
மகத்தான அரசியல் வெற்றி
இது இவ்வாறிருக்க, தமிழர் பிரச்சினைக்குத் தீர்வுத்திட்டமாக அதிகாரப் பரவலாக்கத்தின் அத்திவாரமாகக் கூட்டணியால் சிங்கள அரசிடமிருந்து பெறப்பட்ட மாவட்ட சபை அதிகார வறுமையால் செயலிழந்து, செத்துப் போனது. இந்த நிலையில் 1983 மே 18ஆம் திகதி வடக்கில் உள் ஊராட்சித் தேர்தலை நடாத்துவதென அரசு அறிவித்ததும், தேர்தல் களத்தில் குதிக்கக் கூட்டணியும் மற்றும் சந்தர்ப்பவாத அரசியல் கட்சிகளும் முன்வந்தன. வடக்கில் தாண்டவமாடும் அரச பயங்கரவாதத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தேர்தலைப் பகிஸ்கரிக்குமாறு விடுதலைப் புலிகள் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டனர். வடக்கில் அரசின் கைப்பொம்மைகளாகச் செயற்பட்டு வந்த ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளரும், ஆதரவாளர்களும் விடுதலைப் புலிகளின் எச்சரிக்கையை மீறித் தேர்தலில் குதிக்க முற்பட்டதால் இவர்களில் மூவரை விடுதலைப் புலிகள் சுட்டுக் கொன்றனர். ஒரே நாளில் நடைபெற்ற இந்தச் சம்பவத்தை அடுத்து ஐ.தே. கட்சியின் சார்பில் நின்ற சகல தமிழ் வேட்பாளர்களும் தேர்தலிலிருந்து வாபஸ் பெற்றதுடன், பல தமிழர்கள் ஐ.தே. கட்சியிலிருந்தும் ராஜினாமா செய்தனர். புலிகளின் தீவிர அரசியல் பிரச்சாரத்திற்குச் செவிசாய்த்த வடமாகாண மக்கள் உள் ஊராட்சித் தேர்தலைப் பூரணமாய்ப் பகிஸ்கரித்தனர். இந்தப் பகிஸ்கரிப்பு அரசியல் ரீதியில் புலிகளுக்குக் கிட்டிய மகத்தான வெற்றியாக அமைந்தது. புலிகளின் வேண்டுகோளை நிராகரித்துத் தேர்தலில் நின்ற கூட்டணியினர் சகிக்க முடியாத அவமானத்தைத் தேடிக் கொண்டனர். தேர்தலில் சந்தித்த தோல்வியுடன் கூட்டணி செல்லாக்காசாக மாறியது. இத்துடன் தமிழீழ அரசியல் அரங்கிலிருந்து கூட்டணியின் உதயசூரியன் நிரந்தரமாக அஸ்தமித்தது.
1983 யூலை நிகழ்வுகள்
தமிழர் வரலாற்றில் கொந்தளிப்பு மிகுந்த காலகட்டமாக 1983 யூலை மாதம் அமைந்தது. ஒரு சம்பவம் சங்கிலித் தொடராகப் பல நிகழ்வுகளை விளைவித்துப் பாரிய அரசியல் தாக்கங்களை ஏற்படுத்தி, போராட்ட வரலாற்றின் ஓட்டத்தை முனைப்புப்படுத்தும் வகையில் அமைந்ததென்றால், அது யூலை 23ஆம் திகதி திருநெல்வேலியில் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட அதிரடித் தாக்குதல் சம்பவமாகும். சிங்களப் பேரினவாதத்தைப் பேரதிர்ச்சியில் ஆழ்த்திய இந்தத் தாக்குதலில், 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இந்த அதிரடித் தாக்குதலைத் திட்டமிட்டு அதில் பங்குகொண்ட பிரபாகரன், தனது கையால் ஏழு இராணுவத்தினரைச் சுட்டுக் கொன்றார். தமிழீழத்தில் கூடிய தொகையில் சிங்களப் படையினர் கொல்லப்பட்ட முதற் சம்பவம் இதுவாகும்.
‘பயங்கரவாதத்தைப்’ பூண்டோடு அழிக்கப் போவதாக மாறி மாறி முழங்கிக் கொண்டிருந்த ஜெயவர்த்தனா அரசுக்கு இந்தத் தாக்குதல் சம்பவம் முகத்தில் ஓங்கி அறைந்தது போல் இருந்தது.
புலிகள் இயக்கத்தின் தலைமையில் புரட்சிகர ஆயுதப் போராட்டம் ஒரு திண்ணியமான வடிவத்தையும், காத்திரமான வளர்ச்சியையும் பெற்று வருகிறது என்பதைத் தமிழ் மக்களுக்கு இந்தத் தாக்குதல் சம்பவம் உணர்த்தியது.
இந்தச் சம்பவத்தின் அதிர்ச்சி அலைகள் தென்னிலங்கையில் பரவிய போது, அதனைத் தமிழருக்கு எதிரான இனக்கிளர்ச்சியாக மாற்றிவிட்டுக் கொழும்பில் நிலைகொண்டிருந்த தமிழரின் பொருளாதார ஆதிக்கத்தை நாசமாக்கிவிட சிங்கள அரசு திட்டமிட்டது. அரசின் தூண்டுதலின் பேரில் யூலை 24ஆம் திகதியிலிருந்து தென்னிலங்கையில் வெடித்துப் பரவிய இனப் பூகம்பம், வரலாறு காணாத இரத்தக் களரியை உண்டுபண்ணியது. சிங்களக் காடையரின் காட்டுமிராண்டித்தனமான வன்முறை முழு உலகத்தையுமே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.