
காற்றை எதிர்த்துக் கொண்டு சைக்கிளை மிதிப்பது பெரும் சங்கடமாக இருந்தது
“என்ன செய்வது எங்கடை காலம் இப்பிடி இருக்கு” என மனம் சலித்துக் கொண்டான் கந்தசாமி.
கால்கள் இரண்டும் பயங்கரமாக வலித்தன. நெஞ்சில்கூட விபரிக்க முடியாத ஒரு வகை வேதனை பரவியது. வியர்வையில் குளித்திருந்த உடம்பு படபடத்தது.
கூதல் காற்று சில்லென்று வீசியது. அடிவானத்தில் சூரியன் சரிந்துகொண்டிருக்க மெல்லிருட்டின் ஊடே பனி இறங்க ஆரம்பித்திருந்தது.
நேரம் ஆறு மணி அல்லது ஆறரையாக இருக்கலாம். மாரி காலத்து சூழல் இருளை விழுங்கிக் கொண்டு வந்துவிட்டது. பெரும் மலையென சைக்கிளின் பின்புறம் கனக்கும் சுமை, அவன் களைத்துப் போனதால் முன்பை விட அதிகமாக வருத்தியது.
எத்தனை நாட்களாக இந்த ஓட்டம் நடக்கிறது. பொழுது புலரும் பொழுதில் வெறும் வயிறு கர்புர் எனச் சத்தமிட புறப்பட்டுப் போவதும் பின்னர் சுமையோடு திரும்புவதும், வழக்கமாகிவிட்டது.
சாவகச்சேரி, கொடிகாமம், பளை என்று எத்தனை இடங்களுக்கு மாறி மாறி ஓடி வீதிகள், ஒழுங்கைகள் என்று தடவித் தடவி.விறகாக, தென்னை, பனை மட்டைகளாக பொச்சு மட்டைகளாக, தேங்காய்களாக சுமையேற்றி ஓடாத ஓட்டம் ஓடி கோப்பாய் வெளி தாண்டி மருதனாமடச்சந்தி, சுண்ணாகம், மல்லாகம் வரை வரவேண்டும்.
மத்தியான வெய்யில் உடம்பைப் பொசுக்கும் நேரத்தில், சுமைகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்டால் பருத்தித்துறை துறைமுகத்திற்கு உணவுக் கப்பல்கள் வருவது போல எப்போதாவதுதான் வரும் வழியில் வியாபாரம் நடக்கும். மற்றப்படி மருதனாமடம் சந்திவரை வியாபாரம் நடக்காது.
ஒருநாள் முழுக்க சைக்கிள் அடிப்பதன் பலன் அன்றைய விற்பனையில்தான் தங்கியிருக்கும். அதன் பின்னர் ஏதாவது வயிற்றுக்குக் கிடைக்கும்.
ஒரு வடையும் கடித்து தேனீரும் குடித்து பீடியும் வாங்கி புகைத்துக் கொண்டு வீதியோரத்து மரநிழலில் ஆறி இருக்கும் போது சற்று ஆறுதலாக இருக்கும். பிறகு மீண்டும் பயணம் தொடங்க திரும்ப கால்கள் வலிக்கும்.
இப்போது போலத்தான் இருக்கின்றது; என்றாலும் ஒன்றரை வருடங்கள் ஓடிவிட்டன. நெடுநாள் குடியிருந்த சொந்த இடத்தைவிட்டு வெளியேறி மல்லாகத்தில் விரிந்து பரந்த அந்த வளவுக்குள் மொட்டையாகிப் போய்விட்ட தென்னை மரங்களின் மத்தியில் சின்னப்பிள்ளைகள் விளையாட்டுக் கட்டும் சின்னஞ்சிறு குடிசைகளில் குடியிருந்தார்கள். தலையைத் தட்டும் கூரை, சிறுமழைக்கே பயப்படும் ஓலைத்தட்டிகள் கொண்ட நெருக்கமான குடிசைகள். மிக மிக அதிகமான மனிதர்களும் நெருங்கிய மனங்களும்.
அவன் குடும்பத்தைப் போல எத்தனையோ குடும்பங்கள். எல்லை வேலி சரிந்ததுக்கு வாள்வெட்டுக்கு போனவர்களின் பரம்பரையினர் எல்லாம் ஒரே வளவுக்குள் எப்போதாவது சிறு சிறு சண்டை பிடித்தாலும் குடியிருந்தார்கள்.
அந்த வளவில் முந்தி இந்திய இராணுவம் குடியிருந்தது. ஒரு பெரிய வீடும் இருந்தது. ஆனால் கூரையும், சில பக்கத்துச் சுவர்களும் இந்திய இராணுவம் திரும்பிப் போனபோது போய்விட்டன.
அவர்கள் சூறையாடிய அமைதியோடு வளவின் பசுமையும் போயிருக்க வேண்டும். எத்தனையோ பெரிய மரங்கள் அடியோடு தறிக்கப்பட்ட அடையாளங்கள் மாத்திரம் இருந்தன .
சொந்த இடத்தைவிட்டு ஓடி வந்து முதலில் இங்கேதான் குடிசைகள் போட்டு குடியேறினார்கள்.
எல்லாக் குடும்பங்களும் இப்படியே நிவாரணத்திலும், சைக்கிளில் மூட்டைகட்டி, வியாபாரம் செய்து கிடைக்கும் வருமானத்திலும்தான் சீவியம் நடத்தின.
கந்தசாமியின் சிறுவீடு ஆலமரத்திற்கு முன்னால் இருந்தது. ஆலமரத்திற்குப் பக்கத்தில் தான் ஒரு வாசிகசாலை. எந்த நேரமும் அந்த இடத்தில் ஊர் ஆட்களின் அமளி இருக்கும். மாலை நேரங்களில் இன்னும் மும்முரமாய் இருக்கும்.
ஓலைக் கூரையும், சீமெந்துக் கற்சுவருமாக சோலையான வளவுமாக அமைந்ததுமான சூழல். பொழுது மங்கும் நேரம் வேலையை முடித்துக் கொண்டு வந்து களைப்புத் தீரக் குளித்துவிட்டு திண்ணையில் சரிந்திருக்கும் போது எவ்வளவோ சந்தோஷமாக இருக்கும். ஆனால் இப்போது எல்லாமே குழம்பிப் போய்விட்டன. வீடு, சோலையான வளவு, ஆலமரத்தடி, அந்த சந்தோஷம் எல்லாமே அந்நியமாகிப் போய்விட்டன. நாளாந்தம் பார்த்து வந்த தொழிலும் போய், போட்ட உடுப்புக்கூட கனவாகிவிட்டது.
இன்றைய கெடுகாலம். எதுவுமே நேர காலத்துக்கு சரிவரவில்லை. கொள்வனவு முடியவே நேரமாகிவிட்டது. புறப்படவே மூன்று மணியாகி, வழியில் பிரச்சனை.
இரண்டு தடவை சைக்கிள் காற்றுப் போய்விட்டது. ரயர் ஒட்டுக்கு இருபது ரூபாய் சுலபமாய் செலவழிந்தது. கையில் ஒரு சதமும் இல்லாத நிலையில் புறப்பட்டு, கோப்பாய் வெளி தாண்டவே இருள ஆரம்பித்து விட்டது.
இன்றைய வியாபாரம் அதோகதிதான் என்பது அப்போதே தெரியும். பொழுதுபடத் தொடங்கிவிட்டால் வியாபாரம் நடக்காது.
நான்கு நாட்களுக்கு முதல் எடுத்த நிவாரணப் பொருட்கள் நேற்றைக்கே முடிந்துவிட்டன. மத்தியானச் சாப்பாடு ஏதோ ஒரு விதத்தில் முடிந்திருக்கும். இரவுச் சாப்பாட்டு விடயம் அவன் வீடு போன பின்னர் தான் முடிவாகும்.
நினைத்துப் பார்க்க எரிச்சலாக இருந்தது. அன்று முழுவதற்குமாக குடித்த தேனீர் எந்த மூலைக்கு காணும். என்ன செய்வது? கொண்டு வந்தவற்றை அநியாய விலைக்கு விற்க முடியாது. இரவுப் பொழுதை எப்படியும் சமாளிக்கத்தான் வேணும் என நினைத்தான்.
ஊர்வலம் போனமாதிரி சைக்கிள்கள் போய்க் கொண்டிருந்தன. மருதனாமடச் சந்திக்கு வந்தபோது இருள் கனத்திருந்தது.
சந்தியில் பெற்றோல்மாக்ஸ் விளக்கு ஒன்று எரிந்து கொண்டிருந்தது. ஆட்கள் பலபேர் வேலை செய்துகொண்டிருந்தார்கள். இளைஞர்கள், வயதானவர்கள் என்று. சிலபேர் கிடங்கு கிண்டிக்கொண்டிருக்க, வேறுசிலர் மாட்டு வண்டிகளில் இருந்து மரங்களை இறக்கிக் கொண்டிருந்தார்கள்.
பள்ளிக்கூடச் சுவரில் மாவீரர்கள் ஆகிவிட்ட சில போராளிகளின் பெரிய படங்கள் சாத்திவைக்கப் பட்டிருந்தன.
வரும் வழிகளில் எல்லாம் இவ்வாறு சந்திக்குச் சந்தியும், இடை இடையேயும் சனங்கள் வேலை செய்து கொண்டிருப்பதையும், பந்தல்கள், வளைவுகள் அமைத்துக் கொண்டிருப்பதையும் கண்டாலும் கந்தசாமியின் மனநிலை காரணமாக அவற்றில் அதிக அக்கறை காட்டவில்லை.
ஓலைக் குடிசைகளால் நிரம்பி வழிந்த அந்த வளவுக்கு முன்னால் சைக்கிளை நிறுத்தினான் கந்தசாமி. அந்த இருளிலும் பொழுது போகாத சிறுவர், சிறுமியர் விளையாடிக் கொண்டிருந்தனர். பக்கத்தில் இருந்த அச்சகத்தில் இயந்திரம் இயங்கும் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. மின்சாரம் இல்லாவிடினும் அங்கு சைக்கிளை மிதித்து இயந்திரம் இயங்குவது அவனுக்குத் தெரியும். மண்ணெண்ணையில் மோட்டார் சைக்கிள் இயங்குவது போலத்தான் இதுவும்.
போராட்டக் காலச்சூழல் எத்தனை புதியவழி முறைகளையெல்லாம் கண்டுபிடிக்கவைத்துவிட்டது
என நினைத்தான்.
வேலிக்கரையோரம் பலபேர் குந்தியிருந்து பீடி பிடித்துக்கொண்டிருக்க சற்றுத் தூரத்தில் அரச மரத்தடியில் அமளியான வேலை நடந்துகொண்டிருந்தது. மாவீரர் வளைவொன்று தயாராகிறது போலும்.
சுமையோடு சைக்கிளை உருட்ட சிரமமாக இருந்தது. என்றாலும் தன் குடிசைக்கு முன்னால் போய் சைக்கிளை நிறுத்தினான்.
அந்தச் சின்னக் குடிசையின் வாசல் ஓரமாக மினுக் மினுக்கென்று சுட்டி விளக்கொன்று எரிந்து கொண்டிருந்தது.
எதிரே சாக்கொன்றில் மூத்தபிள்ளையும், அதற்கடுத்த பிள்ளையும் படுத்திருந்தனர்.
“இஞ்சரப்பா” என்று குரல் கொடுக்க இடுப்பில் கடைசிப் பிள்ளையைச் சுமந்து கொண்டு அவன் மனைவி வெளிப்பட்டாள். வெற்றுடம்புடன் காணப்பட்ட குழந்தையின் மூக்கு ஒழுகிக் கொண்டிருந்தது.
இருளிலும் அவனை அடையாளம் கண்டு “யப்பா” என்று மழலை மொழி பேசியபடி அவனிடம் பாய முற்பட்டது. கந்தசாமி சைக்கிளை ஸ்ராண்டில் நிறுத்தினான்.
சைக்கிளில் உள்ள சுமை, அவன் வந்த நேரம், போன்றவற்றை வைத்துக்கொண்டு அவனது நிலைமையை உணர்ந்துகொண்ட அவன் மனைவி,
நல்லாய் களைச்சுப் போனியள். அடுப்பில சுடுதண்ணி இருக்குது. தேத்தண்ணி கொண்டு வாறன் இருங்கோ.” என்று சொல்லி பிள்ளையை அவனிடம் கொடுத்துவிட்டு உள்ளே போனாள்.
அவன் படுத்திருந்த பிள்ளைகளுக்குப் பக்கத்தில் இருந்தான். சற்று ஆறுதலாக இருந்தது ஆனாலும் மனம் ஒரு நிலையில் இல்லை.
தேநீருடன் மனைவி வந்தாள்.
முகத்தைக் கழுவிக்கோண்டு வாங்கோ, கஞ்சி காச்சி வைச்சிருக்கு” என்றாள் ஆதரவாக. தன் நிலையை உணர்ந்துகொண்டு கேள்விக் கணைகள் தொடுக்காமலே செயற்படும் அவளை அன்புடன் அவன் நோக்கினான். உடலில் தெம்பு பிறந்திருந்தது.
அவன் கையில் சீனி வாங்கித் தந்து தேனீர் குடிக்கும் போது,
இஞ்சரப்பா, உங்கை ஒரு மாவீரர் வளைவு கட்டினம், எல்லா ஆம்பிளையளும் அங்கைதான் போட்டினம். வேலை செய்ய நீங்களும் போட்டு வாங்கோவன். உடம்பு அலுப்பெண்டாலும் நாங்களும் செய்யத்தானே வேணும்.” என்றாள் அவள்.
அவன் நிமிர்ந்து வானத்தைப் பார்த்தான்.
“உடல் களைத்தாலும் மனம் களைக்கக் கூடாது” என்று நினைத்தபடி எழும்பினான்.
என் “சிவப்புச்சாறி ஒண்டும் கேட்டவை. எனட்டை எங்கைகிடக்கு. மலரக்கா தாறனெண்டவ. அதோடை என்ர மஞ்சள் சாறியையும் சேர்த்துக் கொடுங்கோ” என்றாள் அவள்….
-இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன்.
-எரிமலை இதழ் ஆடி 1992.
தொகுப்பு : தமிழரசன்அப்துல்காதர்