
சவர்க்காரத்தை சிக்கனமாக பாவிக்கத் தெரிந்த தலைவர்.
எல்லா போராளிகளுக்கும் போலவே மாதாந்த பராமரிப்புப் பொருட்களை பெற்றுக் கொண்ட தலைவர் அவர்கள் ஒரு மாதத்திற்காக வழங்கப்படும் சவர்க்காரத்திலே ஒரு மாதம் அளவுக்கு பாவித்து தன்னைச் சூழ்ந்து உள்ளவர்களுக்கு முன்னுதாரணமாக வாழ்ந்து இருக்கின்றார்.
பொருளாதார நெருக்கடி மிக்க காலகட்டத்திலும் குளியல் சவர்க்காரம் ஒன்று உடை துவைக்கும் சவர்க்காரம் இரண்டு என்பது போராளிகளுக்கான பங்கீடாக (பட்ஜெட்) இருந்த நாட்கள் இருக்கின்றன. அதே வேளையில் சில நெருக்கடி சந்தர்ப்பங்களில் சவர்க்காரம் பாதியாக வெட்டி கொடுக்கப்பட்ட காலங்களும் இருக்கின்றன. இல்லாத காலங்களும் உள்ளன. அப்படியான நாட்களில் அதனை பக்குவமாக பாவித்து அதன் இறுதிப் பாவனை முடியும் வரை சவரகன் கத்தி அளவு (பிளேட் அளவு) வரை பாவித்து தன்னை சூழ்ந்துள்ளவர்களுக்கு மாதிரியாக நடந்துள்ளார்.
2005ஆம் ஆண்டு போராளியின் திருமணம். இரண்டு போராளிகளும் காயமுற்றவர்கள். திருமணத்தின்போது ஐம்பது ஆயிரம் ரூபாய் பணத்தைக் கொடுத்து ‘இது இயக்கம் எனக்குத் தரும் சம்பளத்தில் நான் மிச்சம் பிடித்து சேர்த்த பணம். அதைத்தான் தருகின்றேன். திருமண ஏற்பாட்டுக் குழு தருவது வேறு. அதையும் வாங்குங்கள்’ என்று சொல்லிக் கொடுத்திருக்கின்றார்.
திருமணமான போராளிகளுக்கு குடும்பச் செலவுக்கு வழங்கப்படும் கொடுப்பனவினை தானும் பெற்று அதில் எப்படி சேமிப்பையும் செய்ய முடியும் என்பதையும் காண்பித்து சூழ்ந்திருப்போருக்கும் தன்னை பின்பற்றி இருப்போர்க்கும் மாதிரியாக வாழ்ந்திருக்கிறார்.
தனிப்பட யாரிடமும் பணத்தை பெற்றுக் கொள்ளாதவராகவும், தனிப்பட பணத்தை வாங்கி வீட்டிலோ வங்கியிலோ சேமித்துக் கொள்ளாதவராகவும் தன்னைச் சூழ்ந்திருப்போரும் மக்களும் தன்மீது எவ்வித குற்றமும் காணாதபடிக்கு நிதி விடயத்தில் நடந்து கொண்டுள்ளார்.
யாரிடமும் தனிப்பட்ட ரீதியாக பணம் வாங்கியதில்லை. காணி உறுதிகளை பெற்றுக்கொள்ளும் எந்த பழக்கவழக்கமும் அவரிடம் காணப்படவில்லை. காணியோ வாகனமோ வேறு எந்த சொத்தோ தனது பெயரிலோ தனது குடும்பத்தின் பெயரிலோ இல்லாதபடி முன்மாதிரியாக நடந்துள்ளார்.
இந்த உலகிலே பெரும் தலைவர்கள் அதிகமானோர் திறமை மிக்கவர்களாக இருந்தாலும் கூட தமது குடும்பம் தமது பெயர் என்பவற்றில் சொத்துக்களை இரகசியமாக பகிரங்கமாகவோ பெற்று வைப்பதில் ஆர்வம் காட்டுவது மக்கள் அறிந்ததே. யாரோ சிலர் விதிவிலக்காக இருந்திருக்கலாம் என்பது வேறு விடயம். ‘நான் கஸ்ரப்படுவது மாதிரி என் பிள்ளையும் கஸ்ரப்படக் கூடாது’ என நினைக்கும் பெற்றோர்கள் அதிகம். அந்தச் சிந்தனை பிள்ளைகளுக்கான சொத்து சேர்ப்பது வரை நீளும். ஆனாலும் தலைவர் அவர்கள் எவ்வளவோ அதிகாரம் உடையவராக இருந்த பொழுதும் வெளிநாட்டில், உள்நாட்டில் தனக்காக ஓர் ரூபாய் பணத்தைக் கூட சேமித்து வைக்கவில்லை. ஒரு காணி உறுதி கூட அவருடைய பெயரில் இருக்கவில்லை.
தன்னுடைய பிள்ளைகளுக்கோ மனைவிக்கோ என்று கூட சிறிய துண்டு காணிப் பரப்பினைக் கூட அவர் எழுதிக் கொண்டதுமில்லை. பெற்றுக் கொண்டதும் இல்லை. பண ஆசை என்பது மனிதர்களை நிலைகுலைய வைத்து இலட்சிய உறுதியிலிருந்து வீழ்த்தி விடக்கூடியது. அதனை வெல்லுவதற்கு தனித்துவமான மனோதிடம் தேவை. அநேகர் இதனை வென்று பயணித்தாலும் குடும்பம் என்று வருகின்ற பொழுது இடர்பாடு அடைவது உண்டு. அதனை அவர் வெற்றி கொண்டு தன்னை முன் மாதிரியாக காண்பித்து இருக்கின்றார்.