×

எர்னெஸ்டோ சே குவேரா 

எர்னெஸ்டோ சே குவேரா 

ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாகவும், உலகெங்கிலும் உள்ள இளைஞர்களுக்கு உத்வேகமாகவும் விளங்கும் ஒரு வரலாற்று நாயகன். தோழர் சே குவேராவின் பிறந்தநாள் இன்று ஜூன் 14, 1928. அர்ஜென்டினாவின் ரொசாரியோவில் பிறந்து ,மருத்துவம் பயின்ற இவர், புத்தகங்களை விரும்புவராகவும், விளையாட்டு வீரராகவும் திகழ்ந்தார். சிறுவயதிலேயே ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலும், லத்தீன் அமெரிக்கா முழுவதும் பயணம் செய்து, ஏழை மக்களின் வறுமையையும், சமூக ஏற்றத்தாழ்வுகளையும் நேரில் கண்டார். இந்த அனுபவங்களே அவரை ஒரு புரட்சியாளனாக மாற்றியது.

மெக்ஸிகோவில் வைத்து பிடல் காஸ்ட்ரோவை சந்தித்த சே குவேரா, கியூபாவில் நிலவிய கொடுங்கோல் பாடிஸ்டா ஆட்சியை வீழ்த்தும் நோக்கத்தில் உருவான ‘ஜூலை 26 இயக்கத்தில்’ இணைந்தார். கெரில்லா போர் முறையில் சிறந்து விளங்கிய சே, கியூபப் புரட்சியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தார். 1959-ல் புரட்சி வெற்றி பெற்ற பிறகு, கியூபாவின் தேசிய வங்கியின் தலைவர் மற்றும் தொழில்துறை அமைச்சராகப் பொறுப்புகளை ஏற்று நாட்டை முன்னேற்றப் பாடுபட்டார். அரசு அதிகாரத்துடன் திருப்தி அடையாத அவர், லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் எங்கும் ஏகாதிபத்தியம் ஒழிய வேண்டும் என்று விரும்பினார்.

கியூபாவின் பதவிகளைத் துறந்துவிட்டு, காங்கோ மற்றும் பொலிவியா போன்ற நாடுகளின் விடுதலைக்காகப் போராடச் சென்றார். “அடிமைப்பட்டு கிடக்கும் ஒவ்வொரு நாடும் என் தாய் நாடு” என்பது அவரது புகழ்பெற்ற வாக்கு. 1967-ஆம் ஆண்டு, பொலிவியாவில் புரட்சியை முன்னெடுத்துக் கொண்டிருந்தபோது, அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏ உதவியுடன் பொலிவியப் படைகளால் கைது செய்யப்பட்டார்.

அக்டோபர் 9, 1967 அன்று அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அப்போது அவருக்கு வயது 39. அதிகாரத்தையும் சுகபோகங்களையும் உதறித் தள்ளிவிட்டு, தன்னுயிரைக் கொடுத்து மக்களின் உரிமைகளுக்காகப் போராடியவர் என்பதால், அவர் ஒரு தனி மனிதனாகத் தெரியாமல், ஒரு இயக்கமாக’ உலகெங்கும் அடையாளப்படுத்தப்படுகிறார்.

“எங்கே அநீதியைக் கண்டாலும் உன் மனம் தாங்க முடியாமல் துடிக்கிறதா? அப்படியானால் நீயும் என் நண்பன்தான்” என்ற அவரது வாசகம், இன்றும் உலகெங்கிலும் உள்ள போராட்டக்காரர்களின் தாரக மந்திரமாக உள்ளது. புரட்சியாளர்கள் புதைக்கப்படுவதில்லை, விதைக்கப்படுகிறார்கள் என்பதற்கு சே குவேரா ஒரு சிறந்த உதாரணம். உலகெங்கிலும் உள்ள இலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு இன்றும் உத்வேகமாகத் திகழ்கிறார் சே குவேரா.

எந்தவொரு வல்லரசு நாடும் தங்களை விடப் பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளைச் சுரண்டுவதையும், அவர்களின் சுதந்திரத்தில் தலையிடுவதையும் சே கடுமையாக எதிர்த்தார். புரட்சி என்பது ஒரு குறிப்பிட்ட நாட்டிற்குள் மட்டும் சுருங்கிவிடக் கூடாது என்று நம்பினார். உலகம் முழுவதும் ஒடுக்கப்பட்ட மக்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ, அங்கெல்லாம் சென்று போராட வேண்டும் என்பதே அவரது கொள்கை. உழைக்கும் வர்க்கமே நாட்டின் உண்மையான பலம் என்றும், உற்பத்தி சாதனங்கள் அனைத்தும் மக்களுக்கே சொந்தமாக வேண்டும் என்றும், வர்க்கப் பேதமற்ற சமூகமே இறுதி இலக்கு என்றும் வலியுறுத்தினார்.

பொதுவுடமை சமூகம் என்பது வெறும் பொருளாதார மாற்றமல்ல; மனிதர்களின் சிந்தனையிலும் மாற்றம் வர வேண்டும். சுயநலம், பேராசை இல்லாத, சமூக நலனைத் தன் நலனாகக் கருதும் “புதிய மனிதர்கள்” உருவாக வேண்டும் என்று சே விரும்பினார். கொடுங்கோல் ஆட்சியை அமைதி வழியில் மட்டும் வீழ்த்த முடியாது; ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்திப் போராடுவது தவிர்க்க முடியாதது என்று கெரில்லா போர் முறையை ஆதரித்தார்.

“யதார்த்தவாதிகளாக இருப்போம், சாத்தியமற்றதை சாதிப்போம்!”

“முட்டிப்போட்டு அடிமையாக வாழ்வதை விட, உரிமைகளுக்காக நிமிர்ந்து நின்று சாவது எவ்வளவோ மேல்.”

“ஒரு புரட்சியாளனை வழிநடத்தும் மிக முக்கியமான குணம், அவனது எல்லையற்ற அன்புதான். மனிதகுலத்தின் மீதான அன்பு இல்லாமல் எந்தவொரு உண்மையான புரட்சியும் சாத்தியமில்லை.”

“நான் வீழ்ந்தால், என் துப்பாக்கியை மற்றொருவன் கையில் எடுப்பான்; தோட்டாக்கள் தொடர்ந்து பாயும்.”

“விதைக்கப்படும் விதைகள் எல்லாம் முளைப்பதில்லை. ஆனால், முளைக்கும் செடிகள் அனைத்தும் எப்போதோ ஒருமுறை விதைக்கப்பட்டவைதான்.”

இவைதான் சே குவேராவின் கொள்கைகளும் சிந்தனைகளும் ஆகும். அவை அரசியல் சார்ந்தவை மட்டுமல்ல, அவை மனித மாண்பையும், சமத்துவத்தையும், சமரசமற்ற போராட்டக் குணத்தையும் போதிப்பவை.

செவ்வணக்கம் தோழர் சே

சோசலிசப் புரட்சியாளர் சே குவேரா பிறந்த தினம்: ஜூன் 14 – 1928

சே குவேரா’ அல்லது ‘எல் சே’ என பொதுவாக அறியப்பட்ட எர்னெஸ்டோ குவேரா த லா செர்னா  – Ernesto Guevara de la Serna (ஜூன் 14, 1928 – ஒக்டோபர் 9, 1967) ஆர்ஜென்ரீனாவை பிறப்பிடமாகக் கொண்ட ஒரு சோசலிசப் புரட்சியாளர், மருத்துவர், மார்க்சியவாதி, அரசியல்வாதி, கியூபா மற்றும் பல நாடுகளின் (கொங்கோ உட்பட) புரட்சிகளில் பங்குபற்றிய போராளி எனப் பல முகங்களைக்கொண்டவர்.

சே தினமும் பிறந்து கொண்டிருக்கிறான்…!

வாலேகிராண்டாவில், (Vallegrande) ‘சே’ புதைக்கப்பட்ட இடத்தின் அருகில் இருந்த தபால் தந்தி அலுவலக சுவற்றில் இப்படி எழுதப்பட்டு இருந்தது, ”அவர்கள் நினைத்ததுபோல் இல்லாமல் நீ வாழ்ந்து கொண்டிருக்கிறாய் சே…” எவ்வளவு அர்த்தம் பொதிந்த வாக்கியம் இது…? இந்த ஒரு வரியில் எவ்வளவு நம்பிக்கையும், கம்பீரமும் வெளிப்படுகிறது. இந்த உலகத்தின் எல்லைகள் கடந்து, அரசியலை புரிந்துகொள்ள இந்த ஒரு வாக்கியத்தை அதன் முழு அர்த்தத்தில் நாம் புரிந்துகொண்டாலே போதும்.

ஆம். இந்த வாக்கியத்தை மீண்டும் ஒரு முறை படியுங்கள். உங்களுக்குள் கேள்வி கேளுங்கள், அவர்கள் யார்…? அவர்கள் ஏன் ‘சே’ சாக வேண்டும் என்று நினைத்தார்கள்…? ‘சே’வின் பூத உடல் மட்டும் அல்ல, அவன் குறித்த நினைவுகள்கூட ஏன் மரித்துப்போக வேண்டும் என்று விரும்பினார்கள்…? ஏன் ‘சே’ என்னும் ஒற்றை எழுத்தை வரலாற்றின் பக்கங்களில் இருந்து கிழித்துவிட வேண்டும் என்று துடித்தார்கள்…? இந்த கேள்வியின் சரியான விடையில்தான், உலகத்தின் மொத்த அரசியலும் இருக்கிறது.

அவர்கள் நம்மை விட ‘சே’ வை நன்கு புரிந்து வைத்திருந்தார்கள்…

‘சே’வை விரும்புபவர்கள், ‘சே’வை பின்பற்றுபவர்கள், ‘சே’வை தங்கள் குருவாக ஏற்றுக்கொண்டவர்களைவிட, அவனை இல்லாமல் செய்துவிட வேண்டும் என்று விரும்பிய, அந்த அவர்கள்தான் ‘சே’வை நன்கு புரிந்து வைத்திருந்தார்கள். அந்த அவர்களுக்கு தெரிந்து இருந்தது ‘சே’ என்பது வெறும் பெயர்ச்சொல் அல்ல. அது ஒரு இயக்கம் என்பது. அந்த இயக்கம் குறித்த நம்பிக்கை மக்களிடம் பரவுமென்றால், தாங்கள் பரிதாபமாக தோற்போம் என்பது, அந்த அவர்களுக்கு தெரிந்தே இருந்தது. அதனால், ‘சே’வை யாருக்கும் தெரியாமல் கொன்று புதைத்துவிட வேண்டும் என்று விரும்பினார்கள்.

அவன் புதைக்கப்பட்ட இடம் கூட யாருக்கும் தெரிந்துவிடக் கூடாது என்று நினைத்தார்கள். அப்படி செய்துவிட்டதாக சில காலம் நம்பவும் செய்தார்கள். ஆனால், அவர்கள் நினைத்தது போல் இல்லாமல், ‘சே’ இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறான். அவன் உடல் இவ்வுலகில் நடமாடிய காலத்தைவிட அவன் இன்று உயிர்ப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

அவர்களுக்கு ‘சே’ இன்னும் அச்சமூட்டுபவனாக இருக்கிறான். அவனின் கண்களைக் கண்டு அவர்கள் இன்னும் நடுங்குகிறார்கள். ஆனால், அந்த அவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல. அவர்கள் மீண்டும் ‘சே’ மீது ஒரு தாக்குதல் தொடுக்கிறார்கள். ‘சே’ குறித்த பிம்பத்தை மாற்றத் துடிக்கிறார்கள். அவனை சித்தாந்தமற்ற சாகசக்காரனாக சித்தரித்து, அவனை ஒரு பண்டமாக ஆக்க பார்க்கிறார்கள். சட்டை, தேநீர் கோப்பை, ஏன் பீர் பாட்டில் வரை அவன் படத்தை அச்சடித்து, அவன் முகத்தை காட்டி லாபம் சம்பாதிக்க துடிக்கிறார்கள். அவர்களின் நோக்கம், இதன் மூலம் ‘சே’ முன்மொழிந்த சித்தாந்தத்தை பரவலாக்குவது அல்ல. ‘சே’வின் சித்தாந்தத்தை மங்கலாக்கி, அவனை ஒரு திரைப்பட சாகசக்காரனாக மட்டுமே சித்தரிப்பது.

சிட்னியை சேர்ந்த கட்டுரையாளர் ரேச்சல் ராபர்ட், ‘தன் நெஞ்சில் இல்லாவிட்டாலும், மார்புகளில் சேகுவேரா வசிக்கிறார்’ (Che Guevara lives on, if not in our hearts at least on our chests – Rachel Roberts) என்னும் கட்டுரையில் இவ்வாறாக எழுதுகிறார், ” என்னுடைய சொந்த நகரமான பைரான்பேயில் சேகுவேரா வாழ்ந்து, மூச்சுவிட்டுக் கொண்டிருக்கிறார். நான் வழக்கமாக அவரை பார்க்க முடிகிறது. சில நேரங்களில் இரவில் ரயில்வே பாருக்கு வந்து குடித்துவிட்டு இசையைக் கேட்டுச் செல்கிறார். சில நேரங்களில் நண்பர்களோடு டீக்கடையில் நின்று அரட்டை அடிக்கிறார்.”

இதில் ரேச்சல் குறிப்பிடுவது, ‘சே’ முகம் பதித்த டீ -சர்ட் அணிந்து இருந்தவர்களை.

‘சே’வை ஒரு காலமும் வெல்ல முடியாது என்று முடிவுக்கு வந்த பின், ‘சே’வை அவர்கள் உள்வாங்க துவங்கிவிட்டார்கள். ‘சே’வை உள்வாங்குவது என்றால், அவன் சித்தாந்தத்தை அல்ல… அவனை ஒரு சாகசக்காரனாக சித்தரித்து பணம் பார்ப்பது மட்டும்தான் அவர்கள் நோக்கம். இதன் மூலம் ‘சே’ குறித்த பிம்பத்தை மாற்றிவிட முடியும் என்று நம்புகிறார்கள்.

நாம் அவர்களை புரிந்துகொள்வோம்…

‘சே’ நிச்சயம் ஒரு சாகசக்காரன் அல்ல… நிச்சயம் சித்தாந்தமற்ற சாகசக்காரன், மரணத்தைக் கண்டு அஞ்சுவான். ஆனால் ‘சே’, கொல்லப்படுவதற்கு கொஞ்ச நேரத்திற்கு முன், அவருக்கு அந்தப் பள்ளிக்கூடத்தில் உணவு கொடுத்து பேசிக்கொண்டிருந்த ஆசிரியை ஜூலியஸ் கோர்ட்டஸ் என்னும் பத்தொன்பது வயது பெண்மணியிடம், பள்ளிக்கூடச் சூழலை பார்த்துவிட்டு இவ்வாறாக சொல்கிறான், ‘இதுபோன்ற சூழலில் எப்படி குழந்தைகள் இங்கு படிப்பார்கள்? ஒருவேளை நான் பிழைத்திருந்தால் நான் உங்களுக்கு நல்ல பள்ளிக்கூடம் கட்டித் தருகிறேன்..’ இப்படி நிச்சயம் வெறும் சாகசக்காரனால் பேச முடியாது.

‘சே’ தன் பெற்றோருக்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறாக எழுதி இருக்கிறார், ”பலர் என்னை சாகசக்காரனாக அழைக்கலாம். ஒரு வித்தியாசம். தன்னுடைய நம்பிக்கைகளை உண்மையென்று காட்ட தன்னையே பணயம் வைக்கிற சாகசக்காரன்தான் நான்…”

ஆனால், அவர்கள் ‘சே’வின் நம்பிக்கைகள் என்னவென்று மக்கள் தெரிந்துக் கொள்வதை விரும்புவதில்லை. அவர்களுக்கு ‘சே’வும் ஒரு பண்டம். அவ்வளவே.

‘விளைவுகளை ஏற்படுத்தாத வார்த்தைகள் முக்கியமற்றவை…’ என்பார் சே. அவன் நம்பிக்கையையும், சித்தாந்தத்தையும் புரிந்துகொள்ளாமல் வெறும் டி-சர்ட் அணிந்துகொள்வதால் மட்டும் எதுவும் நடந்துவிடப்போவதில்லை.

எப்படி அவர்கள் நம்மைவிட ‘சே’வை அதிகம் புரிந்து வைத்திருக்கிறார்களோ… அதன் மூலம் ‘சே’வை வீழ்த்த, உள்வாங்க துடிக்கிறார்களோ… நாமும் அதுபோல் அவர்களை அதிகம் புரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் அவர்களை வெல்ல முடியும்!

-மு. நியாஸ் அகமது
விகடன், ஜுன் 6, 2016

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments