
தனியரசுக் கோரிக்கை 1978 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 7ஆம் திகதி ஜெயவர்த்தனா அரசு அரசியலமைப்புச் சட்டத்தை அமுல்படுத்தியது
பாராளுமன்றத்திற்குப் புறம்பாகத் தமிழீழத்தில் தலைவிரித்தாடிய அரசியல் வன்முறை எழுச்சியும், புலிகள் இயக்கமாக உருவகம் பெற்ற ஆயுத எதிர்ப்பு இயக்கமும், தமிழ் அரசியல்வாதிகளுக்கு அச்சுறுத்தலையும், நெருக்குதலையும் கொடுத்தது. பாலைவனத்தில் எழுப்பும் குரல்கள் போல, பாராளுமன்றத்தில் விடும் அறிக்கைகளில் எவ்வித அர்த்தமும் இல்லை என்பதைத் தமிழீழ மக்கள் உணர்ந்து கொண்டனர். சமஸ்டி கோரி நடத்திய சாத்வீகப் போராட்டங்களும் பயனற்றுப் போய்விட்டதையும் மக்கள் உணராமல் இல்லை. தீவிரமடைந்து சென்ற சிங்கள இனவாத ஒடுக்குமுறையும், அதன் எதிர்வீச்சாகத் தமிழீழத்தில் உருவாகியுள்ள புரட்சிகரப் புறநிலைகளும், ஒற்றையாட்சியைக் கைவிட்டுத் தன்னாட்சி உரிமையை வென்றெடுக்க வேண்டுமென மக்கள் மத்தியில் எழுந்துள்ள புதிய விழிப்புணர்வும், தமிழ் அரசியல்வாதிகள் மீது ஒரு புதிய அழுத்தத்தை ஏற்படுத்தியது.
ஒப்பந்தங்கள் செய்து – உடன்பாடுகள் செய்து – ஒத்துழைப்புச் செய்து, எல்லா வகையிலும் நெகிழ்ந்து கொடுத்தும், சிங்கள ஆளும் வர்க்கத்தால் மாறி மாறி ஏமாற்றப்பட்ட கசப்பான வரலாற்று அனுபவமும் தமிழ்த் தலைவர்களை உறுத்தியது. தமிழீழத்தில் மேலோங்கி நின்ற தன்னாட்சி உரிமைக் குரலுக்கு செவிசாய்க்க மறுத்தால், அது அரசியல் தற்கொலையில் போய் முடியும் என்பதையும் அரசியல் தலைவர்கள் உணர்ந்தனர். இவ்வாறான வரலாற்று நிர்ப்பந்தங்களால் நெருக்கப்பட்ட தமிழ் அரசியல்வாதிகள், மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு ஒத்திசைவாகத் தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் தனியரசுக் கோரிக்கையை முன்வைக்க முன்வந்தனர்.
1976ஆம் ஆண்டு மே மாதம் வட்டுக்கோட்டையில் நிகழ்ந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேசிய மாநாட்டில், ‘‘தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் ஒரு சுதந்திரமான, இறைமையுடைய, மதசார்பற்ற சோசலிச தமிழீழத்தை அமைப்பது’’ என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றத் தமக்கு மனு தருமாறு கோரி 1977 யூலையில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் கூட்டணியினர் தமிழ் மக்களை வேண்டிக் கொண்டனர். தேர்தலில் அவையாகச் செயற்பட்டு, தமிழீழ அரசுக்கான யாப்பு ஒன்றைத் தயாரித்து, தமிழீழத்தின் சுதந்திரத்தை நிலைநாட்டப் போராடுவோம் எனவும் கூட்டணியினர் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் பிரகடனம் செய்தனர். சர்வசன வாக்கெடுப்புப் போல நிகழ்ந்த இத் தேர்தலில், தமிழீழ மக்கள் தமது அரசியல் அபிலாசை என்ன என்பதை தெட்டத் தெளிவாகத் தெரியப்படுத்தினர். அமோக வெற்றியை ஈட்டிய கூட்டணியினர், மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிய கதையை இங்கு விபரிக்கத் தேவையில்லை.
தமிழீழ மக்களின் தன்னாட்சி உரிமைப் போராட்டத்தை, வெறும் தேர்தல் கோசமாகக் கூட்டணியினர் பயன்படுத்தியமை தமிழீழ மக்களுக்கு இழைத்த மாபெரும் வரலாற்றுத் துரோகமாகும். தமிழ்த் தேசிய இனத்தின் அடிப்படை அரசியல் உரிமையைக் கொச்சைப்படுத்தும் வகையில் கூட்டணியினர் அரங்கேற்றிய இந்த அரசியற் துரோக நாடகம், தமிழ் மக்களின் தேசியப் போராட்டத்தைப் பின்னடைவுக்குள் தள்ளியது.
1977 தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் பதவியேறிய ஜே. ஆர். இன் ஆட்சிபீடம், தமிழ் மக்களுக்கு எதிராக யுத்தப் பிரகடனம் செய்வது போல ஒரு பயங்கர இனக்கலவரத்தைக் கட்டவிழ்த்து விட்டது. இந்தச் சிங்கள இனவாதப் பேயாட்டத்தில், ஆயிரக்கணக்கில் தமிழ் மக்கள் கொல்லப்பட்ட போதும் கூட்டணித் தலைவர்கள் செயலிழந்து போய், தமது பாராளுமன்ற நாற்காலிகளை மட்டும் இறுகப் பற்றியபடி இருந்தனர். இந்தச் சம்பவத்தை அடுத்து கூட்டணித் தலைமை தமிழீழ அரசியல் அரங்கிலிருந்து முற்றாக அந்நியப்பட்டு நின்றது. இந்த வெற்றிடத்தை நிரப்புவது போல விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் முனைப்புறத் தொடங்கியது. அரசின் அடக்குமுறைக் கருவிகளாகச் செயற்பட்டுத் தமிழ் மக்களின் போராட்டத்திற்கு முட்டுக்கட்டையாக விளங்கிய பல இரகசியப் பொலீஸ் அதிகாரிகளையும், இனத் துரோகிகளையும் எமது இயக்கம் அழித்தது.
1978 ஏப்ரல் 7ஆம் திகதி இன்ஸ்பெக்டர் பஸ்தியாம்பிள்ளையும், அவரது பொலீஸ் கோஸ்டியும் முருங்கன் காட்டுக்குள் புலிகளால் அழிக்கப்பட்ட சம்பவம், சிங்கள ஆட்சியாளருக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. பஸ்தியாம்பிள்ளை கோஸ்டியை அழித்தமைக்கும், மற்றைய பொலீஸ் அதிகாரிகள், இனத்துரோகிகள் கொல்லப்பட்டமைக்கும் உரிமைகோரி, முதற் தடவையாக விடுதலைப் புலிகள் வெளியிட்ட அதிகாரபூர்வ அறிக்கையைக் கொழும்புப் பத்திரிகைகள் முக்கியத்துவம் கொடுத்துப் பிரசுரித்தன. இதனூடாகப் புலிகள் இயக்கம் தமிழ், சிங்கள மக்கள் மத்தியில் பிரபல்யம் பெற்றது. விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் வளர்ச்சிபெற்று வருவதைக் கண்டு சிங்கள அரசு திகைத்தது. தமிழீழத்தில் தலைமறைவாக வளர்ந்து வரும் விடுதலை இயக்கத்தை எப்படியாவது அழித்துவிட வேண்டும் என்ற நோக்கில், 1978 மே மாதம் விடுதலைப் புலிகள் தடைச் சட்டத்தை சிங்கள அரசு பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது. இந்தச் சட்டம் ஆயுதப் படைகளுக்கு அளவுக்கு மீறிய அதிகாரங்களை வழங்கியது. இளைஞர்களைக் கண்மூடித்தனமாகக் கைது செய்யவும், விசாரணை இல்லாமல் நீண்டகாலம் தடுப்புக் காவலில் வைத்திருக்கவும், சித்திரவதை செய்து கொல்லவும் இந்தக் கொடும் சட்டம் இடமளித்தது. ஒட்டுமொத்தத்தில் தமிழருக்கு எதிரான அடக்குமுறையை இந்தச் சட்டம் வலுப்படுத்தியது.
1978 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 7ஆம் திகதி ஜெயவர்த்தனா அரசு அரசியலமைப்புச் சட்டத்தை அமுல்படுத்தியது. இந்த அரசியலமைப்புச் சட்டம் சர்வ அதிகாரங்களைக் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறையை நிறுவியது. சிங்கள மொழிக்கும், பௌத்தத்திற்கும் விசேட அந்தஸ்தை வழங்கியது. தமிழ் மொழியை இரண்டாம் தர நிலைக்குத் தள்ளியது. சாராம்சத்தில் சிங்களப் பௌத்த பேரினவாதம், சட்டம் மூலம் வலுப்பெற்றதோடு, ஒரு பாசிச சர்வாதிகார ஆட்சியும் அமையப் பெற்றது. சிறீலங்கா ஆட்சியமைப்பிலிருந்து தமிழ் மக்கள் பூரணமாக அந்நியப்படுத்தப்பட்டனர்.