
அநீதிக்கு சவால் விடுத்த அன்னை பூபதி.
– தமிழீழத் தேசியத் தலைவர் திரு . வே. பிரபாகரன் அவர்கள்.
உலக விடுதலைப் போராட்டங்களுடன் ஒப்பு நோக்கிப் பார்க்கும் போது தமிழீழ சுதந்திரப் போராட்டம் தனக்கே உரித்தான தனித்துவச் சிறப்பம்சங்களைக் கொண்டது. உலக வரலாற்றில் எவருமே சாதிக்காத, எங்குமே நிகழ்ந்திராத, அற்புதமான அர்ப் பணிப்புக்களைக் கொண்டதாக எமது போராட்ட வரலாறு அமையப் பெற்றிருக்கிறது. இதுவே அதன் தனித்துவச் சிறப்பம்சமாகும்.
இந்த மகத்தான தியாக வரலாற்றில் அன்னை பூபதியின் அர்ப்பணிப்பு ஒப்பற்றது.
ஒரு சாதாரண தாயின் அசாதாரண துணிவாகவும், அலாதியான தேசியப் பற்றுணர்வாகவும் அன்னையின் அறப்போர் அமைந்தது தர்மத்தின் குரலாக, தனித்து நின்று அவர் ஒரு சாம்ராஜ்யத்தின் அதர்மத்தை எதிர்த்தார். நீதியின் நெருப்பில் தன்னை எரித்து அநீதிக்குச் சவால் விடுத்தார்.
சாவுக்கு அஞ்சாத மனோதிடம் படைத்தவர்கள் எதையும் சாதிக்கும் வல்லமை பெற்றவர்கள். அவர்களே சரித்திரத்தையும் படைக்கிறார்கள். அன்னை பூபதியும் ஒரு சரித்திரத்தைப் படைத்தார். ஒரு தனித்துவமான, காலத்தால் சாகாத சரித்திரத்தைப் படைத்தார்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
(தமிழீழத் தேசியத் தலைவர் திரு. வே. பிரபாகரன் அவர்கள் 31-3-1992ல் தமிழீழ ஈகச்சுடர்” நூலுக்கு வழங்கிய செய்தியிலிருந்து)