆள் ஓடியிடும் ஓடினா ….பிறகு தெரியும் தானே? என்று எச்சரிக்கை செய்வது போல் சொல்லிவிட்டுப் புறப்படேன்.
முதலைக்குடாவில் ஈ.பி.ஆர்.எல்.எவ் காரர்கள் குழுமியிருந்தனர்.இதைப்பற்றித்தான் கதைக்கிறார்கள் என்பது எனக்கு புரிந்தது நான் அந்த ஈ.பி.ஆர்.எல்.எவ் உறுப்பினரான ஊழியரைக் கொண்டு போகும் போது அவர்கள் கண்டார்கள்)
கிருபாகரன் அருகில் உந்துருளியை நிறுத்தினேன் அவரிடம் நாங்கள் ராத்திரி றால் கொம்பனியில் கொள்ளையடிச்ச ஆக்களில ஒருத்தனப் பிடிச்சிட்டம் அங்க வேலை செய்யிற ஆக்களுக்குத் தேவையில்லாம அடிச்சதில இருந்தே நாங்கள் பிடிச்சிட்டம் இது புளொட் தானெண்டு எங்களுக்கு இது வடிவாத் தெரியும் ஆனா அவர் ஈ.பி.ஆர் .எல்.எவ் எண்டெல்லோ சொல்கின்றார்.ஈ.பி. ஆர்.எல். எவ் எண்டு சொல்லுறதால நீங்கள் கட்டாயம் வர வேணும் இது சேட்டை தானே? என்ன? என்றேன் நான். மீன் முள்ளு சிக்கிய கொக்குப்போல சொல்லவும் முடியாமல், ஜீரணிக்கவும் முடியாமல் அவஸ்தைப்பட்டார் கிருபாகரன். சவக்காலைக்குள் காத்திருப்பவனை விட இவரைப்பார்க்கத்தான் பரிதாபமாக இருக்கிறது என்று நினைத்தவாறே சென்றேன் நான்.
கிருபாகரனும், குணமும், பரமனும், மற்றும் சிலரும் வந்து சேர்ந்தனர்.அவர்களைக் கண்டவுடன் அந்த ஈ.பி.ஆர்.எல். எவ் காரர் ஓ வென்று கதறியழத் தொடங்கிவிட்டார் (அப்போது நாங்கள் கிடங்கு கிண்டிக்கொண்டு இருந்தோம் )கிருபாகரன் தயங்கி தயங்கி என்னிடம் வந்தார். தோழர்… நாங்கள் இதுவரை விசாரிக்கலாம் தானே?….என்றார் தாரளமாக..என்றேன் நான். அவரைக்கூட்டிக்கொண்டு சென்றார்கள் நாங்கள் எமது பணியை நிறுத்தவில்லை.
சுமார் பத்து நிமிடங்களின் பின் கிருபாகரன் மீண்டும் வந்தார் தோழர்…அவர் எங்கட தோழர்தான்…என்று இழுத்தார் இப்போதுதான் அது எனக்கு தெரியும் என்பது போல அதிசயமாகப் பார்த்தேன் நான். மீண்டும் அவரே தொடர்ந்தார் இவை ரவுணுக்க இருக்கிற தோழர்மார் ……அதுதான் இவை வந்தது எங்களுக்கு தெரியாமல் போச்சு.நாங்கள் ஏற்கனவே சொல்லியிருக்கிறம், இந்த பகுதியில வந்து ஏதும் செய்யிறதெண்டா எங்களுக்கு அறிவிச்சுப்போட்டுச் செய்ய வேண்டுமெண்டு அதத் தெரியாமல்தான் இவை வந்து இப்படிச் செய்திட்டினம் என்றார்.சரி இப்ப என்ன செய்யிறது? “என்று கேட்டேன் (சவக்கிடங்கைப் பார்த்தவாறே) அத நாங்கள் கதைச்சு ஒரு முடிவுக்கு வருவோம் இப்ப இவர விடுங்க” என்றார் கிருபாகரன் நான் சரி விடலாம்….
அது பிரச்சினயில்ல ஆன கொள்ளையடிக்கேக்க காக்கா, கடவுள், காந்தன் என்டு ஆளையாள் கூப்பிட்டுக் கொள்ளையடிச்சுருக்கினம் இது வேணும்மெண்டுதான் செய்தது இதுக்கு என்ன சமாதானமும் சொல்லேலாது எங்கட இயக்கத்தின்ரை பெயரை பாவிச்சு மோசடி செய்யிறவைக்கு என்ன தண்டனையோ அதுதான் இதுக்கும் ஆனால் நீங்கள் கேக்கிறதால உங்களுக்காக இவரை விடுறன் ஆனா கொம்பனியில போய் கொள்ளையடிச்சது ஈ.பி.ஆர்.எல்.எவ் தான் எண்டு எல்லாரிடையும் சொல்ல வேணும் என்று உறுதியாகக் கூறினேன் நான்.எல்லா ஈ.பி ஆர்.எல்.எவ் காரரும் கோராகத் தலையாட்டினர் சம்மதமென்று.மீண்டும் தயாநிதியை உந்துருளியில் ஏற்றிக்கொண்டு இறால் தொழிற்சாலைக்குச் சென்றேன்.புனர் ஜென்மம் எடுத்து அவர் உடனே சென்று அவர்களிடம் விஷயத்தைக் கூறினார்.அவர்கள் பதிலேதும் கூறவில்லை.
நான் எனக்கு தெரிந்த சில உத்தியோகத்தர்களைக் கூப்பிட்டு இவர் இயக்கத்தின் உறுப்பினர் என்ற வகையில் தலைப்பீடத்தின் கட்டளைப்படியேதான் இப்படிச் செய்துள்ளாரென்றும், தயவு செய்து இவர்மீது ஒழுங்கு நடவடிக்கை எதுவும் எடுக்கவேண்டாம் என்று இச்சம்பவத்தினால் அவர் பாதிக்கப்படுவதை நாம் விரும்பவில்லை என்று கூறிவிட்டு வந்தேன். அவர்கள் தாம் அந்த வெள்ளைக்காரிடம் எமது கோரிக்கையைத் தெரிவிப்பதாகக் கூறினார்கள். நானும் அங்கிருந்து புறப்பட்டுவிட்டேன். இச்சம்பவத்தின் பின் ஈ.பி.ஆர்.எல்.எவ் காரர்களின் இப்படியான சேட்டைகள் குறைந்து போயின.