
அவ்ரோ விமானம் புலிகளால் தகர்ப்பு
பாராளுமன்ற ஆசனங்களைத் தொடர்ந்தும் இறுகப்பற்றியிருந்த கூட்டணியினர், இந்த அரசியலமைப்புச் சட்டத்திற்கு எந்தவித எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. ஆயினும் விடுதலைப் புலிகள் இயக்கம், தமிழருக்கு எதிராக இழைக்கப்பட்ட இந்த அநீதியை சர்வதேச சமூகத்தின் கவனத்திற்குக் கொண்டுவர உறுதிபூண்டது. இந்தச் சட்டம் சிறீலங்கா தேசியப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட அதே தினத்தில், அரசுக்குச் சொந்தமான பயணிகள் விமானமான ‘அவ்ரோ’ விமானத்தை விடுதலைப் புலிகள் தகர்த்தனர். இரத்மலானை விமான நிலையத்தில் பயணிகள் இறங்கிய சிறிது நேரத்தில், புலிகளால் வைக்கப்பட்ட நேரக்குண்டு வெடித்து, விமானம் சிதறியது. கொழும்பில் நிகழ்ந்த முதற் குண்டுவெடிப்பான இந்தச் சம்பவம், தமிழர் பிரச்சினையை சர்வதேசமயப்படுத்தியதுடன், இனத்துவேசத் திமிர்கொண்ட சிங்கள அரசின் முகத்தில் கரிபூசுவதாகவும் அமைந்தது.
எழுபதுகளைக் கொண்ட தசாப்தத்தின் இறுதிக் காலகட்டம், இன ஒடுக்குதலின் இரத்தம் படிந்த இருண்ட அத்தியாயத்துடன் முடிவுற்றது. தீவிரமடைந்து வந்த விடுதலைப் புலிகளின் ஆயுதப் எதிர்ப்பு இயக்கத்தை ஒழித்துத் தமிழரின் விடுதலைப் போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கத்துடன் ஜெயவர்த்தனா அரசு கடும் நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்தது. இதன்படி 1979 யூலை 30ஆம் திகதி விடுதலைப் புலிகள் தடைச்சட்டத்திற்குப் பதிலாகப் படுமோசமான பயங்கரவாதத் தடைச்சட்டத்தை அமுலுக்குக் கொண்டு வந்தது. சனநாயக தர்மங்களுக்கு விரோதமானதும், அடிப்படை மனித உரிமைகளை மீறுவதுமான இந்தக் கொடுமையான சட்டத்தைச் சர்வதேச சமூகம் கடுமையாகக் கண்டித்தது.
இந்தப் பயங்கரவாதச் சட்டத்தைப் பிறப்பித்த நேரத்தில், யாழ்ப்பாணக் குடாநாட்டில் அவசரகாலச் சட்டமும் பிரகடனப்படுத்தப்பட்டது. பிரிகேடியர் வீரதுங்கா தலைமையில் மேலதிக இராணுவப் படைகளை யாழ்ப்பாணத்தில் குவித்த ஜெயவர்த்தனா, ஆறு மாத காலத்திற்குள், அதாவது 1979 டிசம்பர் 31ஆம் திகதிக்குள், விடுதலைப் புலிகள் இயக்கமும் அதன் ‘பயங்கரவாத’ நடவடிக்கைகளும் முற்றாக அழிக்கப்பட வேண்டுமென பிரிகேடியர் வீரதுங்காவுக்கு ஆணை பிறப்பித்தார்.