×

வடமராட்சியில் ஆழ ஊடுருவி வேவு பார்த்த படையினர்: ஒரு திகைப்பூட்டும் சம்பவம்

வடமராட்சியில் ஆழ ஊடுருவி வேவு பார்த்த படையினர்: ஒரு திகைப்பூட்டும் சம்பவம்

​1995ஆம் ஆண்டு மார்கழி மாதம், யாழ்ப்பாணத்தை நோக்கிப் படையினர் நெருங்கிக் கொண்டிருந்த காலம். வல்லை-அச்சுவேலி சந்தி இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது.

வல்லையிலுள்ள முனியப்பர் கோயிலடியில் கூடத் தலை காட்ட முடியாது. காரணம், அங்கு மறைந்திருக்கும் ஒற்றைப்படை வீரன் (sniper), அவ்விடத்தில் தென்படும் தலையில் குண்டு பாய்ந்து விடும் அபாயம் இருந்தது.

மறு புறத்தே புலிகளின் பெரும்படையணிகள் யாழ்ப்பாணத்தை நோக்கி முன்னேறும் படையினரைத் தடுக்க உக்கிரமான போரில் ஈடுபட்டிருந்தனர்.

​வடமராட்சிப் பகுதியில், தொண்டமான் ஆற்றின் முகத்துவாரத்திலிருந்து சந்நிதி கோயில்வரை, புலிகள் மண் அணைகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றியபின் படையினர் வடமராட்சியை நோக்கி வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டதால், இதற்கான ஆயத்தங்கள் நடந்தன.

இராணுவ வீரர்களின் மறைந்திருந்து சுடும் தாக்குதல்களிலிருந்து தப்ப, மக்களும் புலிகளுடன் இணைந்து, பாதுகாப்பு மறைப்பு வேலிகளை அமைத்துக்கொண்டனர்.

​ஒருநாள் இரவு, வடமராட்சியின் அரசியல் செயலகத்தில் இருந்த ஒரு போராளி, தென்மராட்சியிலுள்ள அரசியல் செயலகத்தைத் தொடர்புகொள்ள, தொலைத்தொடர்புக் கருவியின் (walkie-talkie) அலைவரிசையை மாற்றிக்கொண்டிருந்தார்.

அப்போது, தற்செயலாக ஒரு அலைவரிசையில் சிங்கள உரையாடல் கேட்டது. அலைவரிசையை மாற்றிப் பரிமாறிய அந்தப் போராளி, மறுநாள் இரவு மீண்டும் அதே அலைவரிசையை சோதித்தபோது, மிகவும் துல்லியமான தகவல்கள் மாறிமாறிப் பரிமாறப்பட்டன.

அலைவரிசைகள் மாற மாற, அவற்றை பின்தொடர்ந்து கேட்ட அவருக்கு ஓர் உண்மை புரிந்தது—படையினர் மிக அருகில் எங்கோ பதுங்கியிருக்கிறார்கள்.
​உடனடியாக, அவர் வடமராட்சியின் அரசியல் பொறுப்பாளராக இருந்த செல்லையாவிடம் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

விடிந்தபோது அந்த அலைவரிசை அமைதியாக இருந்தது. படையினர் நடமாட்டம் எதுவும் கண்ணில் படவில்லை மக்களிடமிருந்தும் தகவல் எதுவும் வரவில்லை.

இந்தத் தகவல் உடனே தென்மராட்சியில் இருந்த புலிகளின் அரசியல் துறை தலைமைச் செயலகத்திற்கு அறிவிக்கப்பட்டது, அவர்களிடமிருந்து மொனிட்டர் பிரிவுக்கு (ஒற்றுக் கேட்கும் பிரிவு) தகவல் சென்றது.

​அன்றைய பகலே, மொனிட்டர் பிரிவு தங்கள் கருவிகளை வடமராட்சிப் பகுதியில் அமைத்துவிட்டு, இரவிற்காகக் காத்திருந்தனர். இரவு பதினொரு மணிக்குமேல், அந்த அலைவரிசை மீண்டும் இயங்கத் தொடங்கியது. வடமராட்சியின் முக்கிய இடங்களிலுள்ள புலிகளின் நடமாட்டம், காயமடைந்த போராளிகள் இருக்கும் இடங்கள், மந்திகை மருத்துவமனை, எல்லைகள் அற்ற மருத்துவர்கள் (MSF) இருப்பிடங்கள் போன்ற பலவித தகவல்கள் பலாலிப் படைத்தளத்துக்குப் பரிமாறப்பட்டன. வழக்கமாக, களத்தில் இருக்கும் படையினர் VHF அல்லது UHF அலைவரிசையைப் பயன்படுத்துவார்கள்.

ஆனால், இந்த சம்பவம் வடமராட்சியின் பல இடங்களில் யாழ்ப்பாணத்திலிருந்து இடம் பெயர்ந்த மக்கள் நிறைந்திருந்தபோதிலும், சந்தேகத்திற்கிடமான எந்த நடமாட்டத்தையும் யாரும் கண்டதாகத் தெரிவிக்கவில்லை.
​இதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு, மந்திகைப் பகுதியில் ஒரு தற்காலிகக் கடை வைத்திருந்த இடம்பெயர்ந்த வர்த்தகரின் மோட்டார் சைக்கிள் திருட்டுபோயிருந்தது.

நெல்லியடி காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்திருந்தார்.
​மறுநாள், புலிகளின் படையினர் வடமராட்சி முழுவதும் இரகசியமாகத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பொதுமக்களுக்குத் தகவல் சொன்னால், பதற்றமடைந்து அந்த வேவுப்படையினர் தப்பிவிடலாம் என்பதால், தேடுதல் ரகசியமாக நடந்தது.

முதல் நாள் ஒற்றுக் கேட்டதில், அந்தப் படையினருக்கான உணவுப்பொருள் விநியோகம் வல்லை வெளியை ஒட்டிய பகுதிகளில் நடப்பது தெரியவந்தது. புலிகளின் மொனிட்டர் பிரிவு ஒரு திட்டத்தை வகுத்தது. எதிரிகளின் அலைவரிசையை துண்டித்து, அவர்களது குரலில் தாங்களே பேசி, உணவு உட்பட ஏனைய பொருட்களை வந்து எடுத்துச் செல்லுமாறு கூறுவது.

நெல்லியடி குஞ்சர்கடை, புறாப்பொறுக்கி வழியாக செல்வ சந்நிதியான் தொண்டைமானாறு கோயிலுக்குச் செல்லும் உடுப்பிட்டிச் சந்தியை ஒப்பிட்டுச் சொன்னார்கள்.

​அதே நேரத்தில், மற்றொரு புலிகளின் பிரிவு, குறிப்பிட்ட அந்த இடத்தில் பதுங்கியிருந்தது.

அதிகாலை இரண்டு மணியளவில் ஒரு மோட்டார் சைக்கிள் சத்தம் கேட்டது. அது, குறிப்பிட்ட சந்தியிலிருந்து சுமார் முன்னூறு மீட்டர் தொலைவில் நின்றுவிட்டது. இருட்டில் இரண்டு உருவங்கள் மெதுவாக நடந்து, சொன்ன இடத்தை அடைந்தன. திடீரென்று, பல கோணங்களிலிருந்தும் ஒளிக்கற்றைகள் பாய்ந்தன.

பதுங்கியிருந்த போராளிகள் விரைந்து பாய்ந்து அவர்களை மடக்கிப் பிடித்தனர்.
​ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், எதிரிப் படையினரும் புலிகள் அணிவதுபோன்ற வரிப்புலி சீருடையை அணிந்திருந்தனர்.

அவர்களிடம் விசாரணை செய்தபோது, அவர்களுடன் மேலும் நான்கு பேர் நெல்லியடி-பருத்தித்துறை வீதியில் உள்ள ஒரு நெசவுத் தொழிற்சாலையில் பதுங்கியிருந்தது தெரியவந்தது.

அவர்களும் வரிப்புலிச் சீருடையிலேயே இருந்தார்கள்.
​அவர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள், மந்திகையில் காணாமல் போன அந்த வர்த்தகருடையது எனப் பின்னர் தெரியவந்தது.

அவர்களிடம் இருந்து ஆறு வோக்கி-டாக்கிகள், ஒரு LMG, ஒரு RPG, இரண்டு LOW, ஐந்து T56 துப்பாக்கிகள், ஒரு குறிபார்த்துச் சுடும் துப்பாக்கி, இரவுப் பார்வை சாதனங்கள் (night vision), திசைமானிகள் (compass) மற்றும் பிற பொருட்கள் மீட்கப்படன.

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments