
1987ம் ஆண்டு ஆவணி மாதம் 2ம் திகதி இந்தியாவில் இருந்து தலைவருடன் களம் திரும்பிய கிட்டு
1987ம் ஆண்டு ஆவணி மாதம் 2ம் திகதி இந்தியாவில் இருந்து தலைவருடன் களம் திரும்பிய கிட்டு இந்திய தமிழீழ யுத்தம் ஆரம்பமாகு முன்னர் மீண்டும் இந்தியா திரும்பியிருந்தார். அதனால் யுத்தம் ஆரம்பமாகிய போது அவர் யுத்த முனையில் நிற்கவில்லை.
இந்திய தமிழீழ யுத்தம் உக்கிரமாக நடைபெற்ற காலத்தில் தளபதி கிட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். எனினும் வீட்டுக் காவலில் இருந்த வண்ணம் இவ் யுத்தத்தினை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்குடனான சமாதான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தார்.
இச்சமாதான முயற்சிகளில் ஈடுபட்ட தளபதி கிட்டு இந்திய அரசின் நேர்மையற்ற சமாதான நாடகங்களினால் எதுவித பயனையும் அடையமுடியாதவராய் தோல்வியினைத் தழுவினார். இது தொடர்பாக பின்னர் ஒரு தடவை என்னிடம் கூறும் போது, “தமிழ் மக்களுடைய அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய வகையில் இந்திய அரசுடன் சமாதானம் பேசமுடியும் என்ற நம்பிக்கை தலைவருக்கு இருக்கவில்லை. இருந்தும் எனது முயற்சிக்குத் தலைவர் தடையாக இருக்கவில்லை. இறுதியில் தலைவரின் கூற்றுக்களே உண்மை என்பதனை எனது சமாதான முயற்சி எடுத்துக் காட்டியது” எனக்குறிப்பிட்டார்.
இந்தியாவில் இருந்த காலத்தில் தளபதி கிட்டுவும் ஏனைய போராளிகளும் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தாம் குற்றம் செய்திருந்தால் அவற்றை வெளிப்படுத்த வேண்டும் அல்லது தமிழீழத்திலுள்ள தமது போராளிகளுடன் தம்மைச் சேர்ப்பிக்கவேண்டும் எனக் கோரி தளபதி கிட்டு சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டார்.
இதன் விளைவாக தளபதி கிட்டுவும் ஏனைய போராளிகளும் இந்தியாவினால் தமிழீழம் அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு தளபதி கிட்டுவும் அங்கவீனமுற்ற ஒரு சில போராளிகளும் (எண்ணிக்கை சரியாக நினைவில் இல்லை) விடுவிக்கப்பட ஏனையோர் ஈழமண்ணின் இந்தியச் சிறைகளில் அடைக்கப்பட்டனர்.
தளபதி கிட்டு விடுதலை செய்யப்பட்டதிலும் ஒரு சதி உள்ளது. அப்போது கைக்கூலிகளாக இருந்து அட்டகாசம் புரிந்து வந்த EPRLF இன் தலைமை அலுவலகம் இருந்த ‘அசோகா’ ஹோட்டலில் இருந்து சில யார் தூரத்திலேயே யாழ். வைத்தியசாலைக்கு முன்பாக தளபதி கிட்டுவும் அவருடன் விடுதலை செய்யப்பட்ட ஏனைய போராளிகளும் இந்தியப் படையினரால் இறக்கிவிடப்பட்டனர். தாம் இறக்கிவிட்டுச் செல்ல EPRLF இனர் இவர்களைப் பலிகொள்ளட்டும் என்ற எண்ணம் இந்திய தரப்புக்கு இருந்திருக்கலாம். (ஏனெனில் வழமையாக கைதிகளை விடுதலை செய்யும்போது மக்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகளிடம் ஒப்படைக்கும் பழக்கம் இருந்தது. தளபதி கிட்டுவின் விடயத்தில் இந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை.)
ஆனால் யாழ் வைத்தியசாலை இணைப்பதிகாரி நச்சினார்க்கினியார் உட்பட மக்கள் அவரின் கவசமாயினர். தளபதி கிட்டு மீண்டும் போராளிகளுடன் இணைந்துகொண்டார்.
அந்தத் தடவை மக்கள் நடுவே இந்தியச்சதி தோல்வியில் முடிந்தது.
இத்தடவை அலைகடல் நடுவே…
1989ம் ஆண்டு தளபதி கிட்டு லண்டன் வந்துவிட்டார் என்ற சேதி கேட்டு அவருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டேன். போராட்டத்தின் நிலை குறித்து நிறையவே பேசினார். 1987ம் ஆண்டின் பின், ஏறத்தாழ இரண்டு வருடங்களின் பின் அவருடன் உரையாடக் கிடைத்த சந்தர்ப்பம் இது. அவரது பார்வை நன்கு விசாலமடைந்திருந்ததை அவ் உரையாடலில் நான் உணர்ந்து கொண்டேன்.
தளபதி கிட்டுவின் சர்வதேசப் பணி மிகவும் முக்கியம் வாய்ந்தது. 1990ம் ஆண்டு யூன் மாதம் 11ம் திகதி வெடித்த இரண்டாம் கட்ட ஈழப்போரின் பின், சர்வதேச சமாதான முயற்சிகள் தொடர்பாக புலிகள் தரப்புடன் தொடர்புகொள்ள விரும்பிய சர்வதேச அமைப்புக்கள், பிரமுகர்கள் அனைவருக்கும் அவரது தொடர்பு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. சமாதான முயற்சி தொடர்பான ஊக்கத்தினையும் அளித்தது.
தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுக்கொள்வதற்கான செயற்பாடுகள் குறித்து தளபதி கிட்டு மிகுந்த ஊக்கம் செலுத்தினார். இதற்குப் போராளிகள் தரப்பிலிருந்து ஆற்றவேண்டிய பணிகள் பற்றிய எண்ணங்கள் என்றும் இவரது நெஞ்சிலே தவழ்ந்துகொண்டிருந்தன. மீண்டும் ஒரு சமாதான முயற்சி ஏற்படின் அதில் இராஜதந்திர வெற்றியினை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் ஆழமான பார்வை
அவருக்கு இருந்தது. அதற்கான செயற்திட்டங்களும் அவரிடம் இருந்தது.
சர்வதேச நாடுகளின், அமைப்புகளின் தொடர்புகள் மட்டுமன்றி புலம் பெயர்ந்து வாழும் தமிழர் சமூகத்தினை தமிழீழ விடுதலைப் போராட்டத்துடன் இணைப்பதிலும் தளபதி கிட்டு முக்கிய கவனம் செலுத்தினார். மேலைத் தேசங்களின் தொழில்நுட்பங்களையும், வளங்களையும் ஈழ மண்ணுக்கு பொருத்தமான வகையில் பிரயோகித்து தமிழீழத்தின் அபிவிருத்தியினைத் துரிதமாக்கவேண்டும் என்பதில் அவருக்கு மிகுந்த அக்கறை இருந்தது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இணைக்கக்கூடிய அனைவரையும் இணைத்து செயற்படவேண்டும் என்பதில் அவருக்கு மிகுந்த ஆவல் இருந்தது. பல்வேறு துறைகளிலும் திறமை மிகுந்தவர்களிடம் அவருக்கு மிகுந்த மரியாதை இருந்தது. தமிழீழ நாடக நெறியாளர்களில் முதன்மையான இடம் வகிக்கக்கூடிய தாசீசியஸ் அவர்களிடம் தளபதி கிட்டு வைத்திருந்த மதிப்பினையும் மரியாதையையும் இதற்கு உதாரணமாகக் கூறலாம். இதனை அவருடன் கூட இருந்த காலங்களில் என்னால் உணர முடிந்தது.
சர்வதேச செயற்பாடுகளில் ஈடுபட்டு சர்வதேச அரசியலின் நெளிவு சுழிவுகளை அனுபவ ரீதியாக உணர்ந்து கொண்டவராக, சர்வதேச நாடுகளின், அமைப்புக்களின் ஆலோசனைகளை உள்ளடக்கிய ஒரு சமாதான முயற்சியின் தூதுவராக தமிழீழம் திரும்பி தலைவருடனும் ஏனைய தளபதிகளுடனும் கலந்துரையாடி, தமிழீழ மக்களின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு வழிகோலவேண்டும் என்று நெஞ்சம் நிறைந்த எதிர்பார்ப்புடன் சென்றுகொண்டிருக்கும்
தளபதி கிட்டு, இயக்கத்தில் இருந்தவர்கள் இயக்கத்தினை விட்டு விலகித் தனிப்பட்ட வாழ்வில் ஈடுபட்டுக்கொண்டிருந்தாலும் அவர்கள் செயற்திறன் மிக்கவர்களாக, ஒழுக்கம் மிக்கவர்களாக வாழவேண்டும் என்ற எதிர்பார்ப்பினைக் கொண்டிருந்தார். இயக்க வாழ்வு அவர்களை முழுமையான மனிதர்களாக உருவாக்கியிருக்கும் என்ற கருத்து அவரிடம் இருந்தது. இதனால் இயக்கத்தில் இருந்தவர்கள் ஏதாவது தவறு செய்தால் அவரிடம் இருந்து கூடுதலான கண்டிப்பு இருக்கும். கண்டிப்பு மட்டுமன்றி சரியான வழிமுறையுடன், அரவணைப்புடனான புத்திமதியும் அவரிடம் இருந்து வரும்.
இயக்கத்தில் இருந்து விலகியவர்கள் தொடர்பாகவும் அவரது பார்வை தெளிவாகவே இருந்தது.
“அவர்கள் இப்போது இயக்கத்தில் இருந்து விலகியிருந்தாலும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஒரு காலகட்டத்தில் அவர்கள் தம்மை அர்ப்பணிக்கத் தயாராகி களத்தில் நின்றவர்கள். அவர்களின் அச் செயற்பாட்டை அவர்கள் போராட்டத்திற்களித்த பங்களிப்பாகவே இன்றும் பார்க்கிறோம்” இவ்வாறு இயக்கத்திலிருந்து விலகியவர்கள் தொடர்பாக என்னிடம் கருத்துத் தெரிவித்தார்.
எனினும் அவ்வாறு விலகியவர்களில் பலர் வெளிநாடுகளில் போராட்டச் செயற்பாடுகளிலிருந்து ஒதுங்கியிருப்பது தொடர்பான கவலை அவரிடம் நிறையவே இருந்தது. இவ்வாறு ஒதுங்கியிருந்தவர்கள் பலரை போராட்டப் பணிகளில் ஈடுபடுத்தும் முயற்சியில் வெற்றியும் கண்டிருக்கிறார். ஆனால் தமிழீழத்தினை தனது வாழ்நாளினில் அடைந்திருந்தால் அவர் பட்டிருக்கக்கூடிய ஆனந்தத்தில்……….
எந்த ஒரு மனிதனைப் போல தளபதி கிட்டுவுக்கும் பலம், பலவீனம் இருந்திருக்கும்; இருந்தது. அவரது பலம், பலவீனம் பற்றி விவாதிப்பது எனது நோக்கம் அல்ல. கிட்டு என்கின்ற மனிதனின் பலம், பலவீனம் என்பதற்கு அப்பால், தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் கிட்டு என்னும் தலைவன் ஆற்றிய பங்களிப்புத் தொடர்பாகவும் அவரது நினைவுகள் தொடர்பாகவுமே சில பதிவுகளைச் செய்து வருகின்றேன்.
இருந்த போதும் தளபதி கிட்டு ஒரு தடவை தன்னைப் பற்றிக் குறிப்பிட்டமையினை இங்கு குறிப்பிடுதல் பொருத்தம் எனக் கருதுகின்றேன். இது இந்திய தமிழீழ மோதல் தொடர்பானது. அவர் தனது ஆளுமை குறித்து தனக்குள்ளேயே கேள்விகள் எழுப்பிக்கொண்ட தலைவர் என்பதனை உணர்த்த இது போதுமானது.
“இந்தியாவுடனான யுத்தம் ஆரம்பித்தபோது அந்த யுத்தத்திலிருந்து வெற்றிகரமாக மீளுவோம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கவில்லை. அதேவேளை இந்திய வல்லாதிக்கப் போக்குக்கு எதிராகப் போராடவேண்டியது அவசியம் என்ற உறுதியான எண்ணம் எனக்குள் இருந்தது. தலைவருக்கு இந் நெருக்கடியிலிருந்து மீள முடியும் என்பதில் உறுதியான நம்பிக்கை இருந்தது. அவரது திட்டங்களின் அடிப்படையில் செயற்பட்டு நாம் இந் நெருக்கடியிலிருந்து, பலம் பொருந்தியவர்களாக மீண்டோம். அப்போதுதான் தலைமைத்துவத்தின் முக்கியத்துவத்தினை ஆழமாக உணர்ந்துகொண்டேன். என்னால் ஒரு சிறந்த போராளியாக இருக்க முடிந்தளவுக்கு ஒரு சிறந்த தலைவனாவதற்கு இன்னும் நீண்ட வளர்ச்சி தேவைப்படும்.”
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தளபதி கிட்டு ஒரு போராளியாய், படைத்தளபதியாய், போர்த்தந்திரியாய், அரசியல் ஞானம் மிகுந்த இராசதந்திரியாய், புகைப்படக் கலைஞனாய், சித்திரக் கலைஞனாய், எழுத்தாளனாய், சிறந்த விமர்சகனாய் இவற்றிற்கும் மேலாய் எம்மைப் பொறுத்தவரையில் சிறந்த தலைவனாய்… இவ்வாறு பல தளங்களில் தனது ஆளுமையினைப் பதித்திருக்கிறார்.
அவர் ஆற்றிய பங்களிப்புக்கள் தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில், அமையப்போகும் தமிழீழத்தில் அழியாய் நினைவாய் நிலைத்து நிற்கும்.
விடுதலைப் போராட்டத்திற்கும் புலிகளுக்கும் எதிராகச் சுமத்தப்படும் குற்றச்சாட்டான ‘ஜனநாயக மறுப்பு’ என்பது தொடர்பாக தளபதி கிட்டு எழுதியிருப்பது மிகவும் முக்கியம் வாய்ந்தவையாக எனக்குத் தென்படுகிறது. அவற்றையும் குறிப்பிட்டு தளபதி கிட்டு தொடர்பான இப்பதிவுகளை முடிக்கலாம் என நினைக்கின்றேன்.
“….நாம் எல்லோருடைய சுதந்திரத்தினையும் ஜனநாயகத்தினையும் மதிக்கின்றோம்; இவர்களுடைய ஜனநாயக உரிமை எமது மக்களின் விடிவுக்கு குறுக்கே நிற்காத வரை மட்டுமே. இன்று எமது தாயகத்தில் ஓர் புரட்சி நடந்துகொண்டிருக்கின்றது. இந்நிலையில் எதிர்ப்புரட்சியாளர்களையும் துரோகங்களையும் அனுமதிக்க முடியாது. புலிகளுக்கெதிரான கருத்துக்கள் என்பது வேறு; போராட்டத்திற்கெதிரான கருத்துக்கள் என்பது வேறு. ஒரு சிலர் புலிகளை விமர்சிக்கின்றோம் எனக் கூறிக்கொண்டு போராட்டத்திற்கெதிராகவே திசைமாறிப் போவதைக் காண்கிறோம். தமிழீழ விடுதலைப் போராட்டத்தை எதிர்க்கும் ஒரு சிலர் அதை வெளிப் படையாகக் காட்டிக்கொள்ளாமல் புலிகளைத் தாக்கிக்கொள்வதனையும் காண்கிறோம். தமிழீழம் அமையட்டும் அனைவருடைய கருத்துக்களையும் அனுமதிப்போம். கட்சிகள் வேண்டுமானாலும் அமைக்கட்டும், சங்கங்கள் வேண்டுமானாலும் அமைக்கட்டும். எதை வேண்டுமானாலும் கூறிக்கொள்ளட்டும். அன்று அதை நாம் அனுமதிக்கத்தான் வேண்டும். அப்போது எந்தக் கருத்தை வைத்தாலும் விடுதலையைக் குழப்பமுடியாத நிலை இருக்கும். கருத்துக்களும் மக்கள் தீர்ப்பும் இவைகள்தான் வரலாறுகளைக் கொண்டுசெல்பவை. தமிழீழம் கிடைத்ததும் இப்படித்தான் எமது வரலாறும் நடைபோடும்….”
திலீபன் –