
பதினொரு ஆண்டுகள் போய் முடிந்த பின்னாலும் ஈரம் உலராத பொழுதுகள்தான் இப்போதும்.
வள்ளி தெய்வானை என
தோழியர்கள் கூடவர
வெள்ளிமயில் ஏறிவரும் கந்தனவன் சந்நிதியில்,
அருள்வேண்டி, காத்திருந்த பொழுது.
நல்லைத்திருநகரில் தொல்லையகற்றுபவன்
வீதிவலம் வருகின்ற வீதி.
கண்ணில் ஏக்கத்தை கனதியாய் தேக்கிவைத்து
பிள்ளையினைப் பார்த்து தேசம் கலங்கியது.
பதினொரு ஆண்டுகள் போய்முடிந்த பின்னாலும்
ஈரம் உலராத பொழுதுகள்தான் இப்போதும்.
இளமைத் துடிப்பதனை அடக்கி ஒடுக்கி,
ஓர் ஞானக்குழந்தை அடம்பிடித்து.
பட்டினி கிடந்து பாரதத்தை வெற்றிகொள்ள
சாவோடு போராடிச் சாகத்துடித்தது.
எங்கள் மண்ணிலே, முகையவிழ்ந்த முல்லையொன்று,
கந்தவேள் வீதியிலே கடும்தவந்தான் செய்தது.
கள்ளமில்லா மழலையர்தம் கனிவாயில் குடியிருக்கும்
வெள்ளைச் சிரிப்புடனே ஓர் தென்றல் படுத்தது.
பதினொரு ஆண்டுகள் போய்முடிந்த பின்னாலும்
ஈரம் உலராத பொழுதுகள்தான் இப்போதும்.
வானம் பிளந்து மழை பொழிந்தது.
பூமித்தகிப்பை தணிக்கின்ற முயற்சி.
சுற்றிவரக் சூழந்துநின்ற
ஏங்கும் விழிகளிலே
மடையுடைத்துப் பாய்ந்தது வேதனை.
ஆன்மாவைப் பிழிந்து
தேசவிடுதலையின் ஒளிவிளக்கை காக்க நெய்வார்த்த பேரான்மா.
அந்த மெல்லிய தேகம் அசையாமல் கிடந்தது.
அந்த இனிய சிரிப்பும் அழகிழந்து போனது.
அந்த அழகான இதயம் துடிப்படங்கிப்போனது.
ஈரம் சொட்டிய இதயப் பரப்பில் தீயின் விதைப்பு.
உயிர் பிழிந்த அந்தப் பேரான்மா
உயிர் அடக்கி…
தீயை விதைத்தது.
விடுதலைத் தீ!
விழிமடல் உடைத்து அழுத மனங்களிலே விடுதலைத் தீ!
அன்று பற்றிய விடுதலைத் தீ!
இன்றும் எமக்குள்ளே… எமக்கப்பால் நின்று பற்றி எரிகின்ற
பொழுதுகளை
அன்று விதைத்த அருந்தவத்தை..
இன்று நினைத்தாலும் நெஞ்சில் ஈரம்!
கண்களிலும் ஈரம்!
கண்கட்டிக் காட்டுக்குள் விட்ட காலமதாய்
எமக்குள்ளே மயக்கம்.
பாதை தெரியாத குழப்பம்?
பற்றிக் கைபிடித்து பாதையினைக் காட்டிவிட்டு
தீபமென முன்னால் ஒளியாகிக் கரைந்தவனே!
தமிழர் மனங்களிலே கலந்துவிட்டாய்?
விடுதலையின் முகவரியாய்
மலர்ந்துவிட்டாய்!!