×

ஆனையிறவு

தரையிறங்கிய வேகத்திலேயே, தொண்டமனாற்றிலிருந்து ஆனையிறவுநோக்கி நீண்டு கிடக்கும் கடல்நீரேரியைக் கடந்து, பளைக்கும் முகமாலைக்கும் இடையிலான யாழ்.நெடுஞ்சாலையை ஊடறுத்து நிலை கொண்டன புலியணிகள். நீரேரியின் கரையிலிருந்து நெடுஞ்சாலையை நெருங்குவதற்குச் சற்று முன்புவரை, ஆனையிறவைப் பார்த்தபடி 2ம்லெப்.மாலதி படையணியும், அவர்களைத் தொடர்ந்து நெடுஞ்சாலையை வெட்டிக்கடந்து கிளாலிநோக்கிப் பார்த்தபடியும் மறுபடி வெட்டிக்கடந்து சாவகச்சேரி நோக்கிப் பார்த்த படியுமாக மேஜர் சோதியா படையணியும், தொடர்ந்து சாவகச்சேரியைப் பார்த்தபடியே லெப்.சாள்ஸ் அன்ரனி படையணியும், சிறப்பு எல்லைப்படை வீரர்களும் 2ம் லெப்.மாலதி படையணியின் பிறிதொரு அணியும் நிலை கொண்டிருந்தன.

நெடுஞ்சாலையைக் கடந்து கவிழ்ந்த U வடிவில் மேஜர் சோதியா படையணி தனித்து நின்றது. வேம்பொடுகேணி பாடசாலை, புகையிரதப்பாதை எல்லாமே இவர்களின் கட்டுப்பாட்டில்.

2000.04.02 அன்று ஆனையிறவுத் திசையிலிருந்து முன்னேறி உள்நுழைந்த சிறிலங்காப் படையினரை 2ம் லெப். மாலதி படையணி சம்பலாக்கிவிட்டிருந்தது. இனி எந்நேரமும் தமது பகுதியில் ஒரு தாக்குதல் நிகழலாமென சோதியா படையணி விழிப்புடன் நின்றது. ஏற்கனவே 2000.03.27 அன்று படையினர் செய்த முன்னேற்ற முயற்சி யொன்றை இவ்விடத்தில் நின்ற லெப். சாள்ஸ் அன்ரனி படையணியினர் முறியடித்துமிருந்தனர். இன்று 10ஆம் திகதி. படையினர் பாரிய நகர்வொன்றை ராங்குகளைப் பயன் படுத்திச் செய்தனர். பாடசாலைக்கு அப்புறமும் இப்புறமுமாக இரு வரிசையில் இராணுவம் முன்னேற, இவர்களின் அணி மூன்று கூறுகளாக வெட்டப்பட்டது. எங்கு பார்த்தாலும் ராங்குகள். சுழல்மேடைகள் சுழலச் சுழல, பீரங்கி வாய்கள் புகைகக்க, எங்கும் பாரிய வெடிப்பொலிகள். கொப்புகள், கற்கள், மண் எல்லாம் மேலுயர்வதும் விழுவதுமாக களத்தில் அனல் வீசத்தொடங்கியது.

செல்வியின் காப்பரணருகே, அது காப்பரண் என்பதை இன்னமும் கவனிக்காத ராங்கொன்று நின்று முழங்கிக்கொண்டிருந்தது. கட்டளைகளைப் பிறப்பித்துக்கொண்டிருந்த செல்விக்கு, ஒவ்வொரு காப்பரணின் தொடர்பும் அற்றுப் போய்க்கொண்டிருந்தது. கூடநின்ற இலக்கணாவை ராங்கிக்கு கைக்குண்டை வீசுமாறு கூறிவிட்டு, இல்லாமல்போன தொடர்புகளை எடுக்க முயன்றுகொண்டிருந்தார்.

முதலில் வீசப்பட்ட குண்டு சற்று சறுக்கிப்போனாலும், இரண்டாவது குண்டு தன் பணியைச் செவ்வனே செய்ததால் ராங்கியினால் நகரமுடியவில்லை.

சேதமுற்ற ராங்கியினைச் சீர்செய்யவென உள்ளிருக்கும் படையினர் வெளிவர முயற்சிப்பதும், இவர்கள் சுடுவதும் அவர்கள் தலையை உள்ளிழுத்துவிட்டு மறுபடி வெளிவர முயற்சிப்பதும், இவர்கள் சுட்டு வீழ்த்துவதுமாக, ஒருநாள் காலை தொடங்கிய சண்டை மறுநாள் காலை முடிவுக்கு வரும்வரை அந்த ராங்கியை மீட்க இராணுவத்தால்
முடியவில்லை.

மலையான மலையெ, பெரும் பலமெனப் படையினரால் நம்பப்படுகின்ற ராங்கியொன்று, தனித்து நின்ற இரு பெண் புலிகளால் அன்று வெற்றிகொள்ளப்பட்டது.

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments