
ஈழத்தீவின் ஆதிகால மொழி பற்றிய ஆய்வில் கல்வெட்டுக்கள் முக்கிய சான்றாதாரமாகக் கொள்ளப்படுகின்றன.
இக்கல்வெட்டு மொழி பற்றி ஆராய்ந்த பலரும் இதனை இந்தியாவில் இருந்த பிராகிருதம் என ஏற்றுக் கொண்டுள்ளனர் (Karunaratne 1984:39-47). வில்லியம் கைகர் இம்மொழியைச் சிங்கள பிராகிருதம் எனவும், பரணவிதான ஆதிச்சிங்கள மொழியெனவும் பெயரிட்டு இது வடஇந்தியாவின் மேற்குப் பிராந்தியத்திலிருந்து அல்லது கிழக்குப் பிராந்தியத்திலிருந்து பரவியிருக்க வேண்டும் என விளக்கம் கொடுத்துள்ளனர். இதற்கு மொழிகளுக்கிடையிலான ஒற்றுமை மட்டுமன்றி சிங்கள மக்களின் மூதாதையினர் வட இந்தியாவிலிருந்து புலம் பெயர்ந்த ஆரியர்களின் வழித்தோன்றல்கள் என்ற பாரம்பரிய வரலாற்று நம்பிக்கையும் ஆதாரம் காட்டப்பட்டுள்ளன. ஈழத்தீவின் கல்வெட்டு மொழியாக பிராகிருதம் இருப்பதற்கு பௌத்த மதத்தோடு அம்மத மொழியான பிராகிருதமும் அறிமுகமானது காரணமாக இருக்கலாம் என கருதப்பட்டு வந்தாலும் இக்கல்வெட்டுக்கள் பேரரசர் அசோகனுடைய காலத்திற்கும் முற்பட்டவையாக காணப்படுகின்றன. இதன் காரணமாக இப்பிராகிருத மொழி பௌத்த மதத்திற்கு முற்பட்ட சமணமதம் பரவிய காரணமாக எழுந்தவை என்பதையே உறுதிப்படுத்துகின்றன. இங்கு காணப்படும் பெரும்பாலான குகைக் கல்வெட்டுக்கள் சமண மதத்தோடு தொடர்புடையதால் இம்மதத்தோடு இம்மொழி அறிமுகமாகி இருக்க வாய்ப்புண்டு. அக்கல்வெட்டுக்களில் வரும்
இருபதுக்கு மேற்பட்ட சொற்கள் ஏறத்தாழ அதே வடிவத்தில் ஈழத்து பிராமிக் கல்வெட்டுக்களிலும் வருகின்றன (புஷ்பரட்ணம் 2000:16-24). ஈழத்தில் பௌத்தத்திற்கு முன் சமணமதம் இருந்ததற்கு பாளி இலக்கியங்களில் சில சான்றுகள் உண்டு. இங்குள்ள காலத்தால் முந்திய பெரியபுளியங்குளம், மிகிந்தலை, வெசகிரி பிராமிக் கல்வெட்டுக்களில் தமிழ்ப் பிராமியின் செல்வாக்கைக் காணமுடிகிறது. இவை தமிழ்நாட்டில் இருந்து சமண மதத்தோடு அறிமுகமானவை என்பது அபயசிங்காவின் கருத்தாகும் (Abayasinha 1965:29). இவற்றை நோக்கும் போது ஈழத்தின் பிராகிருத மொழி சமணமதத்தோடு ஓரளவுக்கு பரவியிருக்கலாம் எனக் கருத இடமுண்டு.
பிராகிருதம் கல்வெட்டு மொழியாக இருந்தபோதும் அதுவே மக்களின் தொடர்பு மொழியாக இருந்ததெனக் கூற ஆதாரம் இல்லை. இதுவரை கிடைத்த அனைத்துக் கல்வெட்டுக்களும் சமணமதம் சார்ந்த செய்திகளை மட்டும் கூறுகின்றன. மேலும் இங்கே தமிழகப் பிராமிக் கல்வெட்டுக்களைப் போல் ஓரிரு வரிகளில் தானம் கொடுத்தோர், பெற்றோர் பற்றிய விபரம் மட்டும் காணப்படுகின்றன. பெரும்பாலான கல்வெட்டுக்களில் குறிப்பிட்ட சில பெயர்கள், பட்டங்கள், சொற்கள் என்பன மாறிமாறி வருகின்றன. பிராகிருதம் அல்லாத பல சொற்கள் பரவலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவற்றை நோக்கும் போது கல்வெட்டில்’ போதுமான அளவுக்கு பிராகிருத மொழிச் சொற்கள் பயன்படுத்தப்-படவில்லை என்பது தெரிகிறது (Ragupathy 1991). அத்துடன் பெரும்பாலான கல்வெட்டுக்கள் சமூகத்தில் உயர்நிலையில் இருந்தவர்களோடு தொடர்புடையதாகக் காணப்பட்டுள்ளன. குறிப்பாக 1234 கல்வெட்டில் 200 கல்வெட்டுக்களைத் தவிர ஏனைய கல்வெட்டுக்கள் அரசவம்சம், சமூகத் தலைவர்கள், பிராமணர்கள், ஆகியோருடன் தொடர்புடைய செய்திகளை மட்டும் கூறுகின்றன. இச்சான்றாதாரங்கள் சமூகத்தில் உயர்நிலையில் இருந்த குறிப்பிட்ட ஒரு வர்க்கத்தினரால் பிராகிருதம் கல்வெட்டு மொழியாகப் பயன்படுத்தியிருக்க வேண்டும் எனக் கருத இடமளிக்கிறது.
கல்வெட்டு மொழியாகப் பிராகிருதம் இருந்த போதிலும் அவற்றில் பயன்படுத்தப்பட்ட சொற்கள், பெயர்கள் அனைத்தும் வடமொழிக்குரியவை எனக் கொள்ளமுடியாது. இம்மக்கள் பயன்படுத்திய பெயர்கள் பல கல்வெட்டுக்களில் அன் விகுதி பெற்று அவர்கள் தமிழர்களே என்பதை ஆணித்தரமாக உறுதிப்படுத்துகின்றன. அத்தகைய பல இடங்களில் “ன்” என்பதற்கு பதிலாக “ந்” எனவும் அன் விகுதி பெற்று விளங்குகின்றன. இவ்வாறான கல்வெட்டுக்கள் தமிழக கல்வெடாடுக்களிலும் காணப்படுகின்றன. இதனை “சுமணந” என
பரணவிதான போன்றோர் பிராகிருத மயப்படுத்தி இக்கல்வெட்டுகளின் எழுத்தையும், மொழியையும் சிங்கள மக்களின் மூதாதையினர் வட இந்தியாவில் இருந்து வந்தவர்கள் என்பதற்கு ஒரு சான்றாகக் கொண்டதால் அவற்றில் வரும் சொற்கள் வடமொழி சார்ந்தவை என்பதற்கு வடமொழிக் கல்வெட்டுக்களையும் இலக்கியங்களையும் ஆதாரம் காட்டியுள்ளார். சில சொற்கள் தமிழ் மொழிக்கு உரியவை என இவர் ஏற்றுக் கொண்டாலும் அவை பிற்காலத்தில் கடன் வாங்கப்பட்ட சொற்கள் என விளக்கம் கொடுக்கிறார். வேறு பல சொற்களை “எலு” மொழி சார்ந்தவை எனக் கூறிப் பழைய சிங்களம் என நியாயப்படுத்துகிறார்.
ஆனால் தமிழ் மொழிச் சொற்கள் பிற்காலத்தில் கடன் வாங்கப்பட்டதெனக் கூறுவது இலங்கையில் தமிழ் மொழியினதும், அம்மொழி பேசிய மக்களினதும் பூர்வீக வரலாற்றை மறைப்பதாக உள்ளது. இத்தகைய பிராகிருத கல்வெட்டு மொழிக்கு முன்பாக இங்கு சுதேச மொழிகள் இருக்கவில்லை என்பதே அவரது கூற்றாக அமைந்தது. ஆனால் அக்கால பகுதியில் தமிழ் கல்வெட்டு மொழியாக மட்டுமன்றி வளமான சங்க இலக்கியத்தை முதலில் படைத்த மொழியாகவும் இருந்துள்ளது. அப்போது இலங்கைத் தமிழர்கள் புலவர்களாகவும், வணிகர்களாகவும் தமிழகத்தோடு தொடர்பு கொண்டிருந்ததைச் சங்க இலக்கியங்கள் (அக. 88, 231, 307. குறு. 189, 343, 360. நற் .366) மட்டுமன்றி, தமிழக கல்வெட்டுக்களும் உறுதிப்படுத்துகின்றன (Mahadevan 1966: Nos.51, 52). தமிழரோடு தொடர்புடைய ஒரு நாடாக ஈழம் இருந்ததை (M.V.ΧΧΙ:10-11, 15-34,XXXIII:37-41), (I.C.1970.Nos. 94, 356-357, Ε.Ζ.ΙΙ;111-114) கூறுகின்றன. இச்சான்றுகளைப் பண்டு தொட்டு இலங்கை மண்ணோடு தமிழருக்குள்ள உரிமையின் அடையாளமாக எடுத்துக் கொள்ளலாம். அதை உறுதிப்படுத்தும் முக்கிய சான்றாதாரங்களில் ஒன்றாகப் பிராமிக் கல்வெட்டுக்கள் விளங்குகின்றன. அந்த வகையில் ஈழத்து வரலாற்றில் மிகவும் பிரபலமாக விளங்கக்கூடிய திஸ என்ற பெயரை நோக்குவோம். ஈழத்து
கல்வெட்டுக்களில் வரும் தனிநபர் பெயர்களில் திஸ என்ற பெயர் எண்ணிக்கையில் அதிகமாகும். இப்பெயரில் சமூகத்தின் பல தரபட்ட மக்கள், மன்னர்கள், சிற்றரசர்கள், குறுநிலத் தலைவர்கள் எனப் பலர் இருந்ததைக் கல்வெட்டுக்கள் மட்டுமன்றிச் சமகாலப் பாளி இலக்கியங்-களும் கூறுகின்றன. இப்பெயர் ஐம்பதுக்கு மேற்பட்ட கல்வெட்டுக்களில் திஸ, திச, திஸ்ஸ, திஸஹ, திச திஸய, திஸயஸ, திச ஸ, திஸிய, (1.C.1970. Nos. 114, 120, 275, 424, 1027) என பிராகிருத மையப்படுத்திய நிலையில் காணப்பட்டாலும் அப்பெயர் கண்டி மாவட்டத்தில் கிடைத்த ஒரு கல்வெட்டில் இப்பெயர் திசெ ன்(ந) என அன் விகுதி பெற்று அப்பெயரானது ஓர் தமிழ் மொழிக்குரியதும் தமிழரும் ஆகும் என உறுதிப்பட்டது (I.C.1970. No.813)
இதன் கல்வெட்டு மைப்படி சற்றுத் தெளிவு குறைவாக இருப்பதால் இப்பெயரின் இறுதி எழுத்து “ன” என்ற எழுத்தா அல்லது “ந” என்ற எழுத்தா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை. ஆனால் வழக்கமாக கல்வெட்டுக்களில் வரும் பிராகிருத மொழிப் பெயர்களில் இருந்து இது வேறுபடுவதை காணமுடிந்தது. இதன் முக்கியத்துவம் தொடர்பாக கல்வெட்டறிஞர் மகாதேவன் அவர்கள் பெயரின் இறுதி “அன்” என்ற பொருளில் முடிவதால் அதன் இறுதி எழுத்து னகரமாக இருந்தாலும் நகரமாக இருந்தாலும் அப்பெயரைத் திசென் என வாசிக்கலாம் என்றார். இலக்கிய வழக்கிலுள்ள பெயர்கள் கல்வெட்டுக்களில் மாறி எழுதப்பட்டதற்குத் தமிழகப் பிராமிக் கல்வெட்டுக்களிலும், ஈழத்து பிராமிக் கல்வெட்டுக்களிலும் சான்றுகள் இருப்பதால் இதைத் திசென் என்று வாசிப்பதே பொருத்தமாகும் என்கிறார். இதே சாயலை உடைய தமிழ் பெயர்களாக திசவீரசிங்கம் ,திசைநாயகம் போன்ற பெயர்கள் இன்றும் தமிழர்களிடையே புழக்கத்தில் உள்ளன.
இப் பெயரில் பண்டைய காலத்தில் தமிழர்களும் இருந்ததற்குப் பல சான்றுகள் உண்டு. இதற்கு தமிழ் நாட்டில் அழகன்குளத்தில் கிடைத்த மட்பாண்டத்தில் வரும் திசஅன் என்ற பெயர் ஒரு எடுத்துக்காட்டாகும் (இராசகோபால் 1991). அதே போன்று அம்பாறை மாவட்டத்தில் குடுவில் என்ற இடத்தில் கிடைத்த கி.மு.2 ஆம் நூற்றாண்டிற்குரிய கல்வெட்டொன்று தீகவாபி என்ற இடத்தில் வாழ்ந்த திச என்ற தமிழன் பற்றிக் கூறுகிறது (Paranavithana 1970: No 480). கல்வெட்டொன்று தமிழர்கள் ஒன்றுகூடி வணிகம் தொடர்பான ஆலோசனை நடத்த மண்டபம் ஒன்றை அமைத்ததாகவும், அவ்வணிக
குழுவில் திசஹ என்ற பெயருக்குரிய தமிழனும் ஈடுபட்டதாகவும் கூறுகிறது (Parana vithana 1970: 94). கி.பி 2ஆம் நூற்றாண்டில் அநுராதபுரத்தில் ஆட்சி புரிந்த இளநாகனின் பட்டத்தரசியாக இருந்த தமிழதேவியின் (தமிழ்த் தேவி) புதல்வன் பிற்காலத்தில் தீஸ என்ற பெயருடன் அநுராதபுரத்தில் ஏழு வருடம் எட்டு மாதம் ஆட்சிபுரிந்ததாகப் பாளி நூல்கள் கூறுகின்றன (M.V.XX XV:48-50) ஆகவே இச்சான்றுகள் ஈழத்தீவில் பண்டைய கல்வெட்டுக்களில் காணப்படுகின்றன திஸ என்ற பிராகிருத பெயருக்கு உரியவர்கள் தமிழர்களே என்பதற்கு இதுவோர் சிறந்த சான்றாக அமைகிறது. அதற்கான ஆதாரமாக அன் விகுதி பெற்றுக் காணப்படுகின்றன திஸன் என்ற பெயர் இங்குள்ள கல்வெட்டின் முதலாவது வாக்கியத்தின் இறுதி மூன்று எழுத்துக்களில் இடம்பெறுவதனை காண்க.