
பிரிகேடியர் சுப தமிழ்ச்செல்வன் அண்ணாவின் பிறந்தநாள் இன்று
போரின் உச்சநெருக்கடியிலும்கூட, எதிரியின் பொருண்மியத் தடைகளின் போதும்கூட பிச்சை எடுக்கும் ஒருவரைக் கூட எம்மண்ணில் காணமுடியாதபடிக்கு சமூக மட்டத்தில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதென்றால் அரசியல் வேலைத்திட்டங்களின் வீச்சைப் புரிந்து கொள்ளலாம்.
எமது அரசியல் வேலைத்திட்டங்களின் பின்னணியில் தலைவரது சிந்தனையும், வழிநடத்தலும் இருந்தது என்பது உண்மைதான். இன்னும் சொல்லப்போனால் தலைவரது எண்ணங்களின் செயல்வடிவங்கள்தான் இவை என்பதும் உண்மைதான்; ஆனாலும் தலைவரின் எண்ணங்களையும், வழி நடத்தலையும் புரிந்து, தெளிந்து செயலில் நடைமுறைப் படுத்துவதற்கான அர்ப்பணிப்பு, அறிவு, திறமை, ஆளுமை என்பன ஒருங்கே பெற்ற ஆற்றலோனாகத் தமிழ்ச்செல்வன் மிளிர்ந்து, செயற்பட்டான் என்பதே உண்மை.
விடுதலைக்கான அரசியல்பணி ஒருவகையில் சவாலானது. இறைமையுள்ள நாடு என்ற சொற்பதமானது ஆக்கிரமிப்பாளர்களது எல்லாக் கொடுமைகளுக்குமான கவசமாக அமைந்துவிடும், அதேவேளை விடுதலை வேண்டிப் போராடும் இனத்தின் தற்காப்பிற்கான போராட்டமானது பயங்கரவாதமாக முறையிடப்படும்இராசதந்திர அழுத்தத்திலிருந்து நாகரிகமற்ற நேரடி அச்சுறுத்தல்வரை பல பேச்சுமேசைகளில், பல படிமுறைகளில் இந்தியா எம்மை பணியவைக்க முயன்ற படிப்பினைகளையும், சிங்கள அரசு பேச்சுக்களின்போது எம்மை ஏமாற்ற முயலும் தொடர்ச்சியான அணுகுதல் பற்றியும் தலைவரிடமும். தேசத்தின்குரல் பாலா அண்ணை அவர்களிடமும் நிறையவே கற்றறிந்து புடம்போடப்பட்டவனாக இருந்தான் தமிழ்ச்செல்வன்.எம்மக்கள் மத்தியில் இருந்த மெத்தப் படித்தவர்களது வலிமையற்ற பேச்சுக்கள், அதாவது சரணாகதிக்கான சமாளிப்புகள் இராசதந்திரமாகக் கூறப்பட்டது ஒருகாலம். தமது இனத்தையே காட்டிக்கொடுப்பதை இராசதந்திரமாகக் கூறப்பட்டது அடிமைகொள்ளவைக்கும் ஆக்கிரமிப்பாளர்களுக்குத் துணைபோய் இன்னொருபக்கம்.

விடுதலைக்கான நியாயத்தை விட்டுக்கொடுக்காமல் இருப்பதிலும் சரி, அதேவேளை உரையாடலைச் சிறப்பாக முன்னெடுத்து சபையின் நிலையை தனது ஆளுமைக்குள் எடுப்பதிலும் சரி தமிழ்ச்செல்வன் தேர்ந்த இராசதந்திரியாகச் செயற்பட்டான்.
மறுத்துரைக்க முடியாதபடி முன்வைக்கப்படும் அவனது கருத்துக்களுடன், உலகம் முழுவதும் அறியப்பட்டுவிட்டதான அவனது புன்சிரிப்பும் சேர்ந்து அவனைச் சந்திப்பவர்களைக் கட்டிப்போடும். ஊடகங்களையும், ஊடகவியலாளர்களையும் அவன் கையாண்ட விதமும்கூட தேர்ந்துமுதிர்ந்த அரசியல் தலைவனாக அவனை உலகிற்கு அடையாளம் காட்டிநின்றது.
எமது மக்களின் துயரங்களைக் கருத்திலெடுக்கக்கூடாது என்ற தீர்மானமான முன்கூட்டிய முடிவுடன் வருபவர்களைத் தவிர மற்றெல்லோரும் தமிழ்ச்செல்வனின் சொல்வன்மையினால் கட்டுண்டு எம் நியாயங்களை உணர்ந்து சென்றனர் என்பதே உண்மை..
தலைவர் உணர்வூட்டியது பாதி மற்றும் பாலா அண்ணையிடம் கேட்டறிந்ததும், தானாக கற்றுணர்ந்ததும் மீதியாக முதிர்ந்த அரசியல்தலைவனாக, இராசதந்திரியாக, பேச்சுவார்த்தையாளனாக தமிழ்ச்செல்வன் பரிணமித்தான். தமிழ்ச்செல்வனது இராசதந்திரத் திறனானது அவனது சிறப்பாற்றலினதும், நேர்மையான விடுதலைப் பற்றினதும் வெளிப்பாடு என உறுதியாகக் கூறலாம்.
ஈழத்தமிழினத்து வரலாற்றில் மட்டுமல்ல, ஒடுக்கப்பட்டு விடுதலை வேண்டிநிற்கும் இனங்களின் சார்பில் கூட தமிழ்ச்செல்வனது இராசதந்திரத் திறனும், அணுகுதலும் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியதாகும்.
பொட்டு அம்மான்.
”தமிழர் புலனாய்வு நாயகன் பொட்டுஅம்மான் – எழுத்தும் பேச்சும்” நூலிலிருந்து.