×

“ஐதீகத்தை உடைப்போம்”

“ஐதீகத்தை உடைப்போம்”
~~~~~~~~~~~~~~~~~~~~~

சிங்கள பௌத்தர்கள் ஒரு பொய்யான ஐதீகத்தின் (MYTHOLOGY) மூலம் தம் மத்தியில் தேசிய உணர்வை பெறுவதுடன் மட்டுமல்லாமல் ஏனைய இனங்கள் மீது சிங்கள பௌத்த மேலாண்மையை நிலைநாட்டுகின்றனர்.

ஐதீகங்கள் ஒரு போதும் வரலாறு ஆகிவிடாது. ஆனால் இங்கு ஐதீகத்தை மையமாகக் கொண்டு அவர்கள் ஒரு வரலாற்றைக் கட்டியெழுப்பியுள்ளனர். இது பல்வகை ஊடகங்கள் ஊடாக சாதாரண பாமர சிங்கள மக்கள் மத்தியில் ஆழமாக வேரூன்றி விட்டது. ஒரு சில சிங்கள வரலாற்று ஆய்வாளர்கள் தமது அறிவியல் நேர்மையுடன் வரலாற்று உண்மைகளை கண்டறிந்து சிங்கள பௌத்த ஐதீகத்தை நிராகரித்து உள்ளார்கள் என்பதும் உண்மைதான். ஆனால் இந்த வரலாற்று ஆசிரியர்களின் கருத்துக்கள் ஆங்கிலத்தில் மட்டுமே எழுதப்பட்டுள்ளன. சிலநூறு பிரதிகள் மட்டுமே அச்சிடப்படுகின்றன. அத்துடன் இந்த நூல்களைக் கூட துறைசார்ந்த சில விரல் விட்டு எண்ணக் கூடிய படிப்பாளிகள் மட்டுமே அறிந்து கொள்கின்றனர். ஆங்கிலம் தெரிந்த அனைவரும் கூட இவற்றையெல்லாம் படிப்பதென்றில்லை.

அதேவேளை அரசும் பெளத்த நிறுவனமும் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தைப் பேணுவதில் அக்கறையுடன் காணப்படுகின்றன. அரசியல் தீர்மானங்கள் அனைத்தும் பேரினவாத கண்ணோட்டத்துடன் பார்க்கப்படுகின்றன. வெகுசனத் தொடர்புச் சாதனங்கள் இவ்வகையிலேயே பயன்படுத்தப் படுகின்றன.

பாடவிதானங்கள் கூட சிங்கள பௌத்த மேலாதிக்கக் கருத்துக்களையே நிலை நிறுத்தக் கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றினால் மக்கள் மத்தியில் நிலைபெற்ற கருத்தாக பொய்யான ஐதீகம் உண்மை வரலாறு என்ற வடிவத்தில் இடம் பெற்றுவிட்டது.

உண்மையில் இந்தப் பொய்யைக் களைவது என்பது ஓர் அரசியல் கலாச்சாரப் போராட்டமாகும். மேலும் பெரும்பான்மையான சிங்கள புத்திஜீவிகள் கூட அரசிடம் உத்தியோக உயர்வு, உயர் கல்வி வாய்ப்பு, வெளிநாட்டு பிரயாண வசதிகள் என்பவற்றிற்காக தங்கியிருக்கின்றார்கள். இதனால் அரசைத் திருப்புவதற்காக இத்தகைய பொய்யான ஐதீகங்களை நியாயப்படுத்துகின்றார்கள்; வளர்த்து வருகின்றார்கள். அதாவது இங்கு கவனிக்க வேண்டிய விடயம் என்னவெனில் பொய்யான வரலாற்று ஐதீகம் வளரக்கூடிய ஓர் அரசியல் சமூக நிர்மாணிப்பு இருக்கிறது என்பதேயாகும். அதாவது அரசியல் கட்டுமானம் பொய்யை வளர்ப்பதற்கான கட்டுமானமேயாகும்.

உதாரணமாக, எவ்வாறு அரச செய்தி ஸ்தாபனங்களும் அமைப்புகளும் சமகால செய்திகளை அப்பட்டமான பொய்யாகச் சொல்கின்றனவோ அதைவிட மோசமாக கடந்த கால விடயங்கள் பற்றி அவற்றால் பொய் சொல்ல முடியும்.

இவ்வகையில் இந்தப் பொய்யான ஐதீகத்தின் அடிப்படையிலான வரலாற்றிற்கு எதிரான போராட்டம் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் ஒரு முக்கியமான அம்சமாகும்.

இப்பொய்யில் இரட்டை அம்சங்கள் உள்ளன. ஒன்று சிங்கள மக்கள் மத்தியில் பொய்யான வரலாற்றின் மூலம் அவர்களை தேசிய எழுச்சிக்கு உள்ளாக்குவது. இரண்டாவது அப்பொய்யை தமிழர்கள் மத்தியில் கூறி தமிழர்கள் வரலாற்றுரீதியில் பலவீனமானவர்கள் என்ற மனோநிலையை ஏற்படுத்துதல்.

இந்தப் பொய்யின் முதலாவது அம்சத்திற்கு உடனடியாக எதிராக நாம் பாரிய வெற்றியை அடைய முடியாது. ஆயினும் தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ள பொய் வரலாற்றில் இருந்து அவர்களை விடுவிக்க முடியும்.

இந்தநிலையில் தமிழ் மக்கள் தமது உண்மையான வரலாற்றையும் இலங்கைத் தீவின் உண்மையான வரலாற்றுப் போக்கையும் கற்று அறிந்து கொள்ளுதல் தமிழ்த் தேசிய நிர்மாணிப்பிற்கான முன் நிபந்தனை என்பதில் சந்தேகமில்லை.

இவ்வகையில் சிங்கள வரலாறு கூறும் ஐதீகக் கதைகளை அதிலுள்ள முற்றுமுழுதான பொய்களை ஆதாரபூர்வமாக அம்பலப்படுத்துவதுடன் தமிழ் மக்களை அவர்களின் உண்மை வரலாற்றுப் போக்கில் சரிவர அடையாளம் காட்டுவதும், கற்றறிந்து கொள்வதும் அத்தியாவசியமானதுமாகும்.

-எரிமலை ஆடி 1992.

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments