×

உருக்கினுள் உறைந்த பனிமலை

உருக்கினுள் உறைந்த பனிமலை….

அவர் வித்தியாசமான மனிதர். எப்போதுமே சீரான நேர்த்தியான தோற்றத்துடனே தோன்றுவார். சீராக வகிடெடுத்து அழுந்த வாரப்பட்ட தலையும், பரந்த தெளிவாக காணப்படும் முகத்தில் நகைப்பும், வியப்பும், கூர்மையும் காண்பிக்கும். கண்களுக்கு இறுக கால்பதித்து நிலமதிர நடக்கும் கனத்த உருவமும் அசாதாரண மனிதரிவர் என்கிற பதிவை எவரிடத்திலும் ஏற்படுத்தும். எப்பொழுது சந்திக்க நேர்ந்தாலும் தோளை குலுக்கிக் குலுக்கி தலைசரித்து இலேசான செருமலுடன் கண்களை நேராக பார்த்து பயனுள்ள உரையாடலொன்றிற்கு அவர் ஆயத்தமாகும் தோற்றம் என்றும் எம் மனதில் நிலழாடும்.

எந்தவொரு விடயமானாலும் தனது உறுதியான நிலைப்பாட்டுடனும், மெலும் விபரங்களை அறியும் நோக்குடனும் அவர் நடத்தும் உரையாடல்கள் எவர் காதிலும் ஒலித்தவண்ணமேயிருக்கும். அன்று திலீபனின் நினைவு நாளன்று  அதிர்ந்த வெடியோசை கேணல் சங்கரை எம்மிடமிருந்து பறித்தவிட்டது என்றறிந்தபோது துயரத்துடன் வெறுமையுணர்வு இதுவரை எம்மால் உணரப்படாதது. இன்று மாவீரர் கேணல் சங்கரின் இழப்பென்பது எமக்கு அறிவின் வெறிமை என்றாகிவிட்டது. மனம் நெடுமூச்செறிகின்றது.

மாவீரர் கேணல் சங்கர் பன்முகப்பரிமாண ஆற்றல் கொண்ட அபூர்வமனிதர். இவ்வுலகின் தனித்தனியான ஆற்றல்களைக் கொண்டவர்களையே பொதுவில் நாமறிவோம். ஆனால் பற்பல ஆற்றல்கள் ஒரு மனிதரிடம் பொதிந்திருப்பவை காண்பதரிது. ஒரு புறத்தில் பார்த்தால் நவீன மின்னியலுகின் தொழில்நுட்ப பொறிமுறையறிந்த விற்பன்னன், மறுபுறத்தில் விடுதலை, வரலாறு, அரசியல், சர்வதேச நடப்புக்களை ஆழமாக உணர்ந்த அரசியலாளன். ஒருபுறத்தில் தமிழீழ வானூர்தி துறையின் முதல்வன். கடற்புலிகளின் துணைவன், மறுபுறத்தில் காடுசார் போர்முறையின் ஆற்றலாளன். காட்டின்  நாயகனாகவும் நகரத்தின் நாகரிக கனவானாகவும் அவரால் இருந்திட முடியும். புத்துலகின் வேகமான மாற்றங்களை உள்வாங்கி சர்வதேச நடப்புகளின் மிகப் பிந்திய நிலைமைகளோடு  தன்னையெப்போதும் இணைத்துக்கொள்வதில் ஆர்வமுள்ளவர். வேகமும் வீச்சும் பரபரப்பும் கொண்ட இளமையை படிப்படியாக விரிவு செய்த தனது மனப்பரப்பை விசாளித்து பரிவு, பொறுமை, பக்குவம் கொண்டதொரு முதிர்ச்சி நிலையாக அவர் மாற்றிக்கொண்டது. ஒரு விடுதலைப் போராளி படிப்படியாக வளர்ச்சி கண்டு அடையவேண்டிய நிலையை எமக்குக் காட்டுகின்றது.

எண்பதுகள் தொட்டு அவரது வாழ்வு அல்லது வரலாறு விடுதலைப்போராட்டத்தோடு இரண்டறக் கலந்தாகிவிட்டது. தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் செல் நெறிப்போக்கினை நெறிப்படுத்தும் தலைவர் உடனிருந்த, அவர் மனம்புரிந்து கருத்துப்பரிமாறி, கலகலப்பாக்கி அன்றிலிருந்து உயிர் பறிக்கபட்ட அன்றைய நாள்வரை இடைவிடாது இயங்கிய பெருமை அவருக்குரியது. அவரது வரலாற்றின் சிறப்பான பக்கங்களாக கருதப்படும் மணலாற்று காலகட்டம் அவரது ஆளுமையை உணர்த்தி நிற்கின்றது. அவரது அறிவியல், வனத்தின் இரகசியங்களை போராளிகளுக்கு கற்றுக்கொடுத்து வனவாழ்க்கைக்கு அவர்களை இணக்கியது. அவரது இறுக்கமான ஒழுக்கக் கட்டுப்பாடு வனத்தின் மிக அருந்தலாகக் கிடைக்கும் உணவு, குடிநீர் போன்றவற்றை சீராக பங்கிட்டு, அவரது உன்னிப்பான கவனப்பார்வை விடப்படும் சிறுதவறுகள் பெருந்தவறுகளாகி அழிவுகளை ஏற்படுத்தாமல் தடுத்த – இயக்கத்தின் அதி நெருக்கடியான காலகட்டமொன்றிலிருந்து தலைமையைப் பேணி மீள உதவிற்று. அன்று அவர் தம்மை ‘குட்டி, குட்டி’ வளர்த்த கதையை அன்று அவருடன் இயங்கிய போராளிகள் சொல்லிச் சொல்லி மாய்க்கின்றார்கள்.

இவ்வாறன இவ்வரசியல், இராணுவ, அறிவியல் பக்கங்களைவிட அவரது ‘மனித உறவாடல்கள்’ மிக வேறுபட்டதொரு தளத்தில் செயற்பட்டமை அதிசயிக்கத்தக்கது. பொதுவில் இத்தகைய ஆற்றல்கள் பெற்றோர் வேலைப்பழு போன்ற ஏதாவதொரு காரணத்தால் ‘தனிமைப்பட்டிருப்பது’ வழமை. ஆனால் கேணல் சங்கரோ மனித உறவுகளை சீராக தொடர்ச்சியாகப் பேணுவதில் பெரும் கவனம் செலுத்தினார். வன்னியின் மூத்தோர் அனுபவமிக்க கமக்காரர், பல்வேறு துறைசார்ந்தோர், கல்வியாளர், உயரதிகாரிகள் எல்லோருடனும் ‘முறைவைத்து’ நேர்த்தியான உறவினைப் பேணிவந்தார். இளவயதில் வாழ்க்கைப் போராட்டத்தில் எதிர் நீச்சல்போட்டு தங்களை வளர்த்த அருமைத் தாயாரின் அறிவு, ஆற்றல், துணிவு, வாசிக்கும் ஆர்வம் போன்ற இயல்புகனை உள்வாங்கி வளர்ந்த கேணல் சங்கர் போராளிகளின் குடும்பநலன், விழுப்புண்பட்டோர் நலன், மணமுடிக்க ஆயத்தமாவோர், மணம்முடித்து மகப்பேற்றினை பெற்றெடுத்தோர் எல்லோருடனும் ‘தாயன்பினை’ காட்டி அன்புடன் உறவாடினார். அவரது நெஞ்சத்துறையில் ஒவ்வொரு போராளிகளுக்கும் தனித்தனிப் பதிவுகளை பேணிவந்தார். ஆண் சகோதரர்களுடன் வாழ்ந்த அவர் இளம் சிட்டுக்களாக சிறகடிக்கும் பெண்குழந்தைகளைக் கண்டால் தானும் குழந்தையாகிவிடுவார். இயற்கையின் நண்பனாவார். துவாரங்களோடும் அவருக்கு உறவிருந்தது. அவரது பண்ணைகளில் அவர் கையால் நட்டு வளர்த்த மரங்கள் என்றும் அவர் பெயர் சொல்லும்.

இத்தகையதொரு மாவீரனை எதிரி எம்மிடமிருந்து பறித்துவிட்டான். ஆனால் எம்மிடம் செறியவைக்கப்பட்டுள்ள அவரது நினைவுகளை எவராலும் பறிக்க முடியாது. அவரது ஆளுமை ஒரு பகுதியேனும் அவரால் வளர்க்கப்பட்டுள்ள அவரது நினைவுகளை எவராலும் இல்லாமற் செய்தவிடவும் முடியாது. இம்மண்ணின் விடிவிற்கான முழுமையான அர்ப்பணம் அவரது வாழ்வு எல்லார்க்கும் கிட்டிடாத பேறு, அவரது வரலாறு. எம் மண்ணில் மலர்ந்திடும் மலர்களிலும் பிறந்திடும் குழந்தைச் செல்வங்களிலும் அவரது அமைதியான புன்முறுவல் பூத்த முகம் தெரிவதை இனியென்றும் நாம் காண்போம்.

 க. வே. பாலகுமாரன்.

ஜப்பசி – கார்த்திகை 2001

Urukkul Uraintha

Vidthalaipulikal kural 101

அக்கினிச் சுடர்கள்

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments