×

தமிழீழத்தின் பிரதான இயற்கை வளங்களான பனை, தென்னை

தமிழீழத்தின் பிரதான இயற்கை வளங்களான பனை, தென்னை

தமிழீழத்தின் பிரதான இயற்கை வளங்களான பனை, தென்னை வள அபிவிருத்தி நோக்குடன் புலிகள் 1991 பங்குனித் திங்கள் 29ஆம் நாள் இந்த நிறுவனத்தைத் தோற்றுவித்துள்ளனர்.

தெங்கு, பனம்பொருள் உற்பத்தி விற்பனவு கூட்டுறவுச் சங்கங்கள், இச்சங்கங்களின் சமாசம், பனை அபிவிருத்திச் சபை, கூட்டுறவுத் திணைக்களம் (பனம் பொருள்), ஏற்றுமதி உற்பத்திக் கிராமியக் கம்பனிகள், பனை, தென்னைவள ஆர்வலர்கள், புலிகள் மக்கள் முன்னணியினர் இணைந்த நிறுவனமே ‘பனை, தென்னைவள அபிவிருத்தி ஒன்றியம்’ ஆகும்.

ஒன்றியம், மேற்படி நிறுவனங்களின் ஒருங்கிணைந்த செயற்பாடுகள் மூலம் பனை, தென்னை வளங்களை அபிவிருத்தி செய்தலும் அதனோடு சார்ந்த தொழில் வல்லுநர்களின் வாழ்வு, தொழில், பொருளாதாரத்தை மேம்பாடு அடையச் செய்தலும், தமிழீழ தேசிய பொருளாதாரக் கட்டமைப்பை விருத்தி செய்தலும் பிரதான குறிக்கோளாகக் கொண்டு செயற்படுகின்றது.

ஒன்றியத்தின் முதலாவது செயற்திட்டமாக, பதநீர், கள் உற்பத்திப் பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இதுவரை காலமும் குறைந்த வருமானத்தையே பெற்றுவந்த கிராமப்புற பனந்தொழில் வல்லுநர்களின் பொருளாதார மேம்பாட்டைக் கருத்திற்கொண்டு:

ஒரு போத்தல் கள்ளின் கொள்வனவு விலையாக ரூபா 6.00 (ஆறு) நிர்ணயிக்கப்பட்டது.
நீண்டகாலமாகக் கள்ளை மட்டும் உற்பத்தி செய்து வந்த தொழில் வல்லுநர்களைப் பதநீர் உற்பத்தி செய்யத் தூண்டும் முகமாக:

ஒரு போத்தல் பதநீரின் கொள்வனவு விலையாக ரூபா 7.00 (ஏழு) நிர்ணயிக்கப்பட்டது.
பதநீரின் விலை உயர்வினால் பனை வெல்லத்தின் உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளது.

பொதுமக்களின் நன்மை கருதிப் பனம் வெல்லத்தின் விற்பனை விலையைக் கட்டுப்படுத்தி, அதனால் வரும் உற்பத்தி நட்டத்தை ஈடுசெய்ய மானியம் வழங்கத் தீர்மானிக்கப்பட்டது. இதன் செயற்பாடாகவே மதுப்பாவனையாளரிடமிருந்து ஒரு போத்தல் கள்ளுக்கு 50 சதம் (ஐம்பது) வரியாகப் பெற்று, அதன் மூலம் திரட்டும் பணத்திலிருந்து ஒரு கிலோ பனம் வெல்ல உற்பத்திக்கு ரூபா 50.00 (ஐம்பது) மானியமாக வழங்கப்படுகின்றது.

இன்றைய திட்டமிட்ட பொருளாதாரத் தடைகளினால் எமது பிரதேசத்தில் சீனிக்குத் தட்டுப்பாடு நிலவுகின்றது. இந்த நிலைமை தொடராதிருக்க எமது மக்களின் சீனித் தேவையில் ஒரு பகுதியையாவது பூர்த்தி செய்யும் நோக்கோடு ஒவ்வொரு பனந்தொழில் வல்லுநரும் ஆகக் குறைந்தது 40 வீதம் பதநீரை உற்பத்தி செய்யுமாறு கேட்கப்பட்டுள்ளனர். இதற்கான கருத்தரங்குகள், தொழில் வல்லுநர்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்டன. பனம் சீனி ஆலைகளின் உருவாக்க முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு, இது சார்ந்த தொழில் நுட்ப ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன.

பதநீர் உற்பத்தியினால் சமூகக் கட்டமைப்புக்கள் தளர்வடைந்தன. மக்களுக்குப் பனம் சீனியின் முக்கியத்துவம் புலப்படத் தொடங்கிய இவ்வேளையில் பனந் தொழில் வல்லுநர்களின் முக்கியத்தையும் உணரத் தலைப்பட்டுள்ளனர். அதிக பதநீரை உற்பத்தி செய்த தொழில் வல்லுநர்களுக்கு ஒன்றியம் தங்கப்பதக்கம், வெள்ளிப்பதக்கம், வெண்கலப் பதக்கங்களை வழங்கிக் கௌரவித்து ஊக்குவித்துள்ளது.

யாழ்ப்பாணக் குடாநாட்டின் இன்றைய சீனித் தேவையில் நாம், தன்னிறைவை அடைய 30, -000 தொழில் வல்லுநர்கள் பதநீர் உற்பத்தியில் ஈடுபட வேண்டும். 1972 இல் 12,000 தொகையாக இருந்த பனந்தொழில் வல்லுநர்கள் தொகை 1991இல் 6,000 பேராக வீழ்ச்சியடைந்துள்ளது.

சமுதாயத்தில் குறிப்பிட்ட ஒரு பகுதி மக்கள் மட்டுமே மேற்கொண்டுவரும் பனந்தொழில் அனைவராலும் தேசிய உற்பத்தியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதையும் புதிய தொழில்நுட்ப உத்திகள் புகுத்தப்பட வேண்டும் என்பதையும் ஒன்றியம் கவனத்தில் கொண்டுள்ளது. இந்த அடிப்படையில் பனந்தொழில் வல்லுனர்களுக்கான ‘சுயதொழில் பயிற்சி நெறி’ ஒன்றியத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. வேலை வாய்ப்புக்கள் இல்லாதிருக்கும் எமது பிரதேசத்தின் பெருமளவு இளைஞர்களுக்குத் தொழில் வாய்ப்பையும் அதன் மூலம் அதிக அளவிலான வருமானத்தைப் பெறும் வழிகளையும் இப்பயிற்சி நன்கு புலப்படுத்துகின்றது.

பனைசார் உற்பத்திப் பொருட்களின் பயன்பாடு, அவற்றின் முக்கியத்துவம் பற்றி பொது மக்கள், அறிஞர்கள் சகலதரப்பினரும் அறியும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் -யாழ்ப்பாண விஞ்ஞான மன்றமும் பனை தென்னை வள அபிவிருத்தி ஒன்றியமும் இணைந்து ‘பனை வள ஆய்வரங்கும் கண்காட்சியும்’ என்ற நிகழ்வு ஒன்றை 1991 ஆனி 29, 30ந் திகதிகளில் நடத்தின. இதில் பல்துறைசார்ந்த அறிஞர்கள், பனைவள ஆர்வலர்கள், பொதுமக்கள், நலன் விரும்பிகள் கலந்து, எம் பனைவளத்தின் உன்னத நிலையை உணர்ந்து ஒன்றியத்துடன் இணைந்து செயற்படத் தொடங்கியுள்ளனர். பலதரப்பட்ட மக்களும் பனையின் பயன்பாடுகளையும் அதுசார்ந்த உற்பத்திகளையும் நேருக்குநேர் கண்டு இந் நிகழ்வின் மூலம் புரிந்துணர்ந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

தெங்கு, பனம்பொருள் உற்பத்தி விற்பனவு கூட்டுறவுச் சங்கங்களில் மகளிர் குழுக்கள் உருவாக்கம் பெற்றன. பனைசார்ந்த கைப்பணிப் பயிற்சிகள் மூலம் குழுக்களில் உள்ளவர்களுக்கு சுயதொழில் வருமானம் பெறும் வழிவகைகள் உணர்த்தப்பட்டுள்ளன. பனாட்டு உற்பத்தி, பனம்களியை மூலப் பொருளாகக் கொண்ட புதிய உணவுற்பத்திகள் பெருமளவுக்கு மேற்கொள்ளப்பட்டதோடு பனங்களியைப் பயன்படுத்தி ‘கற்பகா பாண்’ போன்ற புதிய உற்பத்திகளும் நடைபெறு கின்றன.

கிராமிய உற்பத்திக் குழுக்கள், பாடசாலை மாணவர்கள், பொது நிறுவனங்கள் ஊடாகப் பெருமளவு பனம் விதைகள் நாட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. தெ.ப.பொ.கூ. சங்கங்கள் ரீதியாக, பனை, தென்னைவள உற்பத்திகளைச் செயற்படுத்தியதானது பனை, தென்னைவள அபிவிருத்தி என்ற நிறுவனத்தின் நிலைப்பாட்டை உறுதிப்படுத்துகின்றது.

முதல் முறையாக ஒன்றியம் குடாநாட்டில் 8000 பனம் நாற்றுகளை பல்தரப்பட்ட அமைப்புக்கள் ஊடாக நாட்டியுள்ளது. இன்று வரை தமக்கென பனைப் பண்ணைகள் இல்லாதிருந்து வந்த தெங்கு, பனம்பொருள் உற்பத்தி விற்பனவுக் கூட்டுறவுச் சங்கங்கள், தமக்குச் சொந்தமாக பனைப் பண்ணைகளை உருவாக்க ஒன்றியம் முழு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றது. இச்செயற்திட்டம் மூலமாக எதிர்காலத்தில் பனந் தொழில் வல்லுநர்கள் பெரும் பயனை அடைவார்கள்.

இன்றுவரை முறைக்கள்ளு, முறைப்பதநீர், உற்பத்தி முறைகளால் ஒடுக்குமுறைக்கு உள்ளாகியும், தொழில் வருமானம் பாதிப்புக்குள்ளாகியும் வரும் பனம் தொழில் வல்லுநர்கள் மீதான ஒடுக்குமுறை, வருமானப் பாதிப்புகளை முற்றாக அகற்றிவிட ஒன்றியம் செயற்திட்டத்தை முன்னெடுத்துச் செயற்படுகின்றது.

தொழில் நுட்ப வல்லுநர்களின் உதவிகளுடன் பனை ஏறும் பொறி உருவாக்கம் பனம்சீனி ஆலைகளின் பொறி உருவாக்கம் தொடர்பான முன்னெடுப்புக்களும் ஒன்றியத்தால் மேற்கொள்ளப்படுகின்றன. பனம் வெல்லம், பனம் சீனி உற்பத்திகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள போதிலும் அவற்றின் உற்பத்திஇலக்கு அண்மிக்கப்படவில்லை. இப்பின்னடைவிற்கு பிரதான காரணங்களாக இருந்தவை 1991 இன் அனுபவங்களால் இனங்காணப்பட்டுள்ளன.

அவை:-

அ) பதநீர் உற்பத்தியில் பனந்தொழில் வல்லுநர்கள் அனைவரும் ஈடுபடவில்லை.
ஆ) தரமற்ற பதநீர் உற்பத்தியும் பதநீரில் கலப்படம் நிகழ்ந்த மையும்.
இ) உபகரணங்கள், கொள்கலன்கள், இரசாயனப் பொருட்கள், எரிபொருட்கள், விறகு என்பவற்றின் தட்டுப்பாடு.
ஈ)  உற்பத்தி சார்ந்த பணியாளர்களிடம் போதிய தொழில் நுட்ப அறிவின்மை காணப்படுகின்றமை.
உ) உற்பத்திகள் திட்டமிட்டு உரிய நேரத்தில் சந்தைப்படுத்தப்படாமை.

இங்கு இனங்காணப்பட்ட இக்குறைபாடுகளை நடப்பாண்டில் நிவர்த்தி செய்து தொழில் வல்லுநர்களின் பூரண ஒத்துழைப்போடு உற்பத்தித் திட்டங்களை முன்னெடுப்போமாயின் ஒன்றியம், அதன் உச்சப் பயன்பாட்டைப் பெறமுடியும் என்ற உறுதிப்பாட்டை நிலைநிறுத்துகின்றது.

தமிழீழத்தின் தேசியப்பொருளாதாரத் தூண்களாக விளங்கும் பனை, தென்னைவள அபிவிருத்திகள், பயன்பாடுகளுக்கு அனைவரும் ஒத்துழைப்போமாயின் நாம் எதிர்நோக்கும் பொருளாதாரத் தடைகளை உடைத்தெறிதல் இலகுவாகும். எமது அன்றாட உணவுத் தேவைகளை இவ்வளங்களில் இருந்து நாம் பூர்த்தி செய்வதோடு, எமது பொருளாதாரத்திலும் வலுவுள்ளவர்களாகத் திகழ்வோம்.

-காப்பரண்-தமிழீழம்
-எரிமலை இதழ், ஆடி 1992.
தொகுப்பு: தமிழரசன்அப்துல்காதர்

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments