
பசிலனின் இன்னொரு போர்முகம் பால்ராஜ் 01
போராளிகளின் முகாம்களை குறிவைத்து இந்திய இராணுவத்தினர் மேற்கொண்ட நட வடிக்கைகளுக்கு பின்னர், போராளிகளுக்கு முகாம்களென்று சொல்லிக்கொள்ள நிரந்தரமாகக் காட்டில் எதுவும் இருக்கவில்லை. அதனால் காட்டில் போராளிகள் நடமாடிக்கொண்டே இருந்தார்கள். கிராமப்புறங்களுக்குச் செல்லும்போது மட்டும்தான் எங்காவது ஆதரவாளர்களின் வீடுகளில் அடைக்கலமாவது. மற்றும்படி காட்டில் போகும் இடங்களில், ஒரு மரத்தின் கீழேதான் அன்றைய இரவின் தங்குமிடம்.
அதுவும் மழைக் காலம் என்றால் சொல்லவே தேவையில்லை. காட்டில் மழை பெய்தால், மழை ஓய்ந்தபின்தான் அதிகமாக நனையவேண்டும். காட்டு வாழ்க்கையை அனுபவித்தவர்களுக்கு இது நன்கு புரியும். கடும் மழை பெய்து கொண்டிருக்கும். இரவு தூங்குவதற்கு முடியாமல் வெள்ளம் ஓடிக்கொண்டே இருக்கும். எங்கையாவது கறையான் புற்றைத்தேடிப்போய் அந்த மேட்டுப் பகுதியில் தலைவைத்துத்தான் படுக்கவேண்டும். கறையான் புற்றெண்டாலும் அதற்குள் பாம்பு, உடும்பு போன்றவை இருக்கும். ஆனாலும், அதையும் விட்டால் காட்டில் வேறு வழியில்லை. மழை கொட்டிக்கொண்டே இருக்கும். இரு காதுகளுக்குள்ளும் விரல்களை வைத்து, தண்ணீர் காதுகளுக்குள் போகாதவாறு பார்த்துக்கொண்டு, அப்படியே கண்ணை மூடித் தூங்க வேண்டியதுதான். உடல் அலுப்புக்கு அந்த மழைக்குள்ளே எப்படித்தான் தூக்கம் வருகின்றதோ தெரியவில்லை, நன்றாகத் தூங்கிவிடுவார்கள்.
கால்களைக் கழுவியபடி வெள்ளம் சலசலத்தபடி ஓடிக்கொண்டே இருக் கும். சிலவேளைகளில் அந்த வெள்ளத்தில் அடித்து வரப்படும் பாம்புகள், புற்றைக் கண்டதும் அதன்மீது பாய்ந்து ஏறும்போது போராளிகளின் கால்களில் ஏறிவிடுவதும் உண்டு. ஏறியது பாம்பென்பதை உணர்ந்து, தூக்கம் கலைந்து போராளிகள் கத்திக்கொண்டு பாய்ந்தெழுகின்ற நிகழ்வுகளும் நடக்கும்.
மழை பெய்யும் வரைதான் காட்டில் தூங்க முடியும். மழை விட்ட பின்னர் எழுந்துவிடவேண்டியதுதான். ஏனென்றால் மரத்தில் இருந்து விழுகின்ற ஒவ்வொரு நீர்த் துளியும், உடலில் விழும்போது பெரும் சுத்தியலால் அடிப்பது போன்ற வலியை ஏற்படுத்திவிடும். உலகில் இது ஒரு சித்திரவதையாகக்கூட செய்யப்படுகின்றது. ஒருவரை அசையாமல் கட்டி வைத்துவிட்டு, அவரது (தணிக்கை) யில், நீரை துளித்துளியாக விழ வைப்பார்கள். ஆரம்பத்தில் அது சுகமாகத்தான் இருக்கும். இதுவும் ஒரு சித்திரவதையா என்றே கேட் கத்தோன்றும். ஆனால் நேரம் செல்லச்செல்ல, உயிரை எடுக்கும் வலியை ஏற்படுத்தி, ஒரு கட்டத்தில் உயிரையே எடுத்துவிடக்கூடியது.
எனவே, மழைவிட்டதன் பின்னர் மரங்களின் கீழே தூங்க முடியாது. எழுந்து வெளியான பகுதியைத்தேடி உடலையும், உடைகளையும் காயவைக்கத் தொடங்கிவிடுவார்கள் போராளிகள். அவர்கள் எவ்வளவுதான் நனைந்திருந்தாலும், அவர்கள் கைகளில் இருக்கின்ற ஆயுதங்கள் மட்டும் எப்போதும் நனைந்திருக்காது. எங்கெல்லாம் பொலித்தீன் பைகள் கைகளுக்கு கிடைக்கின்றனவோ, அங்கெல்லாம் அவற்றை எடுத்துப் பாதுகாத்து வைத்திருக்கும் போராளிகள், மழை வந்தால் முதலில் தாங்கள் நனைந்துவிடுவோமா என்று யோசிப்பது கூட இல்லை, உடனடியாகவே ஆயுதங்களைத்தான் மூடிக்கட்டி பாதுகாத்துக்கொண்டு விடுவார்கள்.
இவ்வாறுதான், ஒருநாள் நன்றாக மழையில் நனைந்து போராளிகள் விறைத்துப் போயிருந்தார்கள். மாலை நேரம் என்றாலும் மழைக்காலம் என்பதால் காடு சற்று இருண்டுபோய் இருந்தது. பசிக் களைப்பு ஒருபுறமும், மழைக்குள் நனைந்துகொண்டே இருந்ததால் ஏற்பட்ட களைப்பு மறுபுறமும் என உடல் சோர்ந்து போயிருந்த போராளிகள், அங்கிருந்த பெரும் மரம் ஒன்றின் வேர்களில் வந்து அமர்ந்துகொண்டார்கள். கதைப்பதற்கு கூட தைரியமின்றி இருந்த போராளிகளில் இருவருக்கு இடையில் திடீரென வாய்த்தாக்கம் ஏற்பட்டுவிட்டது.
ஒரு போராளி, சற்று கோபமாக தனக்கு பக்கத்தில் இருந்த போராளியிடம்: “இருக்கிறதெண்டால் சும்மா இரு. இல்லாட்டி எழுந்து அங்காலை போய் இரு” என்று பேசினார். மற்றைய போராளிக்கும் கோபம் வந்திருக்க வேண்டும். “என்னத்துக்கு..?” என்று அவர் பதில் கேள்வி எழுப்பினார்.
“மனிசர் ஏலாதெண்டு இங்கை வந்து குந்தினால், வேரை ஆட்டிக் கொண்டிருக்கிறாய்” என்றார் அந்தப் போராளி.
“நான் எங்கை வேரை ஆட்டுறன்? நீங்க தான் ஆட்டுறியள்” என்று மற்றப் போராளி அதற்குப் பதிலளித்தார்.
மழைக்குள் நனைந்து (பின்பக்கமும்) விறைத்திருந்ததால் அவர்கள் தாங்கள் வேர்களில்தான் இருந்துகொண்டிருக்கின்றோம் என்று நினைத்திருந்தார்கள். ஆனாலும் அமர்ந்தபோது வேர் சற்று நசிவதுபோலவும் அவர்களுக்கு தென் பட்டது. அதன்பின்னர்தான் தாங்கள் எதில் அமர்ந்திருக்கின்றோம் என்று உற்றுப் பார்த்தார்கள். இருவரும் கத்திக்கொண்டு பாய்ந்த பாய்ச்சல் இருக்கின்றதே இன்றைக்கும் அதனை மறக்கமுடியாது.
“அட இது வேரில்லையடா, வெங்கிடாந்திப் பாம்பு (மலைப்பாம்பு)” என்று அவர்கள் கத்திக்கொண்டு பாய்ந்தபின்னர் பார்த்தபோதுதான், ஒரு மலைப்பாம்பு மரத்தின் வேரோடு அங்கு சுருண்டு படுத்திருந்தது தெரிந்தது. அதனை வேர் என்று நினைத்து இவர்கள் அதன்மேல் அமர்ந்திருந்திருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் இவர்களின் உடல் பாரத்தினால், பாம்பு தனது உடலை வளைத்து நெளித்து எழும்பியது. இவர்களுக்கு யாரோ வேரை ஆட்டுவதுபோன்று தெரிந்திருக்கின்றது. மலைப் பாம்புகள் கடிப்பதில்லை. ஆனால், ஆளையே விழுங்கி விடுவன. மழைக்குள் நனைந்து பாம்பும் சோர்ந்து கிடந்ததால் அன்றைக்கு தப்பித்துக் கொண்டார்கள்.
இன்னொருநாள் இப்படித்தான் போராளிகள் பெரும் பசியுடனும், களைப்புடனும் காட்டினுள் நடந்துகொண்டிருந்தார்கள். முல்லைத்தீவு மதவாளசிங்கம்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது மரம் வெட்டும் சத்தம் கேட்கின்றது. இராணுவத்தினர் புதிதாக முகாம்களை அமைத்தால் தங்களின் அரண்களைப் பலப்படுத்த மரங்களைத் தறிப்பார்கள். எனவே, அப்பகுதியில் இராணுவத்தினர் புதிய முகாம் எதையாவது அமைக்கின்றார்களா என்ற கேள்வியுடன், சத்தம் வந்த திசையில் மெதுமெதுவாகச் சென்று பார்த்து வருமாறு இரு போராளிகளை பால்ராஜ் அண்ணை அனுப்பிவைத்தார். அவர்கள் நெருங்கிச் சென்று பார்த்தபோது, யாரோ இரு பொது மக்கள் விறகுக்காக மரம் தறிப்பது தெரிந்தது. பால்ராஜ் அண்ணைக்கு தெரிந்தவர்களாகப் படவே அவர்கள் நின்றுகொண்டிருந்த இடத்திற்குச் சென்று கதைத்துக் கொண்டிருந்தார். அவர்களில் ஒருவர் தங்களிடம் றொட்டி இருப்பதாகவும் சாப்பிடுங்கள் என்றும் போராளிகளைக் கேட்டார்.
பெரும் பசியுடன் இருந்த போராளிகளின் முகத்தில், நல்லதொரு சாப்பாடு கிடைத்துவிட்டதென்ற பெரும் மகிழ்ச்சி. ஆனால், பால்ராஜ் அண்ணை “எல்லோரும் இப்பதான் சாப்பிட்டு வருகின்றோம்” என்று கூறி அவர்களிடம் இருந்து அதனை வாங்க மறுத்தபோது, ‘சூரியன் மறைந்த தாமரையாட்டம்’ போராளிகளின் முகங்கள் சுருங்கியதைப் பார்க்க வேண்டுமே. ஆனாலும், அவர்கள் விடாப்பிடியாக சாப்பிடுமாறு வற்புறுத்தியபோது சரி உங்களுக்காக சாப்பிடுகின்றோம் எனக் கூறி எல்லோருக்கும் றொட்டியை வாங்கிக்கொடுத்தார் பால்ராஜ் அண்ணை. ஒரு சில விநாடிகளுக்குள் அத்தனை றொட்டிகளும் எப்படித்தான் தீர்ந்து காலியானதோ தெரியவில்லை. போராளிகளின் சாப்பிட்ட வேகத்தைப் பார்த்த, மரந்தறித்த அந்த இருவருக்கும் எல்லோரும் பசியோடு இருக்கின்றார்கள் என்பது புரிந்திருக்க வேண்டும்.
“வீட்டுக்குப்போய் இன்னும் றொட்டி சுட்டுக்கொண்டு வரட்டுமா?” என்று கேட்டார் ஒருவர். ஆனால் அவர்களின் நிலைமையை புரிந்துகொண்ட பால்ராஜ் அண்ணை, வேண்டாம் என்று அவர்களைத் தடுத்ததுடன், அவர்கள் தன்னிடம் இருந்த கொஞ்சப் பணத்தை எடுத்து கொடுத்து பிள்ளைகளுக்கு எதாவது வாங்கிக் கொடுங்கள் என்று கூறிவிட்டுச் சென்றார். பணத்தை வாங்கிய அவர்களுக்கு பெரும் சந்தோசம்.
அங்கிருந்து நடக்கத் தொடங்கியதன் பின்னர் பால்ராஜ் அண்ணை சொன்னார், “அவர்கள் மிகவும் கஷ்டப்பட்டவர்கள். விறகு வெட்டித்தான் குடும்பத்தை நடத்தவேண்டியவர்கள். அவர்களிடம் இருந்த றொட்டியையும் நாங்கள் வாங்கிச் சாப்பிட்டு விட்டோம். ஏற்கனவே அவர்கள் கஷ்டத்தில் இருக்கும்போது, அவர்களுக்கு நாங்களும் கஷ்டத்தைக் கொடுக்கக்கூடாது. அதனால்தான் அவர்களுக்கு பணம் கொடுத்தேன்” என்றார். போர்க் களத்தில் இரும்பாய் இருக்கும் பால்ராஜ் அண்ணை, மக்களின் துயரத்தைப் பார்த்தால் இளகிப்போவார் என்பதற்கு இது இன்னொரு உதாரணம்.
– பசிலனின் இன்னொரு போர்முகம் பால்ராஜ்