×

லெப்.கேணல் திலீபன் ஆக்கிரமிப்பு இராணுவத்திற்கு எதிராக அறப்போர் தொடுத்த மைந்தன்.

லெப்.கேணல் திலீபன் ஆக்கிரமிப்பு இராணுவத்திற்கு எதிராக அறப்போர் தொடுத்த மைந்தன்.

15-09-1987 காலை மணி 8.30, தமிழீழப் போராட்ட வரலாற்றில் வைரத்தூரிகை கொண்டு பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய தியாக நாள். ஆம், தமிழீழ விடுதலைப்புலிகளின் யாழ் மாவட்ட அரசியல் பிரிவுப் பொறுப்பாளரும், தமிழினத்தின் விடிவெள்ளியுமாகிய லெப்.கேணல் திலீபன் (இராசையா பார்த்தீபன்) அவர்கள், நல்லூர் வடக்கு வீதியிலுள்ள ‘கந்தன் கருணை’ இல்லத்தின் முன், அமைதிப்படை என்ற பெயரில் வந்த, இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்திற்கு எதிராக அறப்போர் தொடுத்த பொன் நாள்.
இந்நாளில் தான் திலீபன் அவர்கள் தமிழீழ மக்களினதும், தமிழர் தாயகத்தினதும் இழந்த உரிமைகளை மீட்கும் நோக்கமாக, இந்திய மக்களினதும் கவனத்தை ஈர்க்கும் வகையில், தமிழீழ விடுதலைப் புலிகளின் நியாயமான ஐந்து கோரிக்கைகளை முன் வைத்துச் சாகும் வரை உண்ணாவிரதப்போராட்டத்தை ஆரம்பித்தார்.

  1. பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் அல்லது சிறைகளில் உள்ளோர் விடுவிக்கப்பட வேண்டும்.
    2. புனர்வாழ்வு என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் மேற்கொள்ளப்படும் சிங்களக் குடியேற்றங்கள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும்.
    3. இடைக்கால அரசு நிறுவப்படும் வரை’புனர்வாழ்வு’ என்று அழைக்கப்படும் சகல வேலைகளும் நிறுத்தப்பட வேண்டும்.
    4. வடக்கு – கிழக்கு மாகாணங்களில் பொலிஸ் நிலையங்கள் திறக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும்.
    5. இந்திய அமைதிப் படையின் மேற்பார்வையில் ஊர்க்காவற்படை என அழைப்படுவோருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் திரும்பப் பெறப்பட்டு தமிழ்கிராமங்கள், பள்ளிக்கூடங்கள் ஆகியவற்றில் குடி கொண்டுள்ள இராணுவ பொலிஸ் நிலையங்கள் மூடப்படல் வேண்டும். ஆகியனவே விடுதலைப் புலிகளினால் முன் வைக்கப்பட்ட கோரிக்கைகளாகும்.

இக்கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்று. விடுதலைப்புலிகளினால் 13.09.1987 அன்று இந்தியத் தூதுவரின் கையில் கிடைக்கக் கூடியதாக அனுப்பி வைக்கப்பட்டது. அவரின் பதிலுக்காக 24 மணித்தியால அவகாசமும் கொடுக்கப்பட்டது.

ஆனால் 15.09.1987 வரை தூதுவரிடமிருந்து எந்த்ப பதிலும் கிடைக்கவில்லை. அதனாலேயே சாகும் வரை உண்ணாவிரதமும், மறியல் போராட்டமும் நடாத்துவதற்காக விடுதலைப்புலிகளினால் தீர்மானிக்கப்பட்டது. அதன் பிரகாரமே திலீபனின் தியாகப் பயணம் ஆரம்பித்தது.

இந்திய வல்லாதிக்கத்தின் கண்களைத் திறப்பதற்காக திலீபன் மேற்கொண்ட அத் தியாகப் பயணத்தில் 12நாட்கள் ஒரு சொட்டு நீர் கூட அருந்;தாமல், தன்னை வருத்தி தமிழ் பேசும் மக்களின் விடுதலைத் தீயைக் கொழுந்து விட்டு எரியச் செய்தவேளையில் 26.09.1987அன்று, ஈக(தியாக)ச் சாவு அடைந்தார் என்பது, தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்ட வரலாற்றின் முக்கிய பதிவுகளில் ஒன்றாகும். அதுவே ஜனநாயகத்தின் காவலன் என்று தன்னைப் பெருமைப்படுத்திக் கொண்ட, கொள்கின்ற இந்திய அரசின் கறை படிந்த வரலாறாக மாறியது.

அகிம்சைப் போராட்டத்திற்கே ஆணிவேராகத் திகழ்ந்த அண்ணல் காந்தி அடிகள் கூட, தனது உண்ணாவிரதப் போராட்டங்களை நீராகாரம் அருந்தித்தானே நடத்தினார். ஏன்? ஜரிஷ் போராட்ட வீரன் ‘பொபி சாண்ட்ஸ்’ கூட நீராகாரம் அருந்தித் தான், சிறைக்குள் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டார். ஆனால் நம் தியாக மைந்தனோ, நல்லூர்க் கந்தன் வீதிகள் மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிய, மக்கள் எல்லோரும் கண்ணீர் சிந்தியபடி விழித்திருக்க, மருத்துவ வசதிகளையும் ஏற்காது நீரும் அருந்தாது உண்ணாவிரதம் இருந்து உலகில் புதிய அத்தியாயமொன்றை சிரஸ்டித்து விடுதலைப் போராட்டத்திற்கு மட்டுமல்ல, எம் இனத்திற்கே பெருமை சேர்த்தார். திலீபன் தியாகப் பயணத்தினால், மக்கள் புரட்சியொன்று வெடித்தது. இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்தின் ஆயுத மிரட்டலுக்கெதிராக, இவ் உண்ணாவிரத நிகழ்வு, தமிழீழ மக்களை விழிப்படைய வைத்தது. தேசிய விடுதலைப் போராட்டத்திற்கான எழுச்சியை வளர்த்தது. திலீபனின் அறப்போராட்டதிற்கு முன் இந்திய இராணுவமும் இந்திய அரசும் தோல்வி கண்டன. இந்திய இராணுவத்திற்கெதிராக மக்களினது போராட்டம் வெற்றிபெற, திலீபன் 12 நாள் இறுதிப்பயணங்கள் உறுதுணையாக நின்றன.

திலீபனின் அறப்போராட்டமானது, தமிழீழம் எங்கும்  பரவி புரட்சிகரமான உணர்வலைகளை தோற்றுவித்தது. குறிப்பாக படுகொலைக்கெதிராக அன்னையர் முன்னணி கொதித்தெழுந்தது. ‘மக்களுக்காக நான் மரணிக்கத் தயார்’ என்று முழக்கமிட்டு அதனை நீருபித்துக்காட்டிய திலீபன் வழியில், அன்னை பூபதியும் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து 31 ஆம் நாள், தமிழீழ மண்ணுக்கு வித்தானார். என்பதும், தமிழீழ தேசிய விடுதலைப் போராட்ட வரலாற்றின் முக்கிய பதிவாகும்.
இந்தியப் படைகளின் ஆயுத மிரட்டல்களின் மத்தியிலும் மக்கள் புரட்சி வெடிக்கட்டும்…என்ற திலீபனின் கனவை அன்னை பூபதி அவர்கள் நனவாக்கிப் பெருமை சேர்த்தார். திலீபன் விட்டுச் சென்ற பணிகளை தமிழீழ மக்கள் ஒன்றிணைந்து சுமக்கத் தொடங்கி விட்டனர். அன்று வெடித்த மக்கள் புரட்சியானது, இந்திய அக்கிரமிப்பு இராணுவ வெளியேற்றத்துடன் மட்டும் நின்று விடவில்லை. சிறீலங்கா இராணுவத்துடனான 2ம் கட்ட ஈழப்போரில் அது புயலாக வீசி வருகின்றது.
திலீபனின் மறைவைத் தொடர்ந்து தமிழ்த் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் தமிழீழ மக்களுக்கு விடுத்த செய்தி பின்வருமாறு.

‘எமது விடுதலை இயக்கம் எத்தனையோ அற்புதமான தியாகங்களைப் புரிந்திருக்கிறது. வீரகாவியங்களைப் படைத்திருக்கிறது. அர்ப்பணிப்புக்களைச் செய்திருக்கிறது. இவை எல்லாம் எமது ஆயுதப் போராட்ட வரலாற்றில் நாம் ஈட்டிய வீரசாதனைகள் ஆனால், எனது அன்பான தோழன் திலீபனின் தியாகமோ வித்தியாசமானது, வியக்கத்தக்கது, எமது போராட்ட வரலாற்றில் புதுமையானது. சாத்வீகப் போராட்டக் களத்தில் தன்னைப் பலிகொடுத்து, ஈடு இணையற்ற ஒரு மகத்தான தியாகத்தைத் திலீபன் புரிந்தான். அவனது மரணம் ஒரு மாபெரும் வரலாற்று நிகழ்ச்சி, தமிழீழப் போராட்ட வரலாற்றில் ஒரு புரட்சிகரமான திருப்பத்தை ஏற்படுத்திய நிகழ்ச்சி. தமிழீழத் தேசிய ஆன்மாவைத் தட்டி எழுப்பிய நிகழ்ச்சி. பாரத நாட்டைத் தலைகுனிய வைத்த நிகழ்ச்சி. உலகத்தின் மனச்சாட்சியை சீண்டிவிட்ட நிகழ்ச்சி.

திலீபன் யாருக்காக இறந்தான்? எதற்காக இறந்தான்? அவனது இறப்பின் அர்த்தமென்ன? அவனது இறப்பு ஏன் ஒரு மகத்தான நிகழ்;ச்சியாக, மக்கள் எல்லோரையும் எழுச்சி கொள்ளச் செய்த ஒரு புரட்சிகர நிகழ்ச்சியாக அமைந்தது,?
திலீபன் உங்களுக்காக இறந்தான். உங்கள் உரிமைக்காக இறந்தான். உங்கள் மண்ணுக்காக இறந்தான். உங்கள் பாதுகாப்பிற்காக, உங்கள் சுதந்திரத்திற்காக உங்கள் கௌரவத்திற்காக இறந்தான்.

தான் நேசித்த மக்களுக்காக, தான் நேசித்த மண்ணுக்காக, ஒருவன்  எத்தகைய உயர்ந்த, உன்னத தியாகத்தைச் செய்யமுடியுமோ அந்த அர்ப்பணிப்பைத் தான் அவன் செய்திருக்கிறான்.
ஒரு உயிர் உன்னதமானது என்பதை நான் அறிவேன். ஆனால் உயிரிலும் உன்னதமானது எமது உரிமை, எமது சுதந்திரம், எமது கௌரவம்.

திலீபன் ஒரு இலட்சிய நெருப்பு
நான் திலீபனை ஆழமாக நேசித்தேன். உறுதிவாய்ந்த ஒரு இலட்சியப் போராளி என்ற ரீதியில் அவன் மீது அளவு கடந்த பாசம் எனக்குண்டு. அவன் துடி துடித்துச் செத்துக் கொண்டிருக்கும் பொழுதெல்லாம் என் ஆன்மா கலங்கும். ஆனால் நான் திலீபனை ஒரு சாதாரண மனிதப் பிறவியாகப் பார்க்கவில்லை. தன்னை எரித்துக் கொண்டிருக்கும் இலட்சிய நெருப்பாகவே நான் அவனைக் கண்டேன். அதில் நான் பெருமை கொண்டேன். இலட்சிய உறுதியில் உச்சக்கட்டமாக திலீபன் தன்னை அழித்துக்கொண்டான். அவன் உண்மையில் சாகவில்லை. காலத்தால் சாகாத வரலாற்றுப் புருசனாக அவன் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

திலீபனின் மரணம் குறித்து இந்தியா ஆழ்ந்த கவலை தெரிவிக்கிறது. இது அர்த்தமற்ற சாவு என இந்தியத்தூதுவர் கூறியிருக்கிறார். தமது உறுதி மொழிகளை நம்பியிருந்தால் திலீபன் உயர் தப்பியிருப்பான் என்று சொல்லியிருக்கிறார். ஆனால், உண்மையில் நடந்தது என்ன? நடந்து கொண்டிருப்பது எனன? என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
எமது உரிமைகள் வழங்கப்படும், எமது மக்களுக்கும் எமது மண்ணுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும் தமிழ் மக்கள் தமது பாரம்பரிய தாய்ப்பூமியில், தம்மைத் தாமே ஆளும் வாய்ப்பு அளிக்கப்படும். இப்படியெல்லாம் பாரத அரசு எமக்கு அளித்த வாக்குகளை நம்பி, நாம் எமது ஆயுதங்களைக் கையளித்தோம். எமது மக்களினதும், மண்ணினதும் பாதுகாப்பை இந்தியாவுக்குப் பொறுப்பளித்தோம்.

-தமிழீழ தேசியத் தலைவர்.

 

 

Arappor Thoduththa Mainthan

ஈகைச்சுடர் லெப்டினன்ட் கேணல் திலீபன்

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments