
ஆவேசம் கொண்ட இளம் பரம்பரை
ஏற்கனவே சிங்கள இனவாத ஒடுக்குமுறையின் அழுத்தத்தால் விரக்தியும், வெறுப்பும் கொண்டிருந்த தமிழ் இளம் சமுதாயம் மீது 1970ஆம் ஆண்டு தரப்படுத்தல் முறை திணிக்கப்பட்டமை, எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் அமைந்தது. உயர்கல்வி வாய்ப்பிற்கும், வேலை வாய்ப்பிற்கும் கதவுகள் அடைக்கப்பட்டதால் தமிழ் இளம் பரம்பரை ஆவேசம் கொண்டிருந்தது. ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள், கண்டனக் கூட்டங்கள், கொடும்பாவி எரிப்புக்களாகத் தமிழீழமெங்கும் மாணவர் கிளர்ச்சிகள் குமுறின. இந்தக் கிளர்ச்சிகளுக்கு எதிராக சிங்கள அரசின் ஆயுதப் படையினர் மேற்கொண்ட மிருகத்தனமான அடக்குமுறைகள், இளம் சமூகத்திற்கு மேலும் ஆவேசத்தைக் கொடுத்தது. இந்தக் கொந்தளிப்பான சூழ்நிலையில் சிங்கள இனத்துவேசத்திற்கு சிகரம் வைக்குமாப்போல் 1972ஆம் ஆண்டு, மே 22ஆம் திகதி புதிய குடியரசு அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது. திருமதி பண்டாரநாயக்காவின் தலைமையில் முக்கூட்டு முன்னணியாக (சிறீலங்கா சுதந்திரக் கட்சி, சமசமாஜக் கட்சி, கொம்யூனிஸ்ட் கட்சி) 1970இல் ஆட்சிபீடம் ஏறிய அரசு, சிங்களப் பேரினவாதத்தைச் சட்டரீதியாக ஸ்தாபனமயப்படுத்த முனைந்தது.
இந்த நோக்கில் கொண்டு வரப்பட்ட புதிய அரசியல் யாப்பை, இடதுசாரி இயக்கத்தின் தந்தைகளில் ஒருவராக வர்ணிக்கப்பட்ட கொல்வின் ஆர்.டி.சில்வா உருவாக்கிக் கொடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சிங்கள மொழிக்கும், பௌத்தத்திற்கும் முதன்மையான விசேட அந்தஸ்து வழங்கி, முந்திய சோல்பரியின் அரசியலமைப்பில் தமிழருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு உத்தரவாதங்களை நீக்கி, தமிழரின் நலன்களுக்கு விரோதமான முறையில் உருவாக்கப்பட்ட இந்தப் புதிய அரசியலமைப்பு, சிங்கள-தமிழ்த் தேசிய முரண்பாட்டை மேலும் வலுக்கச் செய்தது.
சிங்கள தேசத்தில் தலைவிரித்தாடிய இனத்துவேச அரசியல், தமிழ் மக்கள் மத்தியில், குறிப்பாக இளைஞர் மத்தியில், புரட்சிகரமான அரசியல் விழிப்புணர்வையும், தீவிரவாதப் போர்க்குணத்தையும் உருப்பெறச் செய்தது.